குடியேற்றம், அக். 1- வேலூர் மாவட்டம், குடியேற்றம் நகர பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 147ஆவது பிறந்தநாள் முன்னிட்டு தெருமுனைக் கூட்டம் நகர பகுத்தறிவாளர் கழக தலைவர் ப.ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்றது.
நகர திராவிடர் கழக தலைவர் சி.சாந்தகுமார் அனைவரையும் வரவேற்று புரட்சிப் பாடல்களை பாடினார். மாவட்ட மகளிர் அணி தோழர் ச.ஈஸ்வரி மற்றும் அணைக்கட்டு ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் பொ.ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேலூர் மாவட்ட பகுத்தறி வாளர் கழக அமைப்பாளர் மா.அழ கிரிதாசன் ஆற்றிய தொடக்க உரையில், தந்தை பெரியார் அவர்கள் திராவிட சமூகத்திற்கு ஆற்றிய தொண்டுகள் குறித்து பேசினார். வேலூர் மாவட்ட திராவிடர் கழக காப்பாளர் வி.சடகோபன் ஆற்றிய நோக்க உரையில் அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் தமிழர்கள் மூட நம்பிக்கைகளை அறவே நிராகரித்து மானமுள்ளவர்களாக வாழ வேண்டும் என்று ஆரியர்களை எதிர்த்து போராடினார்.
மேலும்,இன்றைய இளைஞர்கள் சினிமா நடிகர்களின் தவறான வழிகாட்டல்களால் அவர்களின் எதிர்காலம் பாழ்படுத்தப்படுவதை திராவிடர் கழகம் அனுமதிக்காது என்று பேசினார்.
இந்த தெருமுனைக் கூட்டத்தில் பகுத்தறிவாளர் கழகமாநில அமைப்பாளர் இர.அன்பரசன் ஆற்றிய சிறப்புரையில் பார்ப்பனர்கள் நம் மக்களிடத்தில் ஜாதி, மதம் மற்றும் கடவுள் பெயரால் அறிவுக்கு ஒவ்வாத மூட நம்பிக்கைகளை பரப்பி அவர்களை சிந்தனை அற்றவர்களாக மாற்றி வருகிறார்கள்.
உலகின் முதல் கடவுள் மறுப் பாளர் புத்தர்.அவரின் உருவத்தை பெருமாளாக மாற்றி யானைத் தலையை மனித உடலில் பொருத்தி விநாயகராக மாற்றி மூட பண்டிகைகளை உருவாக்கினர்.
இதன் விளைவாக கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றை அபகரித்து அவர்கள் சுகபோக வாழ்க்கை நடத்தி வருகின்றார்கள் இதனை எதிர்த்து தந்தை பெரியார் அவர்களும் அவரைத் தொடர்ந்து கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களும் போராடிப் பெற்ற இட ஒதுக்கீட்டால் இன்று திராவிடர்கள் மானமும் அறிவும் உள்ள மனிதர் களாக சுயமரியாதையோடு வாழ்ந்து வருகிறார்கள் என்று பேசினார்.இந்நிகழ்வை வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் முனைவர் வே.வினாயகமூர்த்தி ஒருங்கிணைத்தார். முடிவில் குடியேற்றம் நகர திராவிடர் கழக அமைப்பாளர் வி.மோகன் நன்றியுரை ஆற்றினார்.