* 1925ஆம் ஆண்டில்தான் சுயமரியாதை இயக்கமும், ஆர்.எஸ்.எசும் தோன்றின
* பண்பாட்டுப் படையெடுப்பு மூலம் ஆதிக்கம் செலுத்தும் ஆரிய அமைப்பே ஆர்.எஸ்.எஸ்.
* மற்ற மற்ற இடங்களில் ஆர்.எஸ்.எஸ். கையாண்ட அணுகுமுறைகள், தந்தை பெரியார் மண்ணில் எடுபடாது
மறைமலை நகர் மாநாடு – திருப்புமுனையாகும் – வாரீர்! வாரீர்!!
தமிழர் தலைவர் ஆசிரியர் வரவேற்பு அறிக்கை
நாளை (4.10.2025) மறைமலை நகரில் நடைபெற உள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாடு – திருப்புமுனை மாநாடு – ‘திராவிட மாடல்’ இயக்கத் தலைவர்கள் பங்கேற்கின்றனர். அனைவரும் வாரீர் வாரீர் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டாக அறிவிக்கப்பட்ட அதே 1925ஆம் ஆண்டு – வடக்கே பழைய புனா – இன்றைய புனேயில் தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். ஓர் ஆரிய வேத மதவெறி ஹிந்து மதத்தை – அதன் வர்ணசிரமம் மற்றும் பேதமுள்ள தத்துவங்களைப் பரப்பிப் பாதுகாக்க, புனேவின் ஆரியப் பார்ப்பனர்களில்கூட தங்கள் பிரிவு மிகவும் உயர்ந்த தனிரகம் என்று இறுமாந்து கூறிடும் புனாவின் சித்பவன் பிரிவு பார்ப்பனர்களுக்காகத் தொடங்கப்பட்ட இயக்கம்.
அதற்கு முன்பே ஹிந்து மஹா சபை என்ற ஹிந்து மதப் பரப்பும் அமைப்பு தோன்றி விட்டாலும், அது ஒரு மதத்திற்கான – குறிப்பாக, ஆரிய வேத – பேத கொள்கைகளுக்கானது என்பதால் அதற்கு எதிர்ப்பார்க்கப்பட்ட போதிய ஆதரவு வெகு மக்களிடையே, குறிப்பாக பெரும்பான்மை உழைப்பாளிகளான மக்களிடம் கிட்டவில்லை என்று உணரப்பட்டதால், ‘தொண்டு நிறுவனம்’ என்ற முகமூடியுடன் இரு வகைத் திட்டங்களுடன் உருவாக்கப்பட்ட இயக்கமே ஆர்.எஸ்.எஸ். என்ற ராஷ்டிர சுயம்சேய சேவக் ‘சங்க்’ எனப்படும் ஆரிய பார்ப்பன மேல் ஜாதி – வருணப் பாதுகாப்பு இயக்கம்.
தெற்கே தோன்றிய தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம்!
தெற்கே தந்தை பெரியாரால் தொடங்கப்பட்ட சுயமரியாதை இயக்கம் – மத, ஜாதி, வர்ண, கல்வி பேதங்கள், பெண்ணடிமை ஒழித்து, மானுடத்தை சமத்துவப் புரியாக்கும் கொள்கைக்கு உரியது. ஆர்.எஸ்.எசுக்கு நேர் எதிரானது.
1925இல் தொடங்கப்பட்ட தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் வெளிப்படையான, பல கோடி மக்களின் மூளை விலங்கின் கொடிய தளையறுத்திடும் மனிதநேய இயக்கம்.
செப்டம்பர் 27 அன்று அதே ஆண்டு தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். என்ற முகமூடி இயக்கமோ உள்ளும் புறமும் வெவ்வேறு வேலைத் திட்டங்கள், உயர் ஜாதி நலன்களைக் காப்பாற்றிடவே தொண்டு முகத்திரை அணிந்து புறப்பட்ட இயக்கம்.
