நோபல் பரிசு அறிவிக்கப்படும் வேளையில், ஸ்வீடனில் உள்ள நோபல் பரிசு குழுவினர் விருது பெறுபவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மகிழ்ச்சியான செய்தியை அறிவிப்பார்கள். அப்போது, விருது பெறுவது குறித்து அவர்கள் எப்படி உணர்கிறார்கள் என்பது உள்ளிட்ட இரண்டு நிமிட உரையாடலில், அவர் களின் கண்டுபிடிப்புகள் தொடர்பாக ஒரு சில கேள்விகளும் இடம்பெறும்.
2025 ஆம் ஆண்டிற்கான உடலியல் அல்லது மருத்துவத் துறையில் நோபல் பரிசு பெற்ற மூவரில் ஒருவர், அமெரிக்காவைச் சேர்ந்த மேரி ஈ. ப்ரங்கோ என்ற பெண்மணி.
இவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, நோபல் பரிசு குழுவின் ஆடம் ஸ்மித், சிரித்தபடி, “இது உங்களுக்கு காலை வேளையாக இருக்கும் என்று நினைக்கிறேன். எங்கே இருக்கிறீர்கள்? சமையல் அறையிலா?” என்று கேட்டார்.
அதற்கு அவர், “இல்லை, உணவு மேசை யில் இருக்கிறேன்” என்று பதிலளித்தார்.
இது மிகவும் சாதாரணமான கேள்வி யாகத் தோன்றலாம். ஆனால், நோபல் பரிசு பெறும் அளவிற்கு ஆராய்ச்சி செய்யும் ஒரு பெண்மணி காலை வேளையில் சமையல் அறையில்தான் இருக்க வேண்டுமா என்ற கேள்வி என் மனதில் எழுந்தது.
பொதுவாக, மேற்கத்தியர்கள் நல்ல இங்கிதத்துடன் கேள்விகளை மிகவும் கவனமாகக் கேட்பவர்கள். இருப்பினும், அவர்களுக்கே சில நேரங்களில் இப்படி அடி சறுக்குவதுண்டு. இந்தியர்களைப் பற்றி பேசவே வேண்டாம்!
சில ஆண்டுகளுக்கு முன்பு, மாண்புமிகு கனிமொழி எம்.பி. அவர்களிடம் ஒரு பத்திரிகையாளர் நேர்காணலில் கேட்டார்:
“நீங்கள் நன்றாக சமைப்பீர்களா?” அதற்கு அவர், “இதே கேள்வியை நீங்கள் ஏன் ஒரு ஆண் எம்.பி.யிடம் கேட்பதில்லை?” என்று பதிலளித்தார்.இதைப் பார்க்கும்போது, “பெரியார் ஏன் உலகமயமாக வேண்டும்” எனத் தோன்றியது.