செய்தியை வெளிக்கொணர்ந்த இரண்டு பத்திரிகையாளர்கள்மீது வழக்குத் தொடுத்த உ.பி. அரசு!

5 Min Read

ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. ஆட்சியின் அவலம் பாரீர்!
முஸ்லிம் பெண் என்று காரணம் சொல்லி, நிறை மாத கர்ப்பிணிக்கு மருத்துவம் செய்ய மறுத்த உ.பி. அரசு மருத்துவர்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

உ.பி. அரசு மருத்துவர் ஒருவர், ‘‘முஸ்லிம் பெண்’’ என்று காரணம் சொல்லி, நிறை மாத கர்ப்பிணிக்கு  மருத்துவம் செய்ய மறுத்த செய்தியை வெளிக் கொணர்ந்த இரண்டு பத்திரிகையாளர்களின்மீது உ.பி. அரசு வழக்குத் தொடுத்துள்ளது.   ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. ஆட்சியின் அவலம் பாரீர்  என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:

‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ்.; இதுதான் பா.ஜ.க. ஆட்சி! இதுதான் திராவிடம்; இதுதான் ‘திராவிட மாடல்’ ஆட்சி!’’ என்ற தலைப்பில், மக்களுக்குப் புரிய வைக்கும் பெரியதொரு பிரச்சாரப் பெருமழை அடைமழையாக நடத்தப்படவுள்ளது. தமிழ்நாட்டு இளைய தலைமுறை, மகளிர் முதலிய பலருக்கும் விளக்கப்படுத்த, நாம் பெரிய ஆய்வுக் கூடங்களைத் தேடி ஓடவேண்டிய அவசியமில்லை.

ஒரு சிறு  எடுத்துக்காட்டு!

இதோ ஒரு நடப்பில், சில நாள்களுக்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் உ.பி.,யில் ஓர் எடுத்துக்காட்டு! அதில் ‘எங்களாட்சி, எங்களால் நியமிக்கப்பட்டவர்’ என்று ஆர்.எஸ்.எஸ்.  பெரு மைப்படும் முதலமைச்சர்! தனக்கென தனி ஒரு சேனையை வைத்துக்கொண்டு, அக்கட்சித் தலைவர்களையே அடங்கிப் போக வைத்துக் கொண்டி ருக்கும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சி – அரசியலமைப்புச் சட்டத்தினைத் தூக்கி எறிந்துவிட்டு, ‘புல்டோசர்’மூலம் ஆட்சி, அதிகாரம் செய்யும் ‘டபுள் எஞ்ஜின் ஆட்சி’யாகும். இத்தகைய  ஆட்சி  வாக்களித்த மக்களை வெறுப்புக்குரியவர்களாக வேற்றுமைப்படுத்தி, கொடுமையாக – பச்சாதாபமோ, மனிதநேயமோ சிறிதுமின்றி நடத்தி, மக்களை எப்படி அவதிக்கு ஆளாக்குகிறது என்பதற்கு ஒரு சிறு சாம்பிள் – எடுத்துக்காட்டு இதோ!

ஆசிரியர் அறிக்கை

முஸ்லிம்களுக்கு மகப்பேறு பார்ப்பதில்லையாம்!

நிறை மாத கர்ப்பிணியான ஷாமா பர்வீன் என்ற இஸ்லாமியப் பெண், உத்தரப்பிரதேச மாநிலம், ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள பெண்கள் அரசு மருத்துவமனைக்குப் போய், தனக்கு சிகிச்சை அளிக்கவேண்டுமென்று அங்கு பணிபுரியும் பெண் மருத்துவரிடம் கேட்டபோது, அந்தப் பெண் மருத்துவர், ‘‘நீ முஸ்லிம்; நான் முஸ்லிம்களுக்கு மகப்பேறு பார்ப்ப தில்லை’’ என்று கூறி, இரவு 9.30 மணிக்குத் திருப்பி அனுப்பிவிட்டார்.

இதேபோல் மற்றொரு முஸ்லிம் நபருக்கும் சிகிச்சை யளிக்க மறுத்துவிட்டார். அங்கு பணியிலிருக்கும் நர்சைப் பார்த்து கடுமையாக, ‘‘இது மாதிரி (முஸ்லிம்) நபர்களை ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்து வராதே; வேறு யாரிடமாவது அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கச் சொல்’’ என்று  அந்த மகப்பேறு மருத்துவர், மருத்துவம் செய்யமாட்டேன் என்று கூறிய தாக காட்சிப் பதிவுகள் உலா வருகின்றன.

‘ஹிந்து’ நாளேட்டின் செய்தியாளர் அந்த மருத்து வரைச் சந்தித்து, ‘‘இது உண்மைதானா?’’ என்று கேட்கச் சென்று முயற்சித்தபோது, அந்த மருத்துவர் கிடைக்க வில்லை.

இப்படி ஒரு செய்தி நேற்றைய (6.10.2025) ‘தி ஹிந்து’  ஆங்கில நாளேட்டின், 10 ஆம் பக்கத்தில் வெளிவந்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான
இம்ரான் மசூத், அப்சல் அன்சாரி கண்டனம்!

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மசூத், இதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

உ.பி. சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அப்சல் அன்சாரியும், ‘இதுபற்றி ஒரு முழு விசாரணை நடத்தி, பரிகாரம் தேடவேண்டும்’ என்று கூறியிருக்கிறார். ‘உச்சநீதிமன்றம் போன்றவை இதனைத் தாமே முன்வந்து வழக்கெடுத்து நீதி வழங்க முன்வரவேண்டும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்தின் உறுதிகள் – சமூக, பொருளாதார, அரசியல் நீதிகள் அங்கே ஜாதி, மத வேறுபாடின்றி கிடைக்கவேண்டாமா?