உயர் ஜாதி வெகுச் சிறுபான்மை எண்ணிக்கையினரின் ஜாதி இயக்கம் என்ற முத்திரை தன்மீது விழுந்து, குட்டு உடைவதை மறைக்க, ஹிந்து மதம் – அதன் உரிமைகள் என்ற பெயரில் சாவர்க்கர் போன்றவர்களின் அரசியல் ஆளுமைத் தத்துவமான ‘ஹிந்துத்துவா’ என்ற ஒரு ‘மயக்க பிஸ்கெட்டை’ மற்றவருக்குத் தந்தது. உடற்பயிற்சிக்கு ஷாகா என்ற போர்வையில் இளைஞர்களைச் சேர்ப்பது – பெற்றோர், ஏமாந்த இளைஞர்களை ஈர்க்க ஷாகா என்பதேகூட ஆரிய வடமொழி சமஸ்கிருத கலாச்சாரப் பரப்பே அதன் இலக்கு. அதன் மூலம் சமூகத்தின் பழைய பாசி படர்ந்த வர்ணதர்மம், வேத, பேத, தர்மமாகவே காட்சி யளிக்கப்பட்டது.
மூன்று முறை தடை செய்யப்பட்ட
இயக்கம் ஆர்.எஸ்.எஸ்.
இந்தியாவில் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம் எப்படி இப்படி ஒன்றிய ஆட்சியைக் கைப்பற்றியது? எந்த அரசியலமைப்புச் சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்தார்களோ அதற்கு நேர்மாறாக தானடித்த மூப்பாக உள்ளிருந்து புத்தகத்தை அரித்துத் தின்னும் ‘கரையான்களாகி’, இன்று மாற்றப்பட முடியாத அரசியலமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானப் பீடிகையின் தத்துவங்களைத் தவிடு பொடியாகும் உச்ச கட்டம் இது!
‘விஜயதசமி’ நாள் – அப்படி ஒரு வடமொழிச் சொல் – முன்பே ‘ஆரியர் அடைந்த வெற்றி நாள்’ என்பதைக் குறிக்கும். ஒரு கற்பனைப் பண்டிகையை (பின்னால் உருவாக்கப்பட்ட) அறிவித்துத் தங்கள் கொள்கைத் திட்டங்களை நிறைவேற்றிட, முதலில் பண்பாட்டுப் படையெடுப்பு என்ற மறைமுக ஆயுதத்தைக் கையில் எடுத்தனர்.
‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’ என்ற திராவிடப் பண்பாட்டுக்கு எதிராகவே அது பிறந்தது. பல ஆய்வாளர்கள் ஆராய்ந்து கூறுகின்றனர். 1916இல் தென்னாட்டில் பிறந்த பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் – நீதிக்கட்சி என்ற திராவிடர் இயக்கத்தின் எதிர் வினையாகவே வழமையான முகத்திரை அணிந்து ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் ஆரியர் நலன் காப்பதற்குப் பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டனர். எதிர்த்தும் அணைத்தும் உதிரிகள் மூலமும், அப்பாவி இளைஞர்களுக்கு 2 கோடி வேலை வாய்ப்பு என்றும், வறுமையில் வாடும் ஏழைகளுக்கு ரூ.15 லட்சம் வங்கிக் கணக்கில் என்பது போன்ற வாக்குறுதி ஜும்லாக்கள் போன்ற பொய் ஆசை வார்த்தைகளை, சூழ்ச்சிப் பொறிகள், அதிகாரத்தைத் தன் வயப்படுத்தி, வஞ்சித்து ஜாதி, மத போதை, கோயில், பக்தி விழா, ‘மயக்க மாத்திரைகள்’மூலம் ஏமாற்றி வருகின்றனர். மதச்சார்பின்மை, ஜனநாயகத்திற்கு மாறாக கட்சி வாக்கு வன்முறை, ரகசிய நடப்புகளால் தானே மூன்றுமுறை தடை செய்யப்பட்டது.
அணைத்து அழிக்கும் ஆபத்தான அணுகுமுறை கொண்டதுதான் ஆர்.எஸ்.எஸ்.!
