லண்டனில் காந்தியார் சிலை சேதம்
இந்திய தூதரகம் கண்டனம்
இந்திய தூதரகம் கண்டனம்
லண்டன், அக். 1– நாடு முழுவதும் ஆண்டுதோறும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள டேவிஸ்டாக் சதுக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள காந்தியாரின் சிலை அடையாளம் தெரியாத நபர்களால் திடீரென சேதப்படுத்தப்பட்டது. இந்த சம்பவத்துக்கு இங்கிலாந்து நாட்டில் உள்ள இந்திய தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
அதில், இந்த சம்பவம் காந்தியாரின் அகிம்சை கருத்து மற்றும் அவரது மரபு மீதான வன்முறைத் தாக்கு தலாகும். இது தொடர்பான உடனடி நடவடிக்கைக்காக உள்ளூர் அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளோம் என்று தெரிவித்துள்ளது. இந்த நாசவேலை குறித்த அறிக்கைகளை காவல்துறையினர் ஆராய்ந்து வருவதாக கூறினர்.
அமெரிக்காவில் இருந்து ஈரானைச் சேர்ந்த 400 பேர் வெளியேற்றம்!
வாசிங்டன், அக். 1– அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில், சுமார் 400-க்கும் அதிகமான ஈரான் நாட்டினர் மீண்டும் தாயகம் அனுப்பப்படுவார்கள் என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அடுத்த 2 நாள்களில் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படும் ஈரானியர்களின் முதல் குழு விமானம் மூலம் தலைநகர் தெஹ்ரானை வந்தடையும் எனக் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், அமெரிக்காவின் உள்நாட்டு ஊடகங்களில் இதுகுறித்த செய்திகள் முதலில் வெளியாகின. ஆனால், ஈரான் அரசுடனான இந்த ஒப்பந்தம் குறித்து அமெரிக்க அரசின் தரப்பில் இருந்து எந்தவொரு கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
முன்னதாக, நிகழாண்டில் (2025) ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் நடைபெற்ற 12 நாள் போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானின் ராணுவத் தளவாடங்கள் மற்றும் அணுசக்தி கட்டமைப்புகளின் மீது அமெரிக்கா பங்கர் பஸ்டர் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
பிலிப்பைன்சில் நிலநடுக்கம்
26 பேர் உயிரிழப்பு!
மணிலா, அக். 1– பிலிப்பைன்ஸின் மத்திய பகுதியில் 6.9 ரிக்டர் அளவுகோளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்தனர். பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும், மீட்புப் பணிகள் தொடர்ந்து வருவாதவும் அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், பின்னர், சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் கட்டிடங்கள் சரிந்து விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் திடீர் பள்ளங்கள் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கத்தின் மய்யமானது லெய்டே பகுதியில் பூமிக்கு அடியில் சுமார் 10.4 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் இடிபாடுகளில் சிக்கி இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்தோனேஷியாவில் துயர சம்பவம்
பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்து
65 மாணவர்கள் உயிருடன் புதைந்தனர்
65 மாணவர்கள் உயிருடன் புதைந்தனர்
சிடோயர்ஜோ அக். 1– இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சிடோயர்ஜோ நகரில் ‘அல் கோசினி இஸ்லாமிய உறைவிடப் பள்ளி’ செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் இருந்த பழைய இரண்டு மாடிக் கட்டிடத்தில், அனுமதியின்றி கூடுதலாக சில தளங்கள் கட்டப்பட்டு வந்தன. இந்நிலையில், 29.9.2025 அன்று பிற்பகல் மாணவர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது, கூடுதல் தளங்களின் பாரம் தாங்காமல் அந்தக் கட்டிடம் திடீரென இடிந்து தரைமட்டமானது.
அப்போது தொழுகையில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, இரவு முழுவதும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் இதுவரை உயிரிழந்த ஒரு மாணவர்உடல் மீகப்பட்டுள்ளது; 99 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் 65 மாணவர்கள் இடிபாடுகளுக்குள் உயிருடன் புதைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தினால் மேலும் சரிவுகள் ஏற்படக்கூடும் என்பதால், மீட்புப் பணிகள் மிகுந்த சவாலாக உள்ளன. இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மாணவர்களுக்கு குழாய்கள் மூலம் ஆக்சிஜன் மற்றும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.