ஆளுநர் பதவி பற்றி மறைமலைநகர் மாநாட்டுத் தீர்மானம் (3)

ஆளுநர் ஆர்.என். ரவி வாயைத் திறந்தால் போதும். அத்தனையும் அத்துமீறலாகவும், ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு எதிராகவும், ஹிந்தி எதிர்ப்புக்கு எதிராகவும், மாநில உரிமைக்கு எதிராகவும், எதிர்க்கட்சித் தலைவர் போலப் பேசுவது வாடிக்கையாகி விட்டது.

சில நாள்களுக்குமுன் அவர் பேசிய பேச்சு மறுபடியும் சர்ச்சைப் புயலைக் கிளப்பி விட்டது.

ஏதோ சுவரில் எழுதியிருந்ததாம் ‘தமிழ்நாடு போராடும்!’ என்று எழுதப்பட்டிருந்ததாம்.

அதனை வைத்துதான் ஆளுநர் ஆர்.என்.ரவி ‘யாரை எதிர்த்துப் போராடுகிறீர்கள்?’ என்ற ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறார்.

நமது ஆளுநர் எவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டு இருக்கிறார் என்பதைப் பார்த்தீர்களா? கடுகளவு செய்திக் கிடைத்தாலும் அதனைத் தூணாக்கி, ஆவேசப் புயல் காற்றாகக் கிளர்ந்து எழுதுகிறார்.

ஆர்.எஸ்.எஸின் குரலாகவும், ஸநாதனத்தின் பிரச்சாரகரராகவும், ஆளுநர் பொறுப்பு என்ற மதிப்பிற்கு மாறாகவும், அரசியல் கட்சி மேடைப் பேச்சாளராகவும் பேசிக் கொண்டு இருக்கிறார்.

ஆண்டுக்கு ஓர் முறை ஆளுநர் உரை என்பது ஒவ்வொரு ஆண்டும் சட்டமன்றத்தின் தொடக்க உரையாக அமைவதாகும். அது ஆளுநர் உரை என்று கூறப்பட்டாலும் அது உண்மையில் ஆளுநர் தயாரித்துப் பேசப்படும் உரையல்ல; மாநில அரசின் கொள்கை உரை; திட்டங்கள் சம்பந்தப்பட்ட உரை; உண்மையைச் சொல்லப் போனால் மாநில அரசு தயாரித்துக் கொடுக்கும் உரை; அதை டேப் ரெக்காடர் மாதிரி படித்து ஒப்பு விப்பது தான் சட்ட ரீதியானதும் – மரபு ரீதியானதுமான ஒன்றாகும்.

ஆனால், தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என். ரவி அந்தவுரையில் சிலவற்றைத் தவிர்த்தும், சிலவற்றை இவராகத் திணித்தும், சேர்த்தும் படிப்பார். அதற்கு எதிர்ப்புக் கிளம்பியதும் சட்டமன்றத்தை விட்டே வெளியேறுவார் – இதெல்லாம் அரசியலமைப்புச் சட்டமீறல் இல்லையா?

எதை எல்லாம் எதிர்ப்பார்கள் என்று கேட்கிறாரே ஆளுநர் ஆர்.என். ரவி – முதலில் இவரின் தவறான பேச்சை எதிர்த்து  தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு மக்களும் கேள்வி கேட்க மாட்டார்களா? ஏன், கேள்விக் கணைகளைத் தொடுக்கவும் இல்லையா?

அரசு திருவள்ளுவர் உருவத்தை அதிகாரப் பூர்வமாக வடிவமைத்துள்ளது; அதற்கு எதிராகக் காவி சாயம் பூசிய திருவள்ளுவர் படத்தை ஆளுநர் மாளிகையில் அலங்கரித்துக் காட்சிக்கு வைப்பது எதைக் காட்டுகிறது?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்திற்குத்தான் அதிகாரமே தவிர, அதற்குமேல் ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்று உச்சநீதிமன்றம் உச்சியில் ஓங்கிக் குட்டிய பிறகும், ஆட்சிக்கு எதிரான மனப் போக்கோடு பேசுவதும், செயல்படுவதும் எதைக் காட்டுகிறது?

இவர் ஆளுநர் அல்லர்; ஒன்றிய ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பிஜேபி ஆட்சியின் அதிகாரப் பூர்வமற்ற ‘ஏஜெண்ட்’  என்று நினைக்க எல்லாவிதமான காரணங்களும் கண்டிப்பாக இருக்கவே செய்கின்றன.

ஆதிபகவன் என்று திருவள்ளுவர் கூறியிருக்கிறாராம் – அதைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டு, தனது காவிமய வன்மத்தை வாரிக் கொட்டவில்லையா ஆளுநர் ஆர்.என். ரவி?

திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்த ஜி.யு. போப் குறளைச் சிதைத்து விட்டாராம்.

புரிகிறதா? ஜி.யு.போப் கிறித்தவர், அது ஒன்று போதாதா? சங்கிகள் என்னவெல்லாம் சொல்லுவார்களோ, அதே தோசையைத் திருப்பிப் போடுகிறார் – அவ்வளவுதான்.

‘திருக்குறள் ஞானத்தின் ஊற்று’, நித்திய – ஆன்மிகம், பக்தி, ரிக்வேதம், உலகத்தைப் படைத்தவன் – ஆதிபகவன் என்று பதவுரை, மொழிப்புரை தருகிறார் ஆர்.என்.ரவி.

ரிக் வேதத்தையும், திருக்குறளையும் முடிச்சுப்போடுகிறாரே ஆளுநர் – அந்த ரிக்வேதம் என்ன சொல்லுகிறது?

‘சோம பானத்திற்காக வறண்டு கிடந்த இந்திரனுடைய வயிறு நிறைய சோம பானத்தைக் குடித்ததனால், கடலைப் போல்  நிரம்புகிறது; வி்ண்ணிலிருந்து வரும் அருவிபோல் இந்திரனுடைய வாயிலிருந்து சோம பானம் வழிகிறது’’ (ரிக்வேதம் – சுலோகம் 77).

இதுதான் இந்திரனின் யோக்கியாம்சம்?

‘அக்னியே, நீ ஒளிப் பிழம்பாக உயர்ந்து, அவனுடைய எதிரிகளாகிய கருப்பர்களின் கோட்டைகளை எரித்தாய். கருப்பர்கள் பயந்து, அவர்களுடைய சொத்துக்களையெல்லாம் அப்படியே விட்டுவிட்டு, அந்நிய தேசங்களுக்குச் சிதறி ஓடி விட்டார்கள்’’ (ரிக்வேதம் – சுலோகம் – 5192)

‘அக்னியே, நீ உனது தீப்பிழம்பை உயர்த்து. ஆரியர்களாகிய எங்களுக்காக, தஸ்யூக்களை – கருப்பர்களை அவர்களுடைய இல்லங்களிலிருந்து துரத்தி அடிக்கவும். (ரிக்வேதம் – சுலோகம் 5195)

ரிக்வேதத்தி்ல் கூறப்படும் இந்த தஸ்யுக்கள்; அசுரர்கள், கருப்பர்கள் யார்? வரலாற்று ஆசிரியர் டாக்டர் ராதா குமுத முகர்ஜி எம்.ஏ., பி.எச்.டி., எழுதிய ‘இந்து நாகரிகம்’ பக்கம் 62 என்ன கூறுகிறது? இதோ!

‘ஆரியரல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர் (சூத்திரர்)கள் என்றும், அசுரர்கள், தஸ்யூக்கள் என்றும்  கூறப்பட்டிருக்கிறது. ஆரியருக்கும், ஆரியரல்லாதவர்களுக்கும் இருந்து கொண்டிருந்த அடிப்படையான பகையைப்பற்றி ரிக் வேதத்தில் பல இடங்களில் காணலாம். இரு வகுப்பாருக்கும் இருந்த  கலை வேற்றுமையும், அரசியல் வேற்றுமையுமே,  இந்தப் பகைக்குக் காரணம்’’ என்று வரலாற்று ஆசிரியர் டாக்டர் ராதா குமுத முகர்ஜி கூறியது உணர்த்துவது என்ன?

திருக்குறளோடு, ரிக் வேதத்தை ஒப்பிடுவது தவறு என்பதோடல்லாமல,் ரிக்வேத்தைத் தூக்கிப் பிடிக்கிறார் ஆளுநர் என்றால், அதுவும் ‘திராவிட மாடல்’ அரசை எதிர்க்கிறார் என்றால் அதன் சூட்சமம் புரிந்து கொள்ளத்தக்கதே!

ஆரிய எதிர்ப்புக் குறித்து ரிக் வேதம் பேசுவதையும் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

‘தமிழ்நாடு யாருடன் போராடும்?’ என்ற கேள்வியை எழுப்பும் ஆளுநருக்கு, அவர் எடுத்துக்காட்டும் ரிக்வேதமே பதி்ல் சொல்லுகிறதே!

ஆளுநர் மாளிகை சமூக வலைதளத்தில் (4.5.2025) முகப்புப் பக்கத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி எழுதியது என்ன?

‘திராவிட மாடல்’ செத்துப் போன மாடல்’ என்று எழுதிடவில்லையா?

இப்படி எல்லாம் பேசுகின்றவர்களை நோக்கி கேள்விகளை எழுப்பக் கூடாதா?

மாநில அரசின் நிதி உதவியால் இயங்கும் ஆளுநர் மாளிகை  – ஆர்.எஸ்.எஸ். பாசறையாக மாறினால் கேள்விகள் எழத்தான் செய்யும்.

இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டுதான் மறைமலை நகரில் கடந்த 4ஆம் தேதி நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாடு கீழ்க்கண்ட தீர்மானத்தை நிறைவேற்றியது.

‘‘பிரிட்டீஷாரால் நிருவாக வசதிக்காக அக்காலத்தில் உருவாக்கப்பட்ட ஆளுநர் பதவி – ஜனநாயக ஆட்சிக்கு விரோதமானது என்பதால், ஆளுநர் பதவியை நீக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வருமாறு ஒன்றிய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது. மாநில அரசுகளும்  இந்த வகையில் ஒன்றிய அரசை வலியுறுத்தும் வகையில் சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமாய் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது’’ என்பது தான் அந்தத் தீர்மானம்.

மக்களாட்சி நடைபெறும் நாட்டில் ஆளுநர் பதவி என்பது தேவையற்ற ஒன்றே!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *