சென்னை, அக். 6- கரூரில் நடிகர் விஜய் நடத்திய பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவம், நாடு முழுவதும் அதிர் வலைகளை ஏற்படுத்தி உள்ளது. எனவே தமிழ்நாடு அரசு அரசியல் கட்சி கூட்டங்கள் மற்றும் பெரிய பொதுக்கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
அதன்படி தற்போது அதற்கான விதிமுறைகளை வகுக்கும் பணி தொடங்கி உள்ளது. அதன்படி பல்வேறு விவகாரங்களை அரசு பரிசீலித்து வருகிறது. இதுதொடர்பாக மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘இனி எந்த அரசியல் கட்சி கூட்டத்திலும் ஒரு உயிர் கூட பலியாகக் கூடாது என்பதனை அடிப்படையாகக் கொண்டு அரசு கடும் விதிமுறைகளை அமல்படுத்த முடிவு செய்துள்ளது’ என்றார்.
அதன்படி அரசு திட்டமிட்டுள்ள கட்டுப்பாடுகள் விவரம் வருமாறு:-
எந்தக் கட்சியும், அமைப்பும், பெரிய கூட்டம் நடத்தும் முன்பாக காவல்துறையிடம் முறையான அனுமதி பெற வேண்டும். மேலும் கூட்டம் நடைபெறும் இடம், கூட்ட நேரம், எவ்வளவு பேர் வருவார்கள், மேடை அமைப்பு போன்ற முழு விவரங்களும் முன்கூட்டியே கொடுக்கப்பட வேண்டும். இது இப்போதே நடைமுறையில் இருந்தாலும் அதில் பல்வேறு கடுமையான மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளன. ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஏற்பாட்டாளர்கள் பாதுகாப்பு திட்ட அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அதில் நுழைவு-வெளியேற்றம், மருத்துவம், காவல், போக்குவரத்து உள்ளிட்ட விவரங்கள் இருக்க வேண்டும்.
அவசர கால வசதி
* கூட்டம் எவ்வளவு நேரம் நீடிக்க வேண்டும் என்ற வரம்பை அதிகாரிகள் முன்கூட்டியே நிர்ணயிப்பார்கள். அதற்கும் மேல் நீட்டிக்க அனுமதிக்கக் கூடாது.
* மிகப்பெரிய கூட்டங்களுக்கு அனைத்து ஏற்பாடுகளும் சரியாக உள்ளனவா என்று மாவட்ட ஆட்சியர் அல்லது அவருக்கு இணையான அதிகாரிகள் தலைமையில் ஆய்வுக்குழு சான்றிதழ் வழங்கிய பிறகே கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்படும்.
* சாலைகளில் கூட்டம் நடத்து வதற்கு தடை. காலி இடங்களில் மட்டுமே கூட்டம் நடத்த வேண்டும்.
* ஒவ்வொரு இடத்துக்கும் எத்தனை பேர் கூடலாம் என்ற எண்ணிக்கையை அதிகாரிகள் முடிவு செய்வார்கள். அந்த அளவை மீறக்கூடாது. அதற்கு மேல் கூட்டம் வந்தால் அவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள்.
* கூட்டம் நடைபெறும் இடத்தில் குறைந்தது இரண்டு அவசர வெளியேறும் வாயில்கள் கட்டாயம் அமைக்க வேண்டும். தடுப்பு வேலி, பாதை வழிகாட்டும் பலகைகள், அவசர கால வசதி போன்றவை முன்கூட்டியே செய்யப்பட வேண்டும்.
* மருத்துவக்குழு, ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் போன்றவை நிகழ்ச்சி இடத்துக்கு அருகிலேயே இருக்க வேண்டும்.
* பெரிய கூட்டங்களுக்கு கூடுதல் காவல்துறை படையினர் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு, அது சம்பந்தப்பட்ட கட்சியினரிடம் வசூல் செய்யப்பட வேண்டும்.
