பாதிப்புக்குக் காரணமான நடிகரோ பழி தூற்றுகிறார் அவருக்குப் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்துவிட்டது!

3 Min Read

மூன்று நாள்களுக்குப் பின் வாய் திறந்த நடிகர் பேச்சு எதைக் காட்டுகிறது?
பாதிக்கப்பட்ட மக்களிடத்தில் சென்று உடனடி நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் மீது
பாதிப்புக்குக் காரணமான நடிகரோ பழி தூற்றுகிறார்
அவருக்குப் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்துவிட்டது!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

நடிகர் விஜய் கலந்துகொண்ட கரூர் நிகழ்ச்சியில், 41 பேர் பரிதாபமாக மரணமடைந்தனர். அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள சென்னையிலிருந்து ஓடோடிச் சென்றவர் தமிழ்நாடு முதலமைச்சர்; கரூரில் உயிர்ப் பலிக்குக் காரணமாக இருந்த நடிகரோ முதலமைச்சர்மீது பழி போடுகிறார்!  இவருக்குப் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. இருப்பது வெளிச்சத்திற்கு வந்துவிட்டது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

‘குதிரை கீழே தள்ளியது மட்டுமல்லாமல், குழியும் பறித்தது’ என்ற பழமொழிக்கொப்ப, கரூர் பேரிடருக்கு மனிதாபிமானமற்று, ஒரு கட்சித் தலைமைக்கு உரிய பண்பு சிறு துளியும் இல்லாது, இன்னமும் அந்தப் பேரிடருக்கு வருத்தம் தெரிவித்து மக்களிடம் மன்னிப்புக் கேட்டு, சினிமா கவர்ச்சி ஆர்வத்தினால் தன்னைப் பார்க்கத் திரண்ட தன் ரசிகர்கள் அல்லது ஆர்வலர்களிடம் கரூர் கோர சம்பவத்திற்கும், வரலாறு காணாத பேரிழப்புக்கும் சற்றும் பொறுப்பேற்காது, ஏதோ தி.மு.க. அரசின் முதலமைச்சர் இவரைப் பழிவாங்கத் துடிப்பதாகவும், அதை இவர் பெரிய ‘ஹீரோ’போல் – சினிமாவில் வரும் வசனம் பேசுவதற்குக் கரூர் பேரிடர் என்பது பரபரப்பூட்டும் சினிமா அல்ல.

திரைக்கதை வஜனம் பேசுவதா?

41 உயிர்ப் பலிகள், சுமார் 150, 200 பேர் (நாமக்கல்லி லும், கரூரிலும்) காயமுற்றும், மூச்சுத் திணறலால் தமது வாழ்வாதாரத்தை இழந்த குடும்பத்தினர் பரிதவிப்பதோடு, தமிழ்நாட்டிற்குத் தீரா அவமானத்தை உலக மக்கள் மத்தியில் ஏற்படுத்திய இந்தப் பொறுப்பற்ற போக்காளி, மூன்று நாள்கள் கழித்து, மீண்டும் ‘திரைக்கதை போல வஜனம்’ பேசி மக்களைத் திசை திருப்பி விடுகிறார்.

இரவு, பகல் பாராது பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறி, வாழ்வதற்கு நம்பிக்கை அளித்த முதலமைச்சர் மீது பழிதூற்றியிருப்பதன்மூலம், நடிகர் விஜய் என்ற திரை முகமூடிக்குப் பின்னால் யார் இருப்பபது என்பது வெளிப்பட்டுள்ளது.  மனிதநேயமும், மனிதமும் அற்ற ஒரு காட்சிப் பதிவில்,
ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. பின்னணி இருக்கும் உண்மை வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது.

இவர்,  யாருடைய கருவியாக அரசியல் தளத்தில், தி.மு.க. ஆட்சிக்கு எதிராகக் களமிறக்கப்பட்டுள்ளார் என்பது அப்பட்டமாக வெளியாகி, அவரது முகமூடி கழற்றப்பட்டு, கவர்ச்சி அரிதாரம் மறைந்து, உண்மை முகம் மக்களுக்குத் தெரிய ஆரம்பித்துவிட்டது!

அவரது தற்போதைய அரசியல் வாழ்க்கைக்குப் பின்னணியில் இருப்போர் எரியும் நெருப்பில் நெய்யை ஊற்றி அணைக்க அவரைப் பணித்திருப்பது, அவருடைய கட்சிக்கே ஊறுவிளைவிக்கும்! பின்னணியில் இருந்து இயக்கும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. அரசியல் இப்போது வெளிச்சத்திற்கு வர, அவரோ தனது திரையில், அறியாமையையும், அகம்பாவத்தையும் வெளிப்படுத்திக் கொண்டுள்ளார்.

சிவகங்கையில் முதலமைச்சர்
நடந்து காட்டிய முன்மாதிரி!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல்துறை யினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞர் உயிரிழந்ததையொட்டி, அவரது தாயிடமும், தம்பியிடமும், குடும்பத்தாரிடமும் ஆறுதல் கூறி, வாழ்வாதாரப் பாதுகாப்பும் தந்து, தவறுக்கு வருந்திப் பேசினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அது வல்லவா பண்பு, மனிதநேயம்!

கரூர் பேரிடரின்போதும், இரவே அங்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இறந்தவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தியும், அவர்களது உறவினர்களுக்கும்,  காயமடைந்தவர்களுக்கும் ஆறுதல் கூறி, பிறகு  நடு நிசியில் செய்தியாளர்கள் சந்திப்பின்போதுகூட, ‘இதனை அரசியலாக்கிட வேண்டாம்’ என்று கனிந்த மனிதாபிமானத்துடன் கூறினார்.

‘‘விஜய்யை கைது செய்வீர்களா?’’ என்று செய்தி யாளர்கள் கேட்ட கேள்விக்கு,

ரசிகர்கள்  ஆர்.எஸ்.எசுக்குக் குத்தகை விடப்பட்டனரா?

‘‘ஒரு நபர் ஆணையம் அமைத்துள்ளதன்படி, அந்நீதிபதியின் விசாரணை அறிக்கை வந்த பிறகு, அரசு நடவடிக்கை எடுக்கும்’’ என்றும் கூறிய அவரது பெருந்தன்மைக்கு முன், நனிநாகரிகத்திற்குமுன், இந்த ஆணவ, அகம்பாவப் போக்கில், தங்களது தொண்டர்க ளைக் காப்பாற்றாமல், தன்னைக்  காப்பாற்றிக் கொள்ளும் நடவடிக்கையில் தானே இறங்கியுள்ளார் இந்த நடிகர்?

அரசியல் கட்சியாக இன்னும் உண்மையாக மாறிடாத தனது வெறும் ரசிகர் மன்றங்களை ஆர்.எஸ்.எசுக்குக் ‘‘குத்தகை’’ விட்டுள்ளார் என்பதுதான் இதன் பின்னே ஒளிந்திருக்கும் உண்மை உலாவரத் தொடங்கிவிட்டது!

இந்த லட்சணத்தில், நாடாளும் ஆசை வந்து, இப்படி மக்களைப் பலியாக்க வேண்டுமா?

மக்களே, சிந்தியுங்கள்! கானல் நீரைக் கண்டு கொள்ளுங்கள்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை  

1.10.2025  

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *