உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது காலணி வீச்சா?
ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால் தொடர்ந்து அவருக்கு அவமதிப்புகள் செய்யப்படுவதா?
தமிழர் தலைவர் ஆசிரியரின் கண்டன அறிக்கை
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது காலணி வீச்சா? ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால் தொடர்ந்து அவருக்கு அவமதிப்புகள் செய்யப்படுவதா? நீதித்துறையை அச்சுறுத்தும் ஸநாதனவாதிகளின் அராஜகம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள கண்டன அறிக்கை வருமாறு:
இன்று (6.10.2025) உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, மாண்பமை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அவர்கள் மீது காலணி வீச முயற்சிக்கப்பட்டுள்ளது.
காலணி வீச முயன்ற வழக்குரைஞர் ராகேஷ் கிஷோர் என்பவர் “ஸநாதன தர்மத்துக்கு இழுக்கு ஏற்படுவதை அனுமதிக்க முடியாது” என்று கூச்சலிட்டபடி இச் செய்கையில் ஈடுபட்டுள்ளார்.
ஸநாதன ஹிந்துத்துவக் கும்பலின் செயல்கள் எவ்வளவு கீழிறக்கத்துக்கும் செல்லும் என்பது நமக்குப் புதிதல்ல. ஆனால், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவியேற்றது முதல் மாண்பமை பி.ஆர்.கவாய் மீது வன்மத்தைக் கக்கியபடியே இருக்கின்றனர். ஒடுக்கப்பட்ட சமூகத்தவராகவும், முற்போக்குச் சிந்தனை படைத்தவராகவும் திகழும் மாண்பமை நீதிபதி பி.ஆர்.கவாய் அவர்கள் பதவி யேற்ற பின் முதல்முறையாக மகாராட்டிரத்துக்குப் போயி ருந்தபோதும், அரசு முறைப்படி அவருக்குத் தரப்பட வேண்டிய மரியாதையைத் தராமல் அவமதித்தனர்.
அவர் முறையாக அரசியலமைப்புச் சட்டப்படி நடக்கிறார் என்றதும் ஹிந்துத்துவ பாசிச சக்திகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அந்தக் காலணி அவர் மீது மட்டும் வீசப்பட்ட காலணி அல்ல; இந்திய நீதித்துறையை அச்சுறுத்துவதற்காக வீசப்பட்ட காலணி ஆகும்.
தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அவர்கள் அடுத்த மாதம் ஓய்வு பெறவிருக்கிறார். அவருக்குப் பின்னும் வருவோரை அச்சுறுத்தவே இந்த முயற்சி!
பின்னணியில் இருக்கும் அமைப்புகள் எவை?
நீதிபதிகளே ஆயினும் தங்கள் ஆதிக்கத்துக்கு எதிராக எதையும் நீதிமன்றங்கள் செய்தால், அவர்களை அவமானப்படுத்துவோம் என்று அச்சுறுத்தும் இந்தச் செயல் தனிப்பட்டது அல்ல; இதன் பின்னணியில் இருக்கும் அமைப்புகள் எவை என்பதைக் கண்டு பிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனால், மிகுந்த பெருந்தன்மையுடனும், பொறு மையுடனும் “கவனத்தைச் சிதறவிடாதீர்கள்; இது என்னைப் பாதிக்காது” எனக் கூறி, எந்த பரபரப்பும் இன்றி வழக்குரைஞர்களிடம் வாதங்களைத் தொடரு மாறு கேட்டுக்கொண்ட பக்குவமும், பெருந்தன்மையும், எத்தனையோ அவமதிப்புகளைச் சந்தித்து, உயர்ந்த நிலைக்கு வந்திருப்பவர் அவர் என்பதற்குச் சான்று ஆகும்.
’ஸநாதன அவமதிப்பு’ என்ற கூக்குரல் மூலம் இதன் பின்னணியில் எந்தத் தத்துவம் இருக்கிறது என்பது மிக வெளிப்படையாகத் தெரிந்துவிட்டது.
கடும் கண்டனத்துக்கு உரியதாகும்!
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் மீதான இந்த அவமதிப்பு முயற்சி கடும் கண்டனத்துக்கு உரியதாகும். நீதித் துறையை அச்சுறுத்தும் போக்கு ஒரு போதும் பொறுத்துக் கொள்ள முடியாதது.
இந்த அநாகரிக, ஜாதித் திமிர் பிடித்த ஸநாதன வாதிகளை மக்கள் அடையாளம் கண்டு ஒதுக்கித் தள்ள வேண்டும்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
6.10.2025