கட்டுப்பாட்டு அறை
* கூட்டம் நடைபெறும் இடத்தில் கட்சிகள் சார்பில் தன்னார்வலர்கள் நியமிக்க வேண்டும். அவர்கள் அனைவரும் ஒரே சீருடையில் இருக்க வேண்டும்.
* எந்த கூட்டம் என்றாலும் கழிப்பறை, குடிநீர் வசதி செய்ய வேண்டும்.
* கூட்டம் நடைபெறும் இடத்தில், சில மணி நேரத்திற்கு முன்பாக மட்டுமே மக்கள் அனு மதிக்கப்படுவார்கள்.
* தலைவர்கள் சொன்ன நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் மட்டுமே பின்னதாக வரலாம். அதற்கு மேல் காலம் தாழ்த்தினால் கூட்டம் ரத்து செய்யப்படும்.
* கூட்டத்தை முழுவதுமாக சி.சி.டி.வி. கேமராக்கள் மற்றும் டிரோன்கள் மூலம் கண்காணிக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட கட்சியினர் செய்ய வேண்டும். ஆனால் கண்காணிப்புப் பணி அனுமதியை காவல்துறையினரும் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.
* கூட்டம் நடைபெறும் இடத்தில் ஒரு “கட்டுப்பாட்டு அறை” அமைக்கப்படும். அங்கிருந்து தகவல்கள் உயரதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.
* கூட்டம் நடைபெறும் இடத்தை அடைய வரும் சாலைகளில் வாகன நிறுத்த வசதி தனியாக ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
தனி இடம்
* கூட்டத்தில் அதிக சத்தம் உண்டாக்கும் ஒலிக் கருவிகள், அசம்பாவிதம் உண்டாக்கும் பட்டாசுகள், அபாயகரமான பொருட்கள் கொண்டு வரக்கூடாது.
* மேடையின் அருகில் அத்துமீறி நுழைவதைத் தடுக்க தனி பாதுகாப்பு வளையம் அமைக்க வேண்டும்.
* கூட்டத்தில் பெண்கள் சிக்காமல் இருக்க ஏற்பாட்டாளர்கள் தனி ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அதாவது அவர்களுக்கு என்று தனி இடம் ஒதுக்க வேண்டும்.
* கூட்டத்தில் 12 வயதுக்குட் பட்ட குழந்தைகளும், வயதான முதியவர்களும் கலந்து கொள்வதற்கு தடை.
* கூட்டத்தில் விபத்து, உயிரிழப்பு போன்றவை ஏற்பட்டால் ஏற்பாட்டாளர்களே முழுப் பொறுப்பை ஏற்க வேண்டும்.
சுத்தம் பொறுப்பு
* அனுமதி அளிக்கப்பட்ட கூட்டத்தில் விதிமுறைகள் மீறப்பட்டால், அந்த கூட்டத்திற்கு அனுமதிக்கப்பட்ட அனுமதி உடனடியாக ரத்து செய்யப்படும்.
* கூட்டம் முடிந்தவுடன், ஓவ்வொரு பகுதியாக மட்டும் மக்கள் வெளியேற அனுமதிக்கப்படுவார்கள். மொத்தமாக வெளியேறினால் நெரிசல் ஏற்படும் என்பதால் இந்த நடவடிக்கை.
* கூட்டத்தில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், கழிவுகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும். கட்சி ஏற்பாட்டாளர்கள் சுத்தம் செய்யும் பொறுப்பை ஏற்க வேண்டும்.
மேற்கூறப்பட்ட இந்த கட்டுப் பாடுகள் குறித்து தமிழ்நாடு அரசு அரசியல் கட்சிகளிடம் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளது. மக்களிடமும் கருத்து கேட்கப்பட உள்ளது. அடுத்தாண்டு தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த கட்டுப்பாடுகளை விரைவில் அமலுக்கு கொண்டுவர தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.