சென்னை, செப். 30- கரூர் துயர சம்பவத்திற்கு முழுக் காரணம் த.வெ.க. மட்டுமே! கரூர் சம்பவத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மின்னல் வேகத்தில் செயல்பட்டுள்ளார். இதைவிட முதலமைச்சர் என்ன செய்ய முடியும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இன்று (30.9.2025) காலை 11 மணியளவில் ம.தி.மு.க. தலைமையகம் தாயகத்தில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு வரலாற்றில் நடைபெறாத கொடுந்துயர் பேரவலம் கரூரில் நடந்துள்ளது. த.வெ.க. தலைவர் விஜய் பரப்புரைக்கு பின்னர் கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 16 பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொது வாழ்க்கைக்கு வருபவர்கள் தங்களுக்கு வருகிற கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், கட்டுப்படுத்தவும் வேண்டும். விஜய் கரூர் எல்லைக்கு இரவு 7.30 மணிக்கு தான் செல்கிறார். அங்கு கூட்டம் இரு மடங்காக மாறிவிட்டது.
8 மணி நேரம் கரூரில் மக்கள் காத்து இருக்கிறார்கள். இவ்வளவு நேரம் காத்திருக்கின்றனர் என்று தெரிந்தும் விஜய் ஏன் தாமதமாக வரவேண்டும். விஜய் எச்சரிக்கையுடன் செயல்பட்டிருக்க வேண்டும்.
கரூர் சம்பவத்தில் பொறுப்பை ஏற்கவேண்டியது த.வெ.க.வினர்தான். பொது மக்களும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். 2 வயது, 8 வயது குழந்தைகளை கூட்டத்திற்கு அழைத்து வந்திருக்கலாமா?
கூட்டத்தின் தன்மையை பார்த்து விஜய் செயல்பட்டிருக்க வேண்டும். கூட்டத்தை பார்த்து பயம், பதட்டம் இருக்க வேண்டும். இந்த கொடூரமான துயரம் நெஞ்சை வெடிக்கச் செய்கிறது. கணவன் மனைவி ஆக வேண்டிய இருவர் இறந்து விட்டனர்.
மக்கள் கோபம் நம்மீது ஏற்பட்டு விடும் என்ற நோக்கில், கரூர் சம்பத்திற்கு தமிழ்நாடு அரசு மீது பழி போடுகிறார்கள். காவல்துறையின் நிபந்தனைகளை ஒன்றையாவது த.வெ.க.வினர் கடைப்பிடித்தார்களா?
தி.மு.க. ஆட்சி அடுத்து வரகூடாது என்று வெறிப்பிடித்தவர்கள் குறை சொல்கிறார்கள். பா.ஜ.க.வினர் இச்சம்பவம் குறித்து உண்மை கண்டறியும் குழு ஒன்றை அமைத்துள்ளனர், பா.ஜ.க. உண்மையை யார் கண்டறிவது? பா.ஜ.க.வின் மோடி அரசு எப்படியாவது தமிழ்நாட்டில் நுழைய பார்க்கிறது. இந்த சம்பவத்திற்கு சிபிஅய் விசாரணை கேட்பது மிகவும் தவறு. சிபிஅய் பிஜேபியின் கைக்கருவிதான், பாஜக என்ன சொல்கிறதோ அதைத்தான் சிபிஅய் செய்வார்கள், திட்டமிட்டு அதிமுக, பாஜக, சிபிஅய் விசாரணையைக் கேட்கிறது.
சகிக்க முடியாத பெருந்துயர் என்பதால் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று பார்த்தார்.
த.வெ.க. நிர்வாகி ஆதவ் அர்ஜுனா புரட்சி வெடிக்க வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து விட்டு, பின்னர் அழித்துள்ளார்.
கரூர் சம்பவத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மின்னல் வேகத்தில் செயல்பட்டுள்ளார். இதைவிட முதலமைச்சர் என்ன செய்ய முடியும்? அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அரசியல் பண்பாட்டுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வரை நடந்து கொள்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரடியாக சொல்லாமல், த.வெ.க.வினர் மறைமுகமாக சகட்டு மேனிக்கு பேசுவதை நான் வன்மையாகக் கண்டிருக்கிறேன்.
கரூர் சம்பவம் திட்டமிட்ட சதி என்று சொல்வது ஒரு சதவீதம் கூட நம்ப முடியாதது. விஜய் வந்தபோது மூச்சு திணறல் காரணமாக பலர் இறந்துள்ளனர். இதற்கு பொறுப்பு த.வெ.க.வினர் தான். கரூர் சம்பத்தில் இருந்து விஜய் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என வைகோ அவர்கள் பேட்டி அளித்தார்.