எதிர்த்தவர்களை அழித்தல், அது முடியாதபோது அணைத்து ஒழித்தல் மூலமே அன்று பவுத்தத்திலிருந்து இன்றைய அரசியல் கூட்டணி வரை ‘அடமான கட்சிகளை ஆட்கொள்ள, வார்த்தைகளாலும் வியூகங்கள், அதிகார மய்ய’ திரிசூலங்களாலும் தங்களை நிலை நிறுத்த, கொள்கையில் நியாயத்திற்காகப் போராடும் ஆட்சிகளின் குறிப்பாக திராவிட ஆட்சி போன்ற எதிர்க்கட்சிகள், ஆளுகின்ற மாநில ஆட்சிகளை வஞ்சித்தல் – மதக் கலவரங்கள் – எத்தனை மதக்கலவர விசாரணைக் கமிஷன்கள்! இப்படி பலப்பல!
ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பு அரசியலுக்குப் போகாத ஒரு கலாச்சார அமைப்பு என்று புளுகுவது ஒருபுறம்; அமைச்சர்கள் யார், எத்துறை அவர்களுக்கு என்று நிர்ணயிப்பது வரை பா.ஜ.க. என்ற அதன் அரசியல் கட்சிப் பிரிவுக்கு உத்தரவு போடுவது எல்லாமே ஆர்.எஸ்.எஸின் செப்படி வித்தைகளே!
உள்ளே, ஒருபுறம் மோகன் பாகவத் மூலம் – இப்போதும் ஆர்.எஸ்.எஸ். VS பிரதமர் மோடி என்ற பனிப்போர் அரசியல் வட்டாரங்களில் அடிக்கடி உலா வருவதும், அதன் ஆதிக்க வெறி வீழ்த்தப்படும் என்பதும், அத்வானிகளும், முரளி மனோகர் ஷோஷிகளும் ஓரங்கட்டப்பட்டதை எல்லாம் அரசியல் நோக்கர்கள் சொல்லவே செய்கிறார்கள்.
பாசாங்குகளால் தமிழ்நாட்டை வீழ்த்த முடியாது
ஆனாலும் பெரியார் மண்ணில் இன்னும் வெற்றிக்கொள்ள முடியவில்லை! திராவிட இயக்கம் என்ற பழுதில்லா விழுதுகளின் கொள்கையை வீழ்த்த இயலாத பாறைகளால் ஆனவை போன்ற உறுதியான கொள்கைகள்! தங்களது போலி ஏமாற்றுப் பாசாங்குகளால் வீழ்த்த முடியவில்லை – வெத்து வேட்டு வெடிகளால் வினையாற்றி, குறுக்கு வழியில் தமிழ் மண்ணில் தங்களது ஆரிய சாம்ராஜ்யக் கொடியினைப் பறக்கவிடலாம் என்பதற்காக மண் குதிரைகளை, பொய் குதிரை, ஜட்கா குதிரைகளை ‘திராவிட மாடல்’ ரேஸ் குதிரைக்குப் பந்தயம் கட்டிப் படங்காட்டி வெற்றி பெற நினைக்கும் எண்ணம் ஒரு போதும் ஈடேறாது!
இது பக்குவப்படுத்தப்பட்ட, பெரியாரின் சுயமரியாதை மண் – பண்பாட்டுப் படையெடுப்பைப் பல ஆண்டுகளுக்கு முன்பே தடுத்து வெற்றி பெற்ற திருமண்!
அதைப் பறைசாற்றுகின்ற நூற்றாண்டு காணும் திராவிட சுயமரியாதை இயக்கம் என்ற பெரியாரின் பேராயுதம்! அறிவாயுதம்! இரு பெரும் தத்துவப் போர் – ஆரிய – திராவிடப் போரின் புது வடிவமே இன்றைய கள நிலவரத்தின் நிலை!
திருப்புமுனை தரும் மறைமலை நகர் மாநாடு
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு – சிந்துவெளி முதல் கீழடி புதைச் சின்னங்கள் வரை என்ற பலமான பின்னணியே இதன் மூல வரலாறு! எளிதில் வென்று விடலாம் எனத் தப்புக் கணக்குப் போடுகின்றத் தருக்கர்களுக்குத் தக்கப்பாடம் கற்பிப்பதே நமது மறைமலை நகர் மாநாடு – ‘திராவிட மாடல்’ கட்சித் தலைவர்கள், முதலமைச்சர் பங்கேற்கக் காத்திருக்கிறார்கள் ஒரு திருப்புமுனையைத் தரும் நாளைய வரலாற்றுப் பதிவுகள்.
வாரீர்! வாரீர்!!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
3.10.2025