ஹிட்லரிசமும் – ஆரியனிசமும் ஒன்றே!

3 Min Read

01.07.1944 – குடி அரசிலிருந்து…

ஆரியனிசத்தை எதிர்த்து நடைபெறும் கிளர்ச்சியில் சேரும் மக்களுக்கு எவ்வளவு தூரம் தொல்லைகள் கொடுக்கலாமோ, எவ்வளவு  தூரம் அவர்களை இழிவுபடுத்தலாமோ, எவ்வளவு தூரம் செல்வாக்கற்றவர்களாகச் செய்ய முடியுமோ, அவ்வளவு தூரம் ஆரியனிசம் முயன்று பார்க்கும். ஏனெனில், அய்ரோப்பாவில் ஹிட்லரிசம் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து ஒரு சில வருடங்கள்தான் ஆகின்றன. இதற்குள், தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த எவ்வளவோ முயற்சிகள் செய்து வருகையில், கிளர்ச்சியை அடக்கப் பல வழிகளை வகுத்து வருகையில் இவ்வுபகண்டத்தில் ஆயிரக்கணக்கான வருடங்களாக ஆதிக்கம் செலுத்தி இனிது வாழ்ந்து வந்த ஆரியனிசம் லேசில் விட்டு விடுமா? தன்னாலானமட்டும் முயன்றுதான் பார்க்கும்.

அய்ரோப்பாவில், ஹிட்லரிசத்தை ஒழிக்க எவ்வளவு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன, எவ்வளவு பொருள்கள் செலவழிக்கப்படுகின்றன, எவ்வளவு உயிர்கள் பலியிடப்படுகின்றன என்பதை எண்ணிப் பாருங்கள். ஒரு சில வருடங்களாக வேரூன்றி இருக்கும் ஹிட்லரிசத்தை ஒழிக்க இவ்வளவு பெரு முயற்சிகள் எடுக்கப்படுகையில் பல ஆயிரம் வருடங்களாக ஆணிவேர் சல்லிவேர்கள் விட்டு வானளாவி உயரப் படர்ந்திருக்கும் ஆரிய விஷ விருட்சத்தை வெட்டி வீழ்த்துவதென்றால் எவ்வளவு பெருமுயற்சி செய்ய வேண்டும், எடுத்துக் கொள்ள வேண்டும், எவ்வளவு மன உறுதி வேண்டும் என்பதை எண்ணிப் பாருங்கள்.

ஏன் இவ்வாறு சொல்லுகிறோமென்றால், ஹிட்லரிசம் மக்களை அடிமைப்படுத்தி சுதந்திரம் அற்ற மக்களாகச் செய்து விடும் என்று அஞ்சப்படுகிறது. ஆனால், இந்நாட்டில் வெகு நாட்களுக்கு முன்னமே, அவ்வாறு செய்துவிட்டது. பன்னெடு நாட்களுக்கு முன்னிருந்தே அந்நிலைமையிலிருக்கும் மக்களை விடுவிப்பதற்காக முயலும் காரியத்தை ஆதரிக்க வேண்டியதல்லவா உள்ளபடி, ஹிட்லரிசத்தின் கொடுமையிலிருந்து மக்களை விடுவிக்கப் பாடுபடுவர்களின் கடமை? இன்று நாட்டிலே நடைபெறும் காரியங்களைப் பார்க்கவில்லையா? அவ்வாறு எண்ணுவதற்கில்லை. ஆரியத்தை எதிர்க்கிறவர்களுக்கும் அவர்களுக்குத் துணை நிற்கிறவர்களுக்கும் எவ்வளவு தூரம் தொல்லை கொடுக்கலாமோ அவ்வளவு தூரம் தொல்லை கொடுக்கப்பட்டு வருகிறது. விபீஷணர்களையும், சுக்ரீவன்களையும், அனுமார்களையும் புதிது புதிதாக உற்பத்தி செய்து வரப்படுகிறது. ஆரியனிசத்தால் அந்நாளில் தோற்றுவிக்கப்பட்ட விபீஷணர்களையும், சுக்ரீவன்களையும், அனுமார்களையும் இன்று தன்மானமற்ற – சூடு சுரணையற்ற ஒரு சிலர் பூஜித்து வணங்கி வருவது போல எதிர்காலத்தில் தங்களையும் வணங்குவார்கள் என்று இவர்கள் – இவ்விபீஷணர் முதலியோர் ஒரு வேளை எண்ணலாம். ஆனால், இவர்களுக்கு, இவர்களது வாழ்நாளிலேயே தங்களைப் போன்றவர்களை வணங்குவார்களா அல்லது இத்தகையவர்கள் சந்ததிகளே இனி இவ்வுபகண்டத்தில் மட்டிலுமல்ல; உலகிலேயே தோன்றாமல் செய்து விடுவார்களா என்பதை பகுத்தறிவு உலகம் உணர்த்தி விடும் என்பதில் சிறிதும் அய்யமில்லை.

இவ்வுபகண்டத்தில், அதிலும் குறிப்பாக, தென்னாட்டில் உள்ள மக்கள் யாவரும் ஓர் இனம் – ஒரு நாட்டு மக்கள்; எங்களுக்குள் வேற்றுமை இல்லை – உயர்வு தாழ்வு இல்லை; நாங்கள் அடிமைப்படவும் மாட்டோம்; அடிமை கொள்ளவும் மாட்டோம் என்ற உணர்ச்சி ஒவ்வொருவர் உள்ளத்திலும் கொழுந்து விட்டெரியும் இந்நேரத்தில், அதனை அணைக்க ஆரியனிசம், துரோகிகளைக்  கொண்டும் பலவித உபாயங்களைக் கொண்டும் முயலுமானால், இதைக் கண்ணுறும் எவர் மனந்தான் துடிக்காமல் இருக்கும்.

ஆகவே, இவர்களது எண்ணத்தில் மண்விழச் செய்வதற்கு ஒரே ஒரு வழிதான் இன்று நம் முன் உள்ளது; அதாவது, திராவிட இன உணர்ச்சியின் பாற்பட்டு ஓர் இனமென்று திரண்டு எழுந்து, உறுதி தளராத பெரியார் தலைமையில் நின்று போராடுவதுதான். இப்போராட்டத்தைத் துவக்குவதற்கு நாம் எல்லாம் ஒன்று திரள வேண்டும். அவ்வாறு ஒன்று திரளுவதற்குத் திராவிடர் கழகந்தான் இன்று ஏற்ற அமைப்பாக இருந்து வருகிறது என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து, திராவிடர் கழகத்தில் ஆயிரக்கணக்கில் அல்ல லட்சக்கணக்கில், கோடிக் கணக்கில் உறுப்பினர்களாகச் சேர வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். திராவிடர் கழகம் எவ்வளவுக்கெவ்வளவு பலமடைகிறதோ அவ்வளவுக்கவ்வளவு நமது இலட்சியம் ஈடேறுவதற்குரிய காலத்தைக் குறுக்கியவர்களாவோம் என்பதோடு, இதனைப் பார்க்கும் நம் பெரியாரின் உள்ளமும் பூரித்து இன்னும் பல திட்டங்களைத் தந்து பல வழிகள் வகுத்துத் தருவார்கள் என்பதில் அய்யமில்லை. இதற்காக திராவிடர் கிளர்ச்சி திக்கெட்டும் பரவும்படி செய்வதோடு திராவிட முழக்கம் எங்கும் முழங்கும்படி செய்ய வேண்டும். ஆரியனிசத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் உண்மையான ஆர்வம் இருப்பவர்களும் இந்நாட்டு மக்களை ஆரிய அடிமைத் தளையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று விரும்புகிறவர்களும், முதலில் செய்ய வேண்டியது திராவிடர் கழகத்திற்கு எவ்வளவு உறுப்பினர்களைச் சேர்க்க முடியுமோ, அவ்வளவு பேர்களைச் சேர்ப்பதுடன், எதிரிகளின் சதிகளை – நடவடிக்கைகளை அழித்து ஒழிக்கவும் முன்வரவேண்டும். இதற்கு முன்மாதிரியாக, அய்ரோப்பாவில் ஹிட்லரிசமாகிய ஆரியனிசத்தை அழிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறதை நாம் கண்முன் பார்க்கிறோம். பார்த்தும் வாளா இருக்கலாமா? எனவே நாம் உறுதி தளராது ஊக்கத்தைக் கைவிடாமல் நிற்போமானால் வெற்றி நமதே!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *