சென்னை, செப்.30- தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வயதான தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் மாதம் தோறும் 100 பேருக்கு உதவித்தொகை ரூ.7,500-மும், மருத்துவப்படி ரூ.500-மும் என மொத்தம் ரூ.8,000 வழங்கப்படுகிறது. இந்த எண்ணிக்கை 150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே இந்த திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் வயதான தமிழறிஞர்கள் https://tamilvalarchithurai. org/agavai/ என்ற இணையதளம் மூலமாகவும், நேரிலும் விண்ணப்பங்களை வழங்கலாம்.
இந்த உதவித்தொகை பெற கடந்த ஜனவரி 1-ஆம் தேதி 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், அந்தந்த மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர், உதவி இயக்குநர் அலுவலகங்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கிவரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகம், மதுரை மாவட்டத்தில் உலகத் தமிழ்ச்சங்க வளாகத்தில் இயங்கி வரும் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தின் வாயிலாக மட்டுமே அனுப்பப்பெற வேண்டும்.
சென்னையைச் சேர்ந்தவர்கள் எழும்பூரில் உள்ள தமிழ் வளர்ச்சி இயக்கக முகவரிக்கு நேரடியாக அனுப்பலாம். நிறைவு செய்யப் பெற்ற விண்ணப்பங்கள் நவம்பர் மாதம் 17ஆம் தேதிக்குள் வந்து சேரவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 6 நாட்களுக்கு
சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு
சென்னை, செப்.30 தமிழ்நாட்டில் இன்று (செப். 30) முதல் 6 நாட்களுக்கு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இன்று (30.9.2025) உருவாகக்கூடும். இதன் காரணமாக நாளை (1.10.2025) வடக்கு மற்றும் அதையொட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். மேலும், தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களிலும், அக். 2 முதல் 5-ஆம் தேதி வரை சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழ்நாடு கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக் கடல் பகுதிகளில் இன்று (30.9.2025) மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக் கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.