வாசிங்டன், அக். 6- அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மய்யமான நாசா ஆராய்ச்சி யாளர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள விண்வெளி ஆய்வாளர்கள், வளிமண்டலத்தில் உள்ள கோள்கள் பற்றி தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரு கின்றனர்.
அந்த வகையில் கடந்த 2008ஆம் ஆண்டு புதிய கோள் ஒன்றை கண்டுபிடித்தனர். அந்த கோளுக்கு ‘சா 1107 - 7626’ என்று பெயர் சூட்டினார்கள். வழக்கமாக ஒரு கோள் என்பது ஏதாவது ஒரு நட்சத்திரத்தை சுற்றி வரும்.
நாம் வாழும் பூமி எனப்படும் கோளானது, சூரியன் என்ற நட்சத்திரத்தை சுற்றி வருகிறது. ஆனால் புதிதாக கண்டுபிடிக் கப்பட்ட கோளானது எந்த ஒரு நட்சத்திரத்தையும் சுற்றாமல் தனித்து உள்ளது.
மேலும், இந்த கோளானது வளி மண்டலத்தில் தூசு மற்றும் மற்ற பொருட்களின் மோதல்கள் காரணமாகவோ அல்லது அந்த பொருட்கள் ஒன்றாக இணைவதன் மூலமாகவோ உருவாகவில்லை என்பதை விஞ்ஞானிகள் ஏற்கனவே கண்டுபிடித்தனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த கோளானது கிடைத்த பொருட்கள் அனைத் தையும் விழுங்கி வருகிறது. இப்படி அனைத்துப் பொருட்களையும் விழுங்கும் வகையில் இந்த கோள் இருப்பது விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த கோள் ஒவ்வொரு வினாடியும் தனது சுற்றுவட்ட பாதையில் உள்ள 600 கோடி டன் தூசி மற்றும் வாயு பொருட்களை விழுங்கி வருகிறது. இந்த கோள் விழுங்கும் பொருட்களின் அளவு மற்றும் வேகம் ஆகியவற்றை இதுவரை பார்த்ததில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
பொதுவாக, நட்சத்திரங்களை சுற்றும் கோள்கள் மட்டுமே இதுபோன்று பொருட்களை தனக்குள் சேர்த்து வளர்ச்சி அடையும் என்று விஞ்ஞானிகள் ஏற்கனவே கருதினார்கள்.
ஆனால் விண்வெளியில் தனியாக உள்ள ஒரு கோள் இவ்வளவு வேகமாக பொருட்கள் அனைத்தையும் விழுங்கி வளர்வதை பார்ப்பது இதுதான் முதல் முறை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்த ‘சா 1107 – 7626 ‘ கோளின் தீவிர வளர்ச்சியானது, நட்சத்திரங்கள் உருவாகும்போது நடப்பது போலவே அதன் காந்தபுலத்தால் தூண்டப்படுகிறது என்று விஞ்ஞானிகள் நம்பு கின்றனர்.
இந்த கண்டுபிடிப்பு விண் வெளி ஆராய்ச்சியில் ஒரு பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இந்த புதிய கோளின் நடவடிக்கை களை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.