சென்னை, அக்.4- காலாண்டுத் தேர்வுகள் மற்றும் முதல் பருவத் தேர்வுகள் கடந்த செப்டம்பர் 10இல் தொடங்கி 26ஆம் தேதி வரை நடந்தது. தொடர்ந்து மாணவர்களுக்கு செப்டம்பர் 27ஆம் தேதி முதல் காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் வரும் 6ஆம் தேதி திறக்கப்பட உள்ளன. இந்நிலையில் விடுமுறைக்கு பின்பு திறக்கப்பட உள்ள பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வித் துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன் விவரம் வருமாறு: பள்ளிகளில் வகுப்ப றைகள் உள்பட வளாகம் முழுவதும் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே மாணவர்களுக்கு மதிப்பீடு செய்யப்பட்ட காலாண்டுத் தேர்வு விடைத்தாள்கள் விநியோகிக்கப்பட வேண்டும். மேலும், 2ஆம் பருவத்துக்
காக பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பாடநூல்களும் உடனே வழங்கப்பட வேண்டும். அதேபோல், பருவமழையை முன்னிட்டு பள்ளிகளில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கு ஏற்ெகனவே வழிகாட்டுதல்கள் அனுப்பப்பட்டுள்ளன. அவற்றை பின்பற்றி தலைமையாசிரியர்கள் துரிதமாக செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
8ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை
இந்திய ராணுவ கல்லூரியில் பயில
வருகிற 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
சென்னை, அக்.4- பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள இந்திய ராணுவக் கல்லூரியில் 2026ஆம் கல்வியாண்டு 8ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு டிசம்பர் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வு சென்னையிலும் நடைபெறும். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வுக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் மாதிரி வினாத்தாள் தொகுப்பை ‘கமாண்டன்ட், ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி, டேராடூன், உத்தரகாண்ட் – 248003’ என்ற முகவரிக்கு விரைவு தபால் வழியே விண்ணப்ப கடிதம், கேட்புக் காசோலை ஆகியவற்றை அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். பொதுப்பிரிவினர் ரூ.600க்கும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.555க்கும் காசோலை எடுக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர் ஜாதி சான்றிதழ் நகலும் சேர்த்து அனுப்ப வேண்டும். அதன்பின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 15ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இந்த தகவலை பள்ளி மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆர்வமுள்ளவர்கள் சேர்க்கை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் முன் ஜாமின் மனு தள்ளுபடி
மதுரை, அக்.4- கரூரில் கடந்த செப். 27ஆம் தேதி இரவு த.வெ.க. பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் சிடிஆர் நிர்மல் குமார் முன்ஜாமின் மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது, புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோர் முன் ஜாமின் கோரிய வழக்கை ஒத்திவைக்க காவல்துறை தரப்பில் கோரிக்கை வைத்தனர். இதற்கிடையே, புஸ்ஸி ஆனந்த் மற்றும் காவல்துறை தரப்பு வாதங்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டன. பின்னர், த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் முன்ஜாமின் கோரிய மனுக்கள் மீதான தீர்ப்பை உயர்நீதிமன்ற கிளை ஒத்திவைத்தது. விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளதால் நீதிமன்ற இணையதளத்தில் மாலை வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதன்படி, தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமாரின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழப்பு
ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுக்க
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, அக்.4- கரூரில் கடந்த 27ஆம் தேதி இரவு த.வெ.க. பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சினிமா துறையினர் என பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
இந்த சம்பவத்திற்கு திமுக அரசு தான் காரணம் என த.வெ.க. நிர்வாகிகள் தெரிவித்து வந்தனர். அந்த வகையில் ஆதவ் அர்ஜூனா தனது எக்ஸ் தள பதிவில் புரட்சியை உண்டாக்க வேண்டும் என பதிவிட்டிருந்தார். உடனே அதனை நீக்கவும் செய்தார். அதற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் சிடிஆர் நிர்மல் குமார் முன்ஜாமின் மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆதவ் அர்ஜூனா தொடர்பாகவும் விசாரணை நடைபெற்றது. அதில் ஆதவ் அர்ஜுனா ஏதோ புரட்சியை ஏற்படுத்துவது போல கருத்து பதிவிட்டுள்ளார். இதன் பின்புலத்தை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது போல பொறுப்பற்ற பதிவுகளை காவல்துறை கவனத்துடன் விசாரித்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும். நீதிமன்ற உத்தரவுக்கு காத்திருக்கிறீர்களா? எனவும் அரசுக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.