சென்னை, அக்.7- சோபா, கட்டில், துணி உள்ளிட்ட பழைய பொருட்களை மாநகராட்சி பணியாளர்கள் நேரடியாக வந்து பெற்று கொள்ளும் புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பழைய பொருட்கள்
சென்னை மாநகராட்சி பகுதிகளில் நாள் தோறும் 6 ஆயிரத்து 400 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இவை பெருங்குடி, கொடுங்கையூர் ஆகிய குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பயோ மைனிங் முறையில் அகற்றப்படுகிறது. இதற்கிடையே, வீடுகளில் குப்பை சேகரிக்க செல்லும் ஊழியர்களிடம் சேதம் அடைந்த பழைய சேர்கள் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்கள் வழங்குகிறார்கள்.
இதை பெறுவதில் குப்பை சேகரிக்கும் பணியாளர்கள் சிரமத்தை சந்தித்து வந்தனர். இதேபோல, வீடுகளை காலி செய்யும் போது தேவையில்லாத கட்டில், சோபா, மர இருக்கை, பழைய துணி, கட்டில், மெத்தை படுக்கைகள், மின்னணு கழிவுகள் ஆகியவற்றை குப்பைத் தொட்டிகளில் வீசிவிட்டு செல்கிறார்கள். இதுகுறித்து மாநகராட்சிக்கு பல்வேறு புகார்கள் சென்றது.
நேரடியாக பெற்றுக்கொள்ளும்
இந்த நிலையில், சென்னையில் வசிக்கும் பொதுமக்கள், தங்கள் வீடுகளில் தேங்கிக் கிடக்கும் பயன்படுத்த முடியாத அல்லது தேவையற்ற பழைய பொருட்களைச் சேகரித்து அகற்றுவதற்கு ஒரு புதிய சேவையை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் வீடுகளில் உள்ள தேவையற்ற சோபா,படுக்கைகள், துணிகள் போன்றவற்றை வாகனங்கள் மூலம் மாநகராட்சி ஊழியர்கள் வாகனங்கள் மூலம் சேகரிப்பார்கள்.
இதற்காக 1913 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். 9445061913 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும், நம்ம சென்னை செயலியிலும் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை பதிவு செய்யலாம். இது சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு தெரிவிக்கப்படும்.
அதன் பின்னர், மாநகராட்சி ஊழியர்கள் தனி வாகனத்தில் கோரிக்கை வைத்த வீட்டுக்கு நேரடியாக சென்று தேவையற்ற பொருட்களை பெற்றுக்கொள்வார்கள். இதையடுத்து, சேகரிக்கப்பட்ட பொருட்கள் மாநகராட்சியால் பாதுகாப்பாக எரிக்கப்படும். சென்னையைத் தூய்மையாக வைத்திருக்க பொதுமக்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
கரூர் சம்பவம்:
சமூக வலைதளங்களில் நீதிபதி குறித்து அவதூறு
அ.தி.மு.க., த.வெ.க. கட்சியை சேர்ந்த 4 பேர் கைது
ஆலந்தூர், அக்.7- கரூர் சம்பவம் தொடர்பாக நீதிபதி குறித்து சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பியதாக அ.தி.மு.க. மற்றும் தவெ.க.வினர் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
நீதிபதி குறித்து அவதூறு
கரூரில் கடந்த மாதம் 27-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் தொடர்பாக வதந்தி பரப்புவோர் மற்றும் அவதூறு கருத்துகளை பதிவிடுவோர் மீது தமிழ்நாடு காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக ஏற்கனவே 25 சமூக வலைதள கணக்காளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, த.வெ.க. தலைவர் விஜய் குறித்து கண்டனங்களை முன்வைத்தார். இதனால் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குறித்து சிலர் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பரப்பி வந்தனர்.
4 பேர் கைது
இது தொடர்பாக பரங்கிமலையில் சென்னை தெற்கு மண்டல சைபர் குற்றப் பிரிவு காவல்துறை ஆய்வாளர் சுஜாதா தலைமையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து நீதிபதிகள் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்த சென்னையை அடுத்த அஸ்தினாபுரம் பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப குழுவைச் சேர்ந்த சசி என்ற சசிகுமார் (48), த.வெ.க தகவல் தொழில்நுட்ப குழுவைச் சேர்ந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் (25), கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த டேவிட் (25), தூத்துக்குடி வேம்பூரைச் சேர்ந்த அந்தோணி சகாய மைக்கேல்ராஜ் (35) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
கைதான 4 பேரும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வருகிற 17-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
சமூகவலைதளங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், கரூர் துயரம் குறித்தோ அல்லது நீதிபதிகள் குறித்தோ அவதூறு கருத்துகள் தெரிவிக்கும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் சைபர் குற்றப் பிரிவு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.