தி.மு.க. எம்பிக்கள் கனிமொழி, ஆ ராசா குற்றச்சாட்டு
சென்னை, அக்.1 கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் களுக்கு ஒரு கட்சித் தலைவர் ஆறுதல்கூட சொல்லாமல் தனது பாதுகாப்பை மட்டும் நினைத்து பயந்து சென்றதை இதுவரை பார்த்ததில்லை என்று திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். மேலும், ஆதவ் ஆர்ஜூனா மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என மக்களவை உறுப்பினர் ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.
கனிமொழி
இதுகுறித்து திமுக துணை பொதுச்செயலாளரும், நாடாளு மன்ற குழுத் தலைவருமான கனிமொழி சென்னையில் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: கரூரில் நடந்த துயரச் சம்பவத்தில் 41 பேர் இறந்ததுடன், தற்போதும் பலர் உயிருக்கு போராடி வருகின் றனர். இந்த விவகாரத்தில் அரசியல் மனமாச்சாரியங்களைத் தாண்டி முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் உடனே கரூர் சென்று, பாதிக் கப்பட்டவர்களை சந்தித்ததுடன் நிவாரணமும் வழங்கச் செய்தார்.
பாதிக்கப்பட்ட மக்களுடன் நின்றது திமுகவும், தமிழ்நாடு அரசும் தான். இந்த சம்பவத்தில் யார் மீது தவறு இருக்கிறது என்பது விசாரணையில் நிச்சயம் தெரியவரும். ஆனால், கரூரில் இத்தனை பிரச்சினை நடந்ததற்கு பிறகும், ஒரு கட்சியின் தலைவர் ஆறுதல்கூட சொல்லாமல் அங்கிருந்து புறப்பட்டதும், தன் பாதுகாப்பை மட்டும் நினைத்ததும் இதுவரை நான் பார்த்திராத ஒன்று. அவரால் முடியவில்லை என்றால் கூட அடுத்தகட்ட தலைவர்கள் மக்களுடன் நின்றிருக்க வேண்டும்.
திமுக உள்ளிட்ட பிற கட்சி களைச் சேர்ந்த 2-ஆம் கட்ட தலை வர்கள் மக்களுடன் நிற்கிறார்கள். அடுத்த கட்ட தலைவர்களோ, மாவட்ட நிர்வாகிகளோ கூட மக்களை வந்து சந்திக்காமல், உதவிகளைச் செய்யாதிருப்பது மனிதாபிமான மற்ற செயல். மக்களைப் பற்றியும், அவர்களின் பாதுகாப்பை பற்றியும் தான் நினைக்க வேண்டுமே தவிர, வன்முறையை தூண்டுவது போல் பேசுவது நிச்சயமாக உச்சகட்ட பொறுப்பின்மையாகும்.
ஒரு பிரச்சினையை அமைதி யாக்குவது தான் எந்த அரசியல் கட்சிக்கும் அழகு. வன்முறையை தூண்டும் பேச்சுகளை தவிர்க்க வேண்டும். அப்படி செய்ப வர்களாக இருந்தால், அவர்கள் அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள் என்றே கருத வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆ.ராசா
இதேபோல் ஆ.ராசா கூறிய தாவது: எப்போது மக்களுக்கு தேவை வருகிறதோ, அப்போது எங்கள் உயிரையும் பணையம் வைத்து களத்திலே போய் நிற்பதுதான் திமுக வரலாறு. கரோனா காலக்கட்டம் தொடங்கி பல்வேறு சம்பவங்களை உதார ணமாக கூறலாம். அதுபோலவே, இப்போதும் எங்கள் முதலமைச் சரும் செய்திருக்கிறார். இதிலே அரசியல் கிடையாது. ஆனால், இப்படி களத்திலே நிற்க வேண்டிய அந்த கட்சியின் தலைவர் பயந்து கொண்டு ஏன் சென்னைக்கு வந்தார்? அவர் ஒரு பிரபலமான நடிகர்.
அவர் இருந்தால் மீண்டும் கும்பல்கூடும். எனவே, அவர் திருச்சியில் தங்கிக் கொண்டு, நிர்வாகிகளை கொண்டு பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கியிருக்கலாமே, அவர்களிடம் குற்றவுணர்வு இருக்கிறது. அதனால் அவர்கள் ஓடிவந்துவிட்டார்கள் என்பதுதான் உண்மை.