சுயமரியாதை இயக்கத்தின் நூற் றாண்டு நிறைவு விழா மாநாடு செங் கல்பட்டு மறைமலை நகரில் அக்.4 அன்று ஒரு நாள் மாநாடாக நடைபெற்றது.
நூற்றாண்டு மாநாட்டின் பெருமை: சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டில் ஒரு நாள் நிகழ்வு என்பது, அதே செங்கல்பட்டில் 1929ஆம் ஆண்டு நடைபெற்ற சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாகாண மாநாடு நூற்றாண்டு காணவுள்ளதோ, அதே போல் 1925இல் தந்தை பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு ஒரு நாள் மாநாட்டின் சிறப்புகளும் இன்னும் ஒரு நூற்றாண்டு வரை புகழின் உச்சியில் நிற்கும் பெருமைக்குரியது.
நூற்றாண்டு விழா மாநாட்டின் நிறைவு நிகழ்வு அக்.4 இரவு நடைபெற்றது.
இம்மாநாட்டிற்கு சுயமரியாதை இயக்கத்தின் தொடர்ச்சியாகிய திராவிடர் கழகம் தந்தை பெரியார் அன்னை மணியம்மையார் ஆகியோர் மறைவுக்கு பிறகு தலைமை ஏற்று கழகத்தை கட்டிக் காக்கும் – எட்டுத் திசையும் பெரியார் கொள்கை முழக்கமிட்டு,
பெரியார் உலகமயம்
உலகம் பெரியார்மயம்
எனும் நிலையை உருவாக்கி, அந்த பெரியார் உலகம் எப்படியிருக்கும் என்பதற்கு ஒரு பெரியார் உலகத்தை மாதிரியாய் மக்கள் மத்தியில் வடிவமைத்திடும் பணியை திருச்சி அருகே சிறுகனூரில் நிர்மாணிக்க உழைத்துக் கொண்டிருக்கும் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் தலைமையேற்று ஆற்றிய உரை, உலகத் தலைவர் பெரியாரின் – ‘பெரியார் உலகின் தலைவரின் – சங்கநாதமாய், சிங்கத்தின் கர்ஜனையாய் இருந்தது.
சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டின் நிறைவுரை – நிறைவான உரையாக இருந்தது.
தமிழ்நாட்டின் முதல்வர் – சுயமரியாதை இயக்கத்தின் அரசியல் வடிவமாய் உருவெடுத்து சாதனை படைக்கும் – திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், ‘சரித்திரம் படைத்த சரித்திர நாயகர்’ முதலமைச்சர் மானமிகு – மாண்புமிகு
மு.க. ஸ்டாலின் அவர்கள் உரை கருத்தியல் பாடமாக எதிரிகளை உறக்கமின்றி உலுக்கிடும் உரையாக அமைந்தது.
சுயமரியாதை இயக்கத்தின் தொடர்ச்சியாம் திராவிடர் கழகத் தோழர்களுக்கு உடலெங்கும் சிலிர்த்திடும் உரையாக இருந்தது.
ஆம், முதலமைச்சர் தனது உரையின் தொடக்கத்தில் 92 வயதில் ஓடிக் கொண்டே உழைக்கும் தமிழர் தலைவர் பிரச்சாரம் – போராட்டம் என்று தொய்வில்லாப் ஆற்றிடும் பணிகளையும் பாராட்டி நன்றி கூறினார். நீங்கள் சுற்றிச் சுழன்று பிரச்சாரம் செய்யுங்கள்; நாங்கள் சட்டம் இயற்றும் – சாதிக்கும் பணியை செய்கிறோம் என்றார்.
பெரியாரின் – சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளை சுமந்து கொண்டு – அதன் வெற்றிக்கு பாடுபடும் கருஞ்சட்டைத் தொண்டர்களைப் பற்றி கூறும்போது, ‘‘பகுத்தறிவு சிந்தனையும் – சுயமரியாதை உணர்வும் கொண்ட ஒரு கருப்புச் சட்டைக்காரர் ஓர் ஊரையே முன்னோக்கி இழுத்துச் செல்லும் ஆற்றல் பெற்றவர்’’ என்றார். அது மட்டுமல்ல, கருப்புச் சட்டைக்காரர்களுக்கு ஒரு சல்யூட்’’ என்றார்.
முதலமைச்சர் வார்த்தையாக – ஒரு சொல்லாக சல்யூட் என்று கூறாது – எப்படையையும் தோற்கடிக்கும் பெரியார் போர்ப்படைத் தளபதியாய் நெஞ்சம் நிமிர்த்தி – பார்வையை நேர் கொண்டு செலுத்தி – கம்பீரக் கரத்தால் சல்யூட் என்ற சொல்லும் – செயலும் வினாடி நேரம் வேறுபாடு இன்றி மின்சார வேகத்தில் நிகழ்த்தி கருஞ்சட்டைத் தொண்டர்களுக்கு செலுத்திய மரியாதை – தொண்டருக்கும் தலைவருக்கும் சுயமரியாதை இயக்கத்தின் மொத்தமும் ஆகி விட்ட தத்துவத் தலைவர் தந்தை பெரியாருக்கு செலுத்திய மரியாதை ஆகும்.
முதலமைச்சர் அடித்த ‘சல்யூட்’ என்பது ஒருதனி மனிதனின் – ஒரு கட்சியின் தலைவரின் – ஒரு தனிப் பட்ட முதலமைச்சரின் ‘சல்யூட்’ அல்ல. எட்டு கோடி தமிழர்களின் சார்பில் – எட்டுத் திக்கும் வாழும் பத்து கோடி தமிழர்களால் அடிக்கப்பட்ட ‘சல்யூட்’ ஆகும்.
உலக வரலாற்றில் கட்சிகளின் வரலாற்றில் ஓர் இயக்கம் அல்லது கட்சியின் தொண்டர்களுக்கு – ஓர் அரசின் தலைமைப் பதவியை அலங்கரிப்போர் ‘சல்யூட்’ செய்த முதல் நிகழ்ச்சியை சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு மாநாட்டில் – ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்த மாநாட்டில் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தொண்டர்களுக்கு சல்யூட் செய்திட்ட நிகழ்வாகும். உலகம் முதன் முதல் சந்தித்த சரித்திரம் படைத்த சல்யூட் ஆகும்.
முனைவர் அதிரடி
க. அன்பழகன்
மாநில அமைப்பாளர்,
கிராமப் பிரச்சாரக் குழு
திராவிடர் கழகம்