சென்னை, அக். 3- விவசாயிகளுக்கு எந்தவித சிரமமும் இல்லாமல் தாமதமின்றி நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஆலோசனைக் கூட்டம்
டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல், சேமிப்புக் மற்றும் உரங்கள் இருப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் நேற்று (2.10.2025) நடந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். காணொலி மூலமாக அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சக்கரபாணி, டி.ஆர்.பி. ராஜா, அரசு செயலாளர்கள் மற்றும் நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர், திருச்சிராப்பள்ளி மற்றும் அரியலூர் ஆகிய டெல்டா மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நெல் கொள்முதல், உரங்கள் இருப்பு உள்ளிட்டவைகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆண்டு பெய்த பருவமழையினால் விவசாயிகளுக்கு தண்ணீர் குறிப்பிட்ட காலத்திற்குள் கிடைக்கப்பெற்றதாலும், இடுபொருள் மானியம், விவசாயக் கடன்கள் ஆகி யவற்றினால் கடந்த ஆண்டைவிட அதிக அளவில் விளைச்சலும், மகசூலும் விவசாய பெருங்குடிமக்களுக்கு டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் கிடைத்துள்ளது.
கொள்முதல் நிலையங்கள்
இந்த ஆண்டு உற்பத்தி பெருமளவு அதிகரித்துள்ள காரணத்தினால் விவசாயிகளிடமிருந்து எவ்வித தாமதமுமின்றி நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும். அதே சமயம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் விரைவாகவும், பாதுகாப்பாகவும் சேமிப்புக் கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்ற முக்கிய நோக்கத்துடன் இந்த கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கை, இருப்பு ஆகியவை குறித்து ஆட்சியர்களிடம் கேட்டறி
ந்தார்.
மேலும் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை சேமிக்க , தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சேமிப்புக் கிடங்குகள் மட்டுமின்றி, வேளாண்துறையின் கீழ் வரும், வேளாண் விற்பனைத்துறை சேமிப்புக் கிடங்குகளையும், வேளாண் உற்பத்தித் துறையில் உள்ள ஒரு லட்சம் டன் கிடங்கு வசதியினையும், வேறு பல துறைகளின் கிடங்குகளையும் தேவைப்படும் இடங்களில் பயன்படுத்திக்கொள்ளவும், கொள்முதல் செய்யப்படும் நெல் உடனடியாக அரவை ஆலைகள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளுக்கு கொண்டு செல்லும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
உறுதிப்படுத்த வேண்டும்
அதுமட்டுமின்றி, டெல்டா மாவட்டங்களுக்கு சிறப்புக் கண்காணிப்பு அலுவலர்களை நியமிக்கவும் அறிவுறுத்தினார். நெல் கொள்முதல் நிலையங்களில் 2025-2026ஆம் ஆண்டில் மிக அதிகமாக நெல் கொள்முதல் எதிர்பார்க்கப்படுவதால் அனைத்து இடங்களிலும் போதுமான எண்ணிக்கையில் பணியாளர்கள் இருப்பதையும், விவசாயிகளுக்கு எந்தவித சிரமமும் இல்லாமல் கொள்முதல் பணிகள் மேற்கொள்ளப்படுவதையும் உறுதிப்படுத்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
மேலும், அவர் டெல்டா மாவட்டங்களின் நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் கிடங்குகளிலிருந்து கூடுதல் ரயில்வே வேகன்கள் மூலம் பிற மாவட்டங்களுக்கு விரைந்து நெல் மூட்டைகளை அனுப்பிடவும் அறிவுறுத்தினார்.