இதற்குமுன் அதே உ.பி.யில் ஒரு பள்ளி ஆசிரியர், ஒரு மாணவனிடம், ‘‘உனக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க முடியாது’’ என்று சொல்லி, அந்த மாணவனை வெளியே தள்ளிய செய்தியும் வரவில்லையா?

இன்று (7.10.2025) ஆங்கில நாளேடுகளில் வந்துள்ள ஒரு செய்தி.

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள சிட்லா மாதா பஜாரில், முஸ்லிம் சமூகத்தினர் அக்டோபர் 25 ஆம் தேதிக்குள் சந்தையை விட்டு வெளியேற வேண்டும் என்று வலதுசாரி அமைப்பான இந்து ரக்ஷக்கின் தலைவரும் இந்தூர் பாஜக பிரிவு துணைத் தலைவருமான அக்லவ்யா கவுர் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளாராம். மத்தியப் பிரதேசமும் பா.ஜ.க ஆளும் மாநிலமே! இந்தியா என்பது மதச்சார்பற்ற நாடு என்பதையும், ஜனநாயகக் குடியரசு என்பதையும் மறந்து, ஹிந்துத்துவ சக்திகள் கொட்டமடிக்கும் கொடிய நிலை பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் விரவிக் கிடக்கிறது.

வெறுப்பு அரசியல்!

நாம், 21 ஆம் நூற்றாண்டில்தான் வாழுகிறோமா? வெறுப்பு அரசியலை இப்படி சிறிதும் கூச்சநாச்சமின்றி நடத்துவதுதானே ஹிந்துத்துவா! ஹிந்துராஷ்டிரம் அமுலாகிவிட்டது என்று கூறும் இவர்களின் ஆட்சியில் கும்பமேளா நெரிசலில் பல உயிர்கள் மாண்டாலும் (அவர்களும் ஹிந்துக்கள்தான்) அதுபற்றி நீதி விசார ணையோ, நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை அனுப்பியோ அறிக்கை வாங்கிய நடவடிக்கையோ உண்டா?

ஆனால், ‘திராவிடம்’ எப்படி?

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’

‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’

‘அனைவருக்கும் அனைத்தும்’

இதுதான் மானிடப் பற்றையே கொள்கையாகக் கொண்ட திராவிடம்!

அனைவருக்கும் சம நீதி, சம வாய்ப்பு, சம உரிமை தருவதுதான் ஒப்பற்ற ‘திராவிட மாடல்’ ஆட்சி!

இதை உறுதிப்படுத்தும் வகையில்தான்  ‘எல்லாருக்கும் எல்லாம் தரும்’ ஆட்சியாக இது நடக்கிறது. ‘நமக்கு வாக்களித்தவரா? வாக்களிக்காதவரா?’ ‘இவர் நம் கட்சியா? எதிர்க்கட்சியா?’ என்று பேதப்படுத்தாமல்,  ‘அனைவருக்கும் அனைத்தும்’, ‘போற்றுவோர், தூற்று வோர்’ என்று கூடப் பார்க்காது, சமன் செய்து சீர்தூக்கும் துலாக்கோல்போல, மக்களை மதம், ஜாதி, கட்சிப் பிரிவுகளாகப் பார்க்காமல், அனைவருக்கும் சம நீதி, சம வாய்ப்பு, சம உரிமை தருவதுதான் ஒப்பற்ற ‘திராவிட மாடல்’ ஆட்சி! அதன் ஆளுமைமிகு முதலமைச்சர் – மாண்பமை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் சிறப்புமிகு ஆட்சி!

என்னருந் தமிழ்நாட்டோரே,
புரிந்துகொள்ளுங்கள்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள டாக்டர்கள், ‘இப்படி சிகிச்சை அளிக்க மறுப்பது மனிதநேயமல்ல’ என்ற வாதம் முக்கியம்தான் என்றாலும், சட்டப்படி அவர்கள் மருத்துவத்தைத் தொடங்குமுன் எடுத்த ஹிப்போகிரட்டிக் உறுதிமொழி (Hippogratic Oath) என்பதற்கே, இத்தகைய நடவடிக்கை எதிரானது என்பதால், மெடிக்கல் கவுன்சில் போன்ற அமைப்புகள் தாமே முன்வந்து விசாரித்து,  அது உண்மை என்று தெரிந்தால், அத்தகையவர்களின் தொழில் உரிமையைப் பறிக்கவேண்டாமா?

இரண்டு பத்திரிகையாளர்கள்மீது
உ.பி. அரசு வழக்கு

இந்த உண்மையை வெளிக்கொணர்ந்த மாயன்க் சிறீவத்சவா, முகமது உஸ்மான் ஆகிய இரண்டு பத்திரி கையாளர்கள்மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாம் உத்தரப்பிரதேச அரசு!

மவுனம் – அச்சம் அதுதான் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. ஆட்சி என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்!

இதுபோன்று தமிழ்நாட்டிலும் 2026 இல் வர வேண்டுமா? எண்ணிப்பாருங்கள்!

ஏமாறலாமா, என்னருந் தமிழ்நாட்டோரே?

கி.வீரமணி
  தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
7.10.2025

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *