கரூர், அக்.1 கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகிகள் 2 பேரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
41 பேர் பலி
கரூர் வேலுசாமிபுரத்தில் செப். 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி.மதியழகன், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநில இணைச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் மீது கரூர் நகர காவல்துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் தலைமறைவாக இருந்த மாவட்டச் செயலாளர் மதியழகன், அவருக்கு அடைக்கலம் கொடுத்த கட்சி நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோரை திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் தனிப்படை காவல்துறையினர் நேற்று முன்தினம் (29.9.2025) கைது செய்தனர்.
15 நாள் காவல்
பின்னர் அவர்களை கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில், நீதிபதி பரத்குமார் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி பரத்குமார் தவெகவினரிடம், “நீங்கள் உங்கள் தலைவரை முதலமைச்சர் மற்ற தலைவர்களைப்போல நினைத்து விட்டீர்களா? அவர் ஒரு ஸ்டார். அவரைப் பார்க்க ஏராளமானோர் வருவார்கள். அதை கணிக்க தவறிவிட்டீர்களா?” என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
அப்போது, காவல்துறையினர் தங்களை ஒருமையில் பேசுவதாக நீதிபதியிடம் தவெகவினர் முறையிட்டனர். அதற்கு நீதிபதி, “அவர்களை அடிக்கவோ, ஒருமையில் பேசவோ கூடாது” என காவல்துறையினருக்கு அறிவுறுத்தியதுடன், இருவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.