ராஜன்குறை கிருஷ்ணன்
பேராசிரியர்,
அம்பேத்கர் பல்கலைக் கழகம், புதுடில்லி
‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற நெகிழ வைக்கும், மகிழவைக்கும் நிகழ்ச்சியை தமிழ்நாடு அரசு சென்ற வாரம் வியாழனன்று நடத்தியது. எளிய, சாமானிய குடும்பப் பின்னணி கொண்ட பெண்களும், ஆண்களும் அரசின் புதுமைப்பெண், நான் முதல்வன், தமிழ் புதல்வன் போன்ற திட்டங்களின் உதவியுடன் கல்வியிலும், வாழ்விலும் ஏற்றம் பெற்றதை எடுத்துக்கூறும் நிகழ்ச்சியாக அது அமைந்தது, அனைத்து தரப்பினரையும் பாராட்ட வைத்தது.
அந்த மகிழ்ச்சியை முற்றிலும் குலைக்கும் வகை யில் கரூரில் சனிக்கிழமையன்று பெருந்துயரம் அரங்கேறியுள்ளது. நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்திற்காக சனிக்கிழமை தோறும் செய்யும் பரப்புரைப் பயணத்தில் அன்றைக்கு நாமக்கல்லுக்கும், கரூருக்கும் சென்றார். மாலை ஏழரை மணி அளவில் அவர் கரூரில் பேசும்போது கூட்ட த்தில் ஏற்பட்ட கட்டுங்கடங்காத நெரிசலில் சிக்கி 40 பேர் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மரணமடைந்தனர்.
இந்தியாவில் தமிழ்நாட்டின் வளர்ச்சி கண்டு அழுக்காறு கொள்ளும் கூட்டம் உடனே இதுதான் கல்வியில் சிறந்த தமிழ்நாடா, சினிமா மோகத்தில் சிக்கிச் சீரழியும் நாடு அது என்றெல்லாம் பேசத் தொடங்கியது. இன்னொரு கூட்டம் வழக்கம் போல தி.மு.க-.தான் சினிமாவையும், அரசியலையும் கலந்தது என்று பிலாக்கணம் வைக்கத் துவங்கியது. இதுதான் பெரியார் மண்ணா, நடிகனைக் காணப்போய் மடிந்துபோகிறார்கள் என்று பொங்குகிறார்கள்.
உலகின் எந்த பெரிய தீர்க்கதரிசியும், மகானும், சிந்தனையாளரும் தாங்கள் பிறந்த மண்ணை முற்றாக பொன்னுலகாக மாற்றியதில்லை. காந்தி பிறந்த, பெருமளவு வாழ்ந்த குஜராத் மண்ணில்தான், இந்தியா வில்தான் மதவாத வன்முறை பேயாட்டம் போட்டது. இன் னும் எத்தனையோ உதாரணங்கள் சொல்லலாம். அதற்காக சமகால இந்தியாவை உருவாக்கியதில் காந்திக்கு பெரும்பங்கு இல்லை யென்று சொல்ல முடியாது. பெரியாரே இந்தியா விற்கு காந்தி தேசம் என பெயரிட வேண்டு மென்று கூறினார்.
முதலில் நாம் திராவிட இயக்கத்திற்கும், சினிமா விற்கும் உள்ள தொடர்பை புரிந்துகொள்ள வேண்டும். பின்னர் நாயக நடிகர்கள் அரசியல் தலைவர்களாக மாறுவது எப்படி நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதன் பிறகுதான் நடிகர் விஜய் கட்சி துவங்கியிருப்பதில் உள்ள அரசியல் போதாமை என்ன, ஏன் இந்த உயிரிழப்பு கரூரில் நிகழ்ந்தது என்பதை பிரித்தறிந்து புரிந்துகொள்ள வேண்டும். உண்மையான தத்துவார்த்த மானுடவியல் புரிதல் உருவாக வேண்டும் என்றால் சற்றே பொறுமையாக வரலாற்றை அணுகவேண்டும்.
இருபதாம் நூற்றாண்டில்
சினிமாவும், அரசியலும்!
சினிமாவும், அரசியலும்!
உலகின் பல நாடுகளிலும் சினிமா அதன்துவக்கம் முதலே அரசியல் பிரசாரத்திற்கு, அல்லது தேசிய கருத்தியலை உருவாக்க பயன்பட்டது. அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி, இத்தாலி என பல நாடுகளைச் சொல்லலாம். இந்தியாவிலும் காலனீய எதிர்ப்பு தேசிய உணர்வு சினிமாவை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தது. தமிழ் சினிமாவிலும் கூட தேசிய விடுதலைக் கருத்தியல் பேசப்பட்டதை ஆய்வாளர் தியோடர் பாஸ்கரன் தன்னுடைய Message Bearers நூலில் தொகுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் தேசிய விடுதலை தவிர சமூக நீதிக் கருத்துக்களும் சினிமாவில் புகுந்தன. இதற்கு பல காரணங்கள் இருந்தன. நாடகம், சினிமா இரண்டிலுமே புராணக் கதைகளே ஆக்கிரமித்திருந்த நிலையில் சமகால சமூகக் கதைகளை நாடகமாக்க வேண்டும், சினிமா ஆக்கவேண்டும் என்ற விருப்பம் பலருக்கும் இருந்தது. ஆனால் தமிழ் உரைநடை என்பது ஒருபுறம் எழுத்தில் பண்டி தத்தனமாகவும், மற்றொருபுறம் வடமொழி கலந்த தாகவும், பேச்சு வழக்கில் ஜாதீய கொச்சைகள் நிறைந்ததாகவும் இருந்தது.
இந்த நிலையில்தான் அண்ணா, கலைஞர் உள்ளிட்ட பலர் மக்களுக்கு அணுக்கமான ஒரு புதிய உரைநடையை பேச்சிலும், எழுத்திலும் உரு வாக்கினர். அதையே நாடகங்களிலும், பின்னர் சினிமாவிலும் வசனமாக பயன்படுத்தினர். அந்த மொழி நடை அடுக்குமொழியாகவும், ஓசை நயமிக்க சொல்லணியாகவும் அமைந்ததால் மக்களி டையே பெரும் செல்வாக்குப் பெற்றது. அந்த மொழிநடையுடன் சமூக நீதிக் கருத்துகளையும் இணைத்ததால் நாடகங்களும், சினிமாவும் மக்களி டையே பெரும் வரவேற்பைப் பெற்றன.
அந்த திராவிட தமிழ் அலையில் உருவான நட்சத்திரங்கள்தான் எம்.ஜி.ஆரும், சிவாஜியும். அதில் சிவாஜி குணசித்திர நடிகராகவும்,
எம்.ஜி.ஆர். தார்மீக சாகச கதாநாயகனாகவும் இணைந்து தமிழ் நவீன தன்னிலையின் இருபகுதிகளாக மாறியதில் பெரும் சமூக முக்கியத்துவம் பெற்றனர். சிவாஜி தி.மு.க.வில் ஒரு பகுதியினரின் எதிர்ப்பால் விலகிச் சென்று காமராஜருக்கும், காங்கிரசிற்கும் நெருக்கமானார். எம்.ஜி.ஆர். திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து பயணித்தார். கட்சியுடன் சேர்ந்து வளர்ந்தார். கட்சியின் கருத்தியலை திரைக் கதையாடல்களாக மாற்றினார். இருபதாண்டு காலம் கட்சியுடன் பிணைந்த நாயக நடிகராக கட்சியின் கருத்துக்களை வசனங்களிலும், பாடல்களிலும் வெளிப்படுத்தி அத்துடன் முழுவதுமாக அடையாளப் படுத்திக்கொண்டார். எழுத்தறிவு பரவாத சமூகத்தில் திரைப்படங்களே வெகுஜனக் கல்வி வடிவமாக விளங்கியது எனலாம். அது தமிழ் சமூகத்தின் தன்னு ணர்வை செழுமைப்படுத்தியது என்பதே உண்மை.
எம்.ஜி.ஆர். ஏழ்மையில் வளர்ந்தவர் என்பதால் அடித்தட்டு சமூகத்தை அறிந்தவர். அண்ணா மறைவிற்குப் பின் அவர் கலைஞருடன் முரண்பட்டு கட்சியைப் பிளந்து புதிய கட்சியை உருவாக்கிய போது அவருக்கு மாநிலம் முழுவதும் கட்சிக் கட்ட மைப்பும். தொண்டர் பலமும் உடனே கிடைத்தது. நாவலர் உட்பட பல இரண்டாம் கட்ட தலைவர்கள் அவருடன் இணைந்தனர்.
நாயக நடிகர்கள் நேரடியாக
அரசியல் தலைவராக முடியுமா?
அரசியல் தலைவராக முடியுமா?
திரைப்படத் துறையில் எம்.ஜி.ஆருக்கு இணை யாகச் செல்வாக்கு பெற்றிருந்த சிவாஜி கணேசனால் அரசியல் தலைவராக முடியவில்லை. ஏனெனில் அவரது கதாநாயக பிம்பம் குணசித்திர வார்ப்பாக இருந்தது. அவரும் சாகசப் படங்களில் நடித்தாலும் அவரது சிறப்பம்சம் அவர் ஏற்கும் கதாபாத்திரமாகவே மாறுவதாக இருந்தது. எம்.ஜி.ஆர். தன் னையே ஒரு கதாபாத்திரமாக மாற்றிக் கொண்டதைப் போல, சிவாஜியால் செய்ய முடிய வில்லை. இந்த உண்மை எம்.ஜி.ஆர். என்ற நாயக நடிகர் கட்சித் தலைவராக, முதலமைச்சராக மாறியது பிறரால் பின்பற்ற இயலாதது என்பதை உடனடி யாகத் தெளிவாக்கியது.
எம்.ஜி.ஆர். போல வெற்றி கரமாக கட்சித் தலை வராக, முதலமைச்சராக மாறிய மற்றொருவர்
என்.டி.ஆர். எனப்பட்ட என்.டி.ராமராவ். இவர் ஆந்திராவில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்று இல்லாத நிலையில் அதில் கடும் கோஷ்டிப் பூசல் நிலவிய தால் அந்த கட்சியின் தலைவர்கள் பலரை ஈர்த்துதான் தன் கட்சியைக் கட்டிக் கொண்டார். அவர் மருமகன் சந்திரபாபு நாயுடுவே காங்கிரஸ் அமைச்சராக இருந்த வர்தான்; சஞ்சய் காந்திக்கு நெருக்கமாக இருந்தவர்.
என்.டி.ஆர். புராணப் படங்களில் கிருஷ்ணர் உள்ளிட்ட தெய்வ வேடங்களைத் தாங்கியவர் என்பது டன், பல படங்களில் எம்.ஜி.ஆர். போல தார்மீக சாகச நாயகனாகவும் நடித்தவர். இள மைக்கால வாழ்வில் சமூக அமைப்பை நன்கு பழகி அறிந்தவர். ஆந்திராவில் காங்கிரசிற்கு மாற்று இல்லாத சூழ்நிலையில் அந்த கட்சியின் ஒரு பகுதியினரைக் கொண்டுதான் அவர் தெலுங்கு தேசம் கட்சியை உருவாக்கிக் கொண்டார். ஆனால் பிற்காலத்தில் தெலுங்கு சினிமாவில் பெரும் சாகச நாயகனாக புகழ்பெற்ற சிரஞ்சீவியால் கட்சியைத் துவங்கி வெற்றி பெற முடியவில்லை.
இந்த உதாரணங்களை வைத்துப் பார்க்கும் போது ஒரு நாயக நடிகரின் பிம்பம் எப்படிப்பட்டது, அவர் தலைமை ஏற்க ஏற்கனவே உருவான ஒரு கட்சியின் கட்டுமானம் கிடைக்குமா, அவர் தலைவ ராகும் சூழ்நிலை நிலவுமா என பல்வேறு காரணி களை வைத்துதான் ஒரு நாயக நடிகர் வெற்றிகரமான கட்சித் தலைவராக, முதல்வராக மாற முடியும் என்பது தெளிவாகிறது. ஓரளவு சிறிய கட்சிகளை உருவாக்கி, பிற கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து சில தொகுதிகளில் வெல்லலாமே தவிர எம்.ஜி.ஆர். போலவோ, என்.டி.ஆர். போலவோ முதலமைச்சராக வெல்வது சாத்தியமில்லை எனலாம். ஜெயலலிதா எம்.ஜி.ஆருடன் கதாநாயகியாக நடித்து, அவரால் கட்சியில் இணைக்கப்பட்டதால் தன்னை அவருடைய வாரிசாக நிறுவிக்கொண்டு அவர் கட்சிக் கட்டுமானத்தை கைப்பற்ற முடிந்தது.
எம்.ஜி.ஆர். போல ஆட்சியைப் பிடிக்கும் முயற்சி புதிதாக கட்சி தொடங்கிய பிரபல கதாநாயகர்கள் யாருக்கும் சாத்தியமாகவில்லை என்பதே உண்மை. பாக்கியராஜ், டி.ராஜேந்தர், கார்த்திக், சரத்குமார், கமல் ஹாசன் என பலர் முயற்சித் துள்ளனர். யாருமே ஒரு கட்சிக் கட்டுமானத்தை உருவாக்கி அரசியலில் ஒரு முக்கியத் தலைவராக, முதலமைச்சர் வேட்பாளராக பரிணமிக்க முடியவில்லை. விஜய்காந்த் பத்து சதவீத வாக்கு வரை பெற்றாலும் அவரால் தொடர்ந்து கட்சியை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. பத்தே ஆண்டுகளில் முதலமைச்சர் வேட்பாளராக அவர் போட்டியிட்ட தொகுதியிலேயே தோல்வி அடைந்தார்.
விஜயின் பதவி மோக அரசியல்
மக்களாட்சியில் யார் வேண்டுமானாலும் கட்சி துவங்கி, ஆட்சியைப் பிடிக்கலாம் என்பது உண்மை தான். நாயக நடிகர்கள் தலைவராகலாம் என்பதும் உண்மைதான். ஆனால் எத்தகைய களப்பணி செய்து அரசியலில் கால் பதிக்க வேண்டும் என்பதுதான் கேள்வி. களத்திற்கு செல்லாமல், மக்கள் பணியில் ஈடுபடுத்திக்கொண்டு கட்சிக் கட்டமைப்பை வேர் மட்டத்திலிருந்து உருவாக்காமல், தன் நாயக பிம்ப வெளிச்சத்தை வைத்து நேரடியாக ஆட்சியைப் பிடிக்கலாம் என்று நினைப்பதைத்தான் பதவி மோக அரசியல் என்று கூற வேண்டியுள்ளது. அதாவது அரசியல் என்பதே நேரடியாக முதலமைச்சராக பதிவி யேற்பதுதான் என்று எண்ணுவது அப்பட்டமான பதவி மோகமே தவிர அரசியல் ஈடுபாடு அல்ல. அரசியல் ஈடுபாடு என்பது மக்கள் பணிதானே தவிர ஆட்சி அதிகாரமல்ல.
உண்மையில் மக்கள் பணி செய்ய விருப்பமிருந்தால் ஒரு நாயக நடிகர் என்ன செய்ய வேண்டும்? ஒவ்வொரு ஊராக சென்று மக்களிடையே பழக வேண்டும். அவர்கள் தேவைகள் என்ன என்று புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் போராட்டங்களில் பங்கெடுக்க வேண்டும். தன்னை பின்பற்றுபவர்களைக் கொண்டு கட்சிக் கிளைகளை உருவாக்க வேண்டும். அந்த வேர்மட்ட செயல்பாட்டாளர்களுடன் நெருங்கிப் பழக வேண்டும். அவர்களிலிருந்து தங்கள் செயல்பாடுகள் மூலம் தலைமைப் பண்புடன் வெளிப்படுபவர்களைக் கொண்டு கட்சியின் இரண்டாம் கட்ட தலைமையை உருவாக்க வேண்டும். எல்லா மட்டங்களிலும் கட்சிக்குள் ஏற்படக்கூடிய முரண்பாடுகள், சமூக முரண்பாடுகள் எல்லாவற்றிற்கும் முகம் கொடுத்து, தன் தலைமைப் பண்பை நிறுவ வேண்டும். பின்னர்தான் தேர்தல், ஆட்சி எல்லாம் சாத்தியப்படும்.
இவ்வாறு தானே கட்சியை வேர்மட்ட த்தில் கட்ட முடியாது என்றால், வேறொரு கட்சியில் இணைந்து பணியாற்ற வேண்டும். அந்த கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்து தன்னை தலைமைப் பொறுப்பிற்கு தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இதிலும் பத்திருபது ஆண்டுகள் பயணமே ஒருவரை பக்குவப்படுத்தும்.ஆனால் அப்படி யாருடைய தலைமையையும் ஏற்று பணியாற்ற முடியாது, நான் பிரபல கதாநாயகன் என்பதால் நேரடியாக முதல மைச்சராகத்தான் பதவி ஏற்பேன் என்பது சாத்தியமற்ற ஒரு வேட்கை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
வாரிசு அரசியல் தலைமை என்பதும் சுலபமான தல்ல. கட்சித் தலைவர்களின் ஆதரவைப் பெற வேண்டும். கட்சி கட்டமைப்பின் வேர் மட்டம் வரை சென்று பரிச்சயம் கொள்ள வேண்டும். பல்வேறு முரண்பாடுகளை, சிக்கல்களை தீர்க்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதில் கெட்ட பெயர் ஏற்பட்டு நிராகரிக்கப்படும் வாய்ப்பு அதிகம் என்பதால் மிகுந்த பொறுப்புடன் பணியாற்ற வேண்டும். எல்லா வாரிசு தலைவர்களும் கட்சியினர் ஆதரவையும், அவர்கள் மூலம் மக்கள் ஆதரவையும் பெற்றுவிடுவதில்லை என்பதால் வாரிசு தலைமை என்பதும் ரோஜாப் பூக்களாலான பாதையல்ல. முழுப் பொறுப்பையும் தன் தோளில் ஏற்கும் முன் நிறைய பக்குவப்பட வேண்டும்.
கூட்டக் காட்சி அரசியல்
விஜய்க்கு ஆட்சி செய்ய ஆசை இருக்குமளவு அரசியலில் ஆர்வம் இருக்கிறதா என்றே தெரிய வில்லை. ஏனெனில் அப்படி இருந்தால் அரசியல் குறித்து நிறைய பேசுவார். செய்தியாளர்களை சந்திப்பார். பிற அரசியல் தலைவர்களைச் சந்திப்பார். கட்சிக்காரர்களுடன், பல்வேறு மக்கள் பிரிவினருடன் தொடர்ந்து விவாதிப்பார். ராகுல் காந்தி பதினைந்து ஆண்டுகளாகத் தீவிரமாக இவ்விதம் இயங்கி வருகிறார். அவரை சந்தித்தவர்கள் எல்லோருமே அவர் ஆழ்ந்த கவனத்துடன் உரையாடுவதாக, பிரச்சினைகளை அலசி ஆராய்வதாக வியப்புடன் கூறுவதைப் பார்க்கலாம். ஒவ்வொரு நாளும் ராகுல் காந்தி தன்னை ஒரு தேசியத் தலைவராக செதுக்கிக் கொண்டு வருகிறார்.
விஜய் அப்படி எந்த நடவடிக்கைகளிலும் ஈடு படுவதாகத் தெரியவில்லை. பத்திரிகையாளர்களைச் சந்திப்பதில்லை. அவருடன் ஆலோசனையில் பங்கேற்றதாக எந்த சமூக சிந்தனையாளரும் கூறு வதில்லை. மாறாக ஒரு சில தொழில்முறை அரசியல் ஆலோசகர்கள் தயாரிக்கும் நிகழ்வுகளில் அவர்கள் கூறிய படி செயல்படுகிறார் என்று கூறப்படுகிறது. உதாரணமாக அவர் நீட் தேர்வினால் உயிரிழந்த அரியலூர் மாணவி அனிதா வீட்டிற்கு சென்றபோது தரையில் அமரும்படியும், அனிதாவின் சகோதரர் தோளில் கை போடும் படியும் சொல்லி அனுப்பியதாக மணிகண்டன் வீராசாமி என்பவர் கூறுகிறார்.
கட்சி அமைப்பை உருவாக்குவதையே விஜய் அவுட்சோர்ஸிங் செய்திருப்பதாகத் தோன்றுகிறது. புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா என சிலரிடம் அவர் அந்த பொறுப்புகளைக் கொடுத்து விட்டார். அவர்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளுக்கு சென்று பங்கேற்கிறார். மக்கள் திரளைக் கூட்டி கூட்டக்காட்சி (crowd optics) ஏற்பாடு செய்துவிட்டால் மக்களெல்லாம் தான் சொல்பவர்களுக்கு எல்லா தொகுதிகளிலும் வாக்களித்து வெற்றி பெறச் செய்வார்கள் என நம்புகி றார். அப்படி கூட்டக் காட்சி நடக்கும்போது ஏதோ பேச வேண்டுமே என்று தயாரிக்கப்பட்ட உரைகளை தப்பும் தவறுமாக வாசிக்கிறார். அந்த உரைகளில் இடம்பெறும் தகவல் பிழைகளை யார் சுட்டிக் காட்டினாலும் அவர் கவலைப்படுவதில்லை.
ரசிகர்கள், பாமர மக்கள்
மனோநிலை
மனோநிலை
இத்தகைய உள்ளீடற்ற பதவி மோக அரசியலில் விஜய் ரசிகர்கள்சிக்கி சீரழிவதுதான் வேதனை. அவர்களைப் பொறுத்தவரை தாங்கள் புதிய வரலாறு படைப்பதாக நம்புகிறார்கள். கல்லூரி ஸ்டிரைக்கில் பங்கெடுத்த அனுபவம் உள்ளவர்களுக்கு அந்த மனநிலை புரியும். என்னுடைய கல்லூரி நாட்களில் ஒருமுறை ஸ்டிரைக் செய்த போது என் சக மாணவன் ஒருவன் பிரின்ஸிபல் அறைக்குத் தீவைக்கலாமா என்று கேட்டான். விடுதியில் வழங்கப்படும் உணவு தரமாக இல்லை என்றுதான் ஸ்டிரைக். ஆனால் அதை ஏதோ யுகப்புரட்சி போல நினைக்கும் விடலைப் பருவம்.
பாமர மனிதர்கள் எல்லா காலங்களிலும் தங்கள் குறைகள் தீர்க்கப்பட வில்லை என்ற ஏக்கத்துடன்தான் இருப்பார்கள். அடித்தட்டு மக்களுக்கு நிறைய குறைகள் இருக்கும். அதனால் யாரேனும் ஒரு மீட்பர் உருவாகி பொன்னு லகை படைப்பார்கள் என்ற ஏக்கம் அல்லது கனவு இருக்கும். எவ்வளவு அரசியல் மயப்படுத்தப்பட்ட சமூகத்திலும் ஒரு சாராருக்கு இதுபோல யுகப்புரட்சி கனவுகள் இருக்கும். அது மதவாத வடிவமெடுக் கலாம்; புரட்சிகர வடிவமெடுக்கலாம். அல்லது ஏதோவொரு தற்செயலான கவர்ச்சிகர பிம்பத்திற்கு பின்னால் செல்லலாம்.
உலகிலேயே நவீன மக்களாட்சி சமூகங்களில் மூத்த சமூகம் அமெரிக்காதான். அங்கே மக்களாட்சிக் குடியரசு உருவாகி இருநூற்றைம்பது ஆண்டுகள் ஆகப் போகிறது. அந்த சமூகத்தில் டொனால்ட் டிரம்ப் என்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற ரியல் எஸ்டேட் வியாபாரி, வெகுஜன ஆதரவுடன் அதிபராகி உலகையே கிலியில் ஆழ்த்தி வருவதைப் பார்க்கிறோம். அவருக்கு மன நிலை சரியாக உள்ளதா என்பதைக் குறித்தே பலரும் சந்தேகம் தெரிவித்துள்ளார்கள்.
இத்தாலியை எடுத்துக்கொண்டால் குடியரசுத் தத்துவத்திற்கு மிகப்பெரும் பங்களிப்பை செய்த நாடு அது. ரோமப் பேரரசின் காலத்திலும் சரி, பதினைந்தாம் நூற்றாண்டின் மறுமலர்ச்சிக் காலத்திலும் சரி, இத்தாலி பல அரசியல் தத்துவங்களின் பரிசோதனைக் களமாக இருந்தது. அத்தகைய நாட்டில் பெர்லுஸ்கோனி (Silvio Berlusconi, 1936-2023) என்ற எதேச்சதிகாரி வெகுஜன ஆதரவுடன் கோலோச்சியதையும் பார்த்தோம். எனவே தமிழ்நாட்டில் விஜய் போன்ற நடிகர் பின்னால் முதிரா இளைஞர்கள் சிலரும், எளிய மக்கள் சிலரும் திரள்வது அதிசயமல்ல.
நம்முடைய அரசியல் முதிர்ச்சி அவரை விமர்சன ரீதியாக எதிர்கொள்வதன் மூலம், கண்டிப்பதன் மூலம் இத்தகைய ‘துர்ச்சம்பவங்கள்’ நிகழாமல் தடுக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். அதற்காக நாம் வெற்றிகரமாக உருவாக்கியுள்ள திராவிட தமிழர் என்ற முற்போக்கு அரசியல் சமூகத்தை குறைகூறத் தேவையில்லை. எந்த விரும்பத்தகாத சம்பவம் நிகழ்ந்தாலும் திராவிட அரசியலைக் குறைகூறும் பார்ப்பனீய சமூக நினைவில் மனதை எச்சரிக்கையுடன் கண்காணிக்க வேண்டும்..
நன்றி: ‘முரசொலி’, 30.9.2025