சுயமரியாதை இயக்க நூற்றாண்டில் திருப்பத்தூர் மாவட்ட கழகம் சார்பில் பெரியார் பெருந்தொண்டருக்கு சிறப்பு

4 Min Read

தந்தைபெரியார் என்ற மாமனிதர் மனிதர்களுக்கு மான உணர்ச்சியை ஊட்ட துவங்கிய இயக்கம் தான் சுயமரியாதை இயக்கம் நாம் எல்லாம் அறிந்ததே.

தந்தை பெரியாரின் ஒவ்வொரு பிறந்த நாள் போதும் தன் இல்லத்தில் முன் பெரியார் படத்தை வைத்து மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தி கழக தோழர்களை அழைத்து இனிப்பு வழங்கி விழா கொண்டாடுவார் இந்த பெரியாரின் பெருந்தொண்டர்  கி. வீரமணி.

என்ன இது, தமிழர் தலைவர் ஆசிரியர் பெயரே இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? ஆம் தந்தை பெரியார் அவர்கள் இவர் இல்லத்திற்கு வருகை தந்து, ஆசிரியர் பெயரை தான் இவருக்கு வீரமணி என்று சூட்டி உள்ளார்.இப்படி இவருக்கு வீரமணி என்று சூட்டியுள்ளார் என்று நினைக்கும் போது பெரியார் மனதில் ஆசிரியர் எந்தளவுக்கு குடி கொண்டிருந்திருக்கிறார் என்பதும் விளங்கியது.

சுயமரியாதைச் சுடரொளி

இவர் தந்தை சுயமரியாதை இயக்க வரலாற்றில் திருப்பத்தூருக்கு பெருமை சேர்க்க கூடியவராக இருந்து, மறைந்தவர் தான் சுயமரியாதைச் சுடரொளி டாக்டர் கிருஷ்ணன் அவர்கள். இவர் சுயமரியாதை இயக்கத்தின் இணைச்செயலாளர் 1941 ஆண்டு முதல் 1944 வரை இருந்துள்ளார். இவர் இல்லம் உள்ள திருநீலகண்டர் சின்னகடை தெருவிற்கு வராத தலைவர்களே இல்லை என்று சொல்லாம்.

அப்படி இவர் இல்லத்திற்கு வந்த பெருந் தலைவர்கள் தந்தை பெரியார் பலமுறை, அறிஞர் அண்ணா இங்கே வந்தால், இவர் வீட்டின் மாடி அறையில் தங்கி எழுத்து பணியை மேற் கொள்வாராம். மேலும் கலைஞர், பேராசியர் அன்பழகன், நாவலர் நெடுஞ்செழியன், நடிகர் சிவாஜி கணேசன், கே.ஏ.மதியழகன், என்.வி.நடராசன், எஸ்.எஸ் இராஜேந் திரன் என்று இவர் இல்லத்தில் கால் பதிக்காதவர்களே இல்லை என்று சொல்லலாம்.

அதுமட்டுமல்ல 16.12.1956 ஆம் ஆண்டு சந்திரோதயம் நாடகம் சின்னகுளம் மாரியம்மன் தெருவில் நடத்தியுள்ளார்.

எம். ஆர்.இராதா அவர்கள் கீமாயணம் நாடகத்தை இவர் தலைமையில் நடத்தி யுள்ளார்.

மேலும் முரசொலிமாறன் அவர்களின் லட்சுமிகாந்தன் கொலைவழக்கு நாடகம், எம்.ஜி.ஆரின் இன்ப கனவு நாடகம் என்று அக் காலக்கட்டத்தில் தந்தை பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளை முன்னெடுத்து செல்லக்கூடிய, நாடகங்களை இவர் திருப்பத்தூரில் பல்வேறு தடைகள், எதிர்ப்புகளுக்கிடையே நடத்தியுள்ளார்.

வரலாற்று சிறப்புமிக்க…

இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க  எம். கிருஷ்ணசாமி அவர்களின் மகன்தான்
கி. வீரமணி. இவரும் ஒரு சிறந்த எழுத்தாளர். அறிஞர்அண்ணா அவர்கள் ஆசிரியராக இருந்த காஞ்சிநாடு பத்திரிக்கையில் வீரமணி மூன்று கட்டுரைக்கு மேல் எழுதியுள்ளார்.

மேலும் இந்திய – சோவியத் கலாச்சார கழகத்திற்கு செயலாளராக இருந்துள்ளார்.

இவருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பெரியார் பெருந்தொண்டர் பாராட்டுபத்திரம் திருப்பத்தூரில் வழங்கியுள்ளார்.

இப்படி பல வரலாற்றை புரட்டி போட்டவர்கள் கால் பதித்த இவருடைய இல்லத்திற்கு தான் இந்த ஆண்டும் தந்தை பெரியார் 147 பிறந்தநாள் அன்று கழக தோழர்கள் கால் பதித்தோம்.

உள்ளே நுழைந்த வீட்டுவாசலில் பகுத்தறிவுப் பகலவன் ஒளிப்படமாக மலர்களால் அலங்கரிக்கப்பட்டு எங்களை வரவேற்றார். அவருடன் இணைந்து தோழர்கள் அய்யா படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தி இனிப்பு வழங்கி மகிழ்ந்தோம். பிறகு அவர் நம்மோடு சுயமரியாதை இயக்க வரலாற்று நினைவுகளை பகிர்ந்த தருணம் மிகவும் உணர்சிகரமான தருணம்.

இப்போது கி. வீரமணி அவர்களால் நடக்க முடியாது. தன் கால்களால் தான் நடக்கமுடியாதே தவிர, தன் சிந்தனையால் ஓடிக் கொண்டே தான் இருக்கிறார். இப்போது கூட தினம், தினம் மாவட்ட கழக வாட்ஸ் அப் குழுவிலும், மற்ற குழுக்களிலும் பெரியார் கருத்துகளை விதைத்து கொண்டேயிருக்கிறார்.

தத்துவத்தை பின்பற்றி…

அவருக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இன்று வரை பெரியார் அவர்களின் தத்துவத்தை பின்பற்றி, அவர் கொள்கைகளை தன்னால் இயன்ற வரையில் பரப்பிக்கொண்டு, தூய நாத்திகராக வாழ்ந்து கொண்டி ருக்கிறார். இந்த அவரசரகால உலகில் நாம் யாரால் பயன் பெற்றோம் என்பதைப்பற்றி நினைக்காமல் சுயநலத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் இடையில், திருப்பத்தூர் மாவட்டத் தலைவர்
கே. சி.எழிலரசன்  அவரை மறக்காமல், அவர் வழிகாட்டுதலின் பேரில், அந்த அப்பழுக்கற்ற, எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் வாழ்ந்து கொண்டிருக்கும் பெரியா ரின் பெருந்தொண்டருக்கு, அவரின் உடல் நலன் கருதி இரு சக்கரவண்டியை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் வழங்கினோம்.

இன்றைய கழக இளைஞர்களுக்கு இப்படியான கொள்கைப் பற்றாளரை   அடையாளப் படுத்துவதும், அவருக்கு உறு துணையாக இருப் பதும் மிகவும் அவசியம். இவர் போன்ற கொள்கைப் பற்றாளர்கள் வழியாகத் தான் பெரியார் வாழ்ந்து கொண்டேயிருக்கிறார். அவர் கொள்கைகளுக்கும், அவருக்கும் என்றும் இறப்பே இல்லை.

மனநிறைவு அடைந்தோம்

சுயமரியாதை நூற்றாண்டில் அவரை சந்தித்து நம்மால் முடிந்த சிறு உதவி செய்ய முடிந்ததை நினைத்து மிகவும் மன நிறைவு அடைந்தோம்.

அக்டோபர் 4 செங்கல்பட்டு மறை மலை நகரில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாட்டிற்கு வர என் மனம் துடிக்கிறது. ஆனால் என் உடல் ஒத்துழைக்கவில்லேயே என்று நினைக்கும் போது மனம் வருத்தம் அடைகிறது என்றார். ‘தோழர்களே நீங்கள் சென்று வாருங்கள் பெரியார் வலைக்காட்சியில் நேரடி ஒலிப்பரப்பில் நான் பார்த்து கொள்ளுகிறேன்’ என்று வாழ்த்தி அனுப்பி வைத்தார்.

இன்றைக்கும் இத்தகைய நிலையிலும் ‘ஆசிரியர் அழைக்கிறார் , என்னால் வரமுடியவில்லையே’ என்று வருத்தம் அடையும் அவரை பார்த்து வணங்கி,  நம்மை மான உணர்ச்சி கொள்ள செய்தவரின் மாநாட்டிற்கு புறப்பட ஆயத்தமானோம்.

வாழ்க பெரியார்!

வாழ்க சுயமரியாதை இயக்கம்!!

– பெ.கலைவாணன்

திருப்பத்தூர்

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *