கனத்த துயரத்தில் இருக்கிறேன் கரூர் சம்பவம் பற்றி அவதூறு பரப்ப வேண்டாம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கமான வேண்டுகோள்!

2 Min Read

சென்னை, செப். 30 –  ‘‘சோகமும், துயரமும் சூழ்ந்திருக்கும் இந்நிலையில் கரூர் சம்பவம் பற்றி அவதூறு பரப்ப வேண்டாம்’’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (29.9.2025) கரூர் சம்பவம் தொடர்பாக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து ஆற்றிய காணொலி உரை வருமாறு:–

கரூரில் நடந்தது பெருந்துயரம்; கொடுந்துயரம்!

இதுவரை நடக்காத துயரம்; இனி, நடக்கக்கூடாத துயரம்.

மருத்துவமனைக்கு நான் நேரில் சென்று பார்த்த காட்சிகள் இன்னும் என் கண்ணை விட்டு அகலவில்லை. கனத்த மனநிலையிலேயும் துயரத்திலேயும் தான் இன்னும் இருக்கிறேன்.

செய்தி கிடைத்ததும் மாவட்ட நிர்வாகத்தை முடுக்கிவிட்டு, எல்லா உத்தரவுகளையும் பிறப்பித்த பின்னாலும், என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை; உடனே அன்றைக்கு இரவே கரூருக்குப் போனேன்.

குழந்தைகள், பெண்கள் என்று 41 உயிர்களை நாம் இழந்திருக்கிறோம். இறந்தவர்களது குடும்பத்திற்கு, தலா பத்து லட்சம் ரூபாய் அறிவித்து, அதை உடனடியாக வழங்கிகொண்டு இருக்கிறோம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு, அரசு சார்பில் முழு சிகிச்சையை வழங்கி வருகிறோம்.

நடந்த சம்பவத்துக்கான முழுமை யான – உண்மையானகாரணத்தை ஆராய, மேனாள் நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில், ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட் டிருக்கிறது.

சமூக வலைதளங்களில் பொய்ச் செய்திகள்!

ஆணையத்தின் அறிக்கை அடிப் படையில், அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்று உறுதியளிக்கிறேன். இதற்கிடையே, சோஷியல் மீடியாவில் சிலர் பரப்பு கின்ற வதந்தி களையும், பொய் செய்தி களையும் பார்த்து கொண்டுதான் இருக்கிறேன்.

எந்தவொரு அரசியல் கட்சித் தலைவரும் தன்னுடைய தொண்டர் களும் -அப்பாவி பொதுமக்களும் இறப்பதை எப்போதும் விரும்ப மாட்டார்கள்.

இந்த சம்பவத்தில், உயிரிழந்தவர்கள் எந்த கட்சியைச் சார்ந்தவர்களாக இருந் தாலும், என்னை பொறுத்தவரைக்கும், அவர்கள் நம்முடைய தமிழ் உறவுகள்!

விஷமத்தனமான செய்திகளை தவிர்த்திடுவீர்!

எனவே சோகமும், துயரமும் சூழ்ந்திருக்கும் இந்த நிலையில், பொறுப்பற்ற முறையில் விஷமத்தன மான செய்திகளை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், இதுபோன்ற நிகழ்ச் சிகள் நடத்தும்போது, இனிவரும் காலங்களில், எத்தகைய பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்ற விதி முறைகளை வகுக்க வேண்டியது, நம் எல்லோருடைய கடமை!

விதிகள் – நெறிமுறைகள்  வகுக்கப்படும்!

எனவே, நீதியரசரின் ஆணைய அறிக்கை கிடைத்த பிறகு, எல்லா அரசியல் கட்சிகள், பொது அமைப்பு களோடு ஆலோசனை நடத்தி – இதற்கான விதிகள், நெறிமுறைகள் வகுக்கப்படும் என்று உறுதியளிக்கிறேன். அத்தகைய நெறிமுறைகளுக்கு எல்லோரும் ஒத்துழைப்பு தருவார்கள் என்று நம்புகிறேன்.

மனித உயிர்களே, எல்லாவற்றிற்கும் மேலானது! மானுடப் பற்றே அனை வர்க்கும் வேண்டியது!

அரசியல் நிலைப்பாடுகள், கொள்கைமுரண்பாடுகள், தனிமனிதப் பகைகள் என்று எல்லாவற்றையும் விலக்கி வைத்துவிட்டு,எல்லோரும், மக்களுடைய நலனுக்காக சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாடு எப்போதுமே நாட்டிற்கு பலவகைகளிலே முன்னோடியாக தான் இருந்திருக்கிறது.

இதுபோன்ற நிகழ்வுகள் இனி எந்த காலத்திலேயும்நடக்காமல் தடுக்க வேண் டியது நம் எல்லோருடைய கடமை!

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *