பூம்புகாரில் நடைபெற்ற கடல் ஆய்வில் ஓர் அரிய கண்டுபிடிப்பு
டென்மார்க் நாட்டைச் சேர்ந்த கப்பல் தென்பட்டது
டென்மார்க் நாட்டைச் சேர்ந்த கப்பல் தென்பட்டது
மயிலாடுதுறை, செப். 28– பூம்புகாரில் நடந்த கடல் ஆய்வில் டென்மார்க் நாட்டை சேர்ந்த கப்பல் தென்பட்டதாக தகவல் கிடைத்து உள்ளது. இதன் மூலம் கடல்வழிவாணிபத்தில் தமிழ்நாடு தலைசிறந்து விளங்கி யதற்கான ஆதாரம் கிடைத்ததா? என்று அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
கடல்வழி வாணிபம்
பண்டைய தமிழர்களின் மிகப்பெரிய கடல் வாணிப துறைமுகமாக தற்போதைய மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகார் பகுதி இருந்தது. காவிரிபூம்பட்டினம் என அழைக்கப்படும் பூம்புகார் சங்க காலத்தில் சோழர்களின் முக்கிய துறைமுக நகராகவும் விளங்கியது.
பூம்புகார் கடற்பரப்பில் தொல்லியல் துறையினரின் பண்டைய தமிழர்களின் வரலாறு குறித்த ஆய்வு கடந்த 19ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
பூம்புகார் முற்காலத்தில் வணிக துறைமுகமாகவும்,கரிகால் சோழன் காலத்தில் தலைநகரா கவும் விளங்கியுள்ளது. மேலும் மகான் பட்டினத்தார் பூம்பு காரில் பிறந்து கடல் வாணிபம் செய்ததாக சான்றுகள் உள்ளன.
கீழடி அகழாய்வில் தமிழர்களின் தொன்மை கால வாழ்க்கை முறை கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில், பூம்புகாரில் ஆய்வுப்பணிகள் தொடங்கி கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது.
தொல்லியல் துறை கல்வி மற்றும் கடல்சார் ஆய்வு ஆலோசகர் பேராசிரியர் ராஜன் தலைமையில், தமிழ்நாடு தொல்லியல் துறை இணை இயக்குநர் சிவானந்தம், துணை இயக்குநர் யத்தீஷ்குமார் மற்றும் தொல்லியல் துறை அலுவலர்கள் அடங்கிய 20 பேர் கொண்ட குழுவினர் பூம்புகார் கடலில் ஆய்வு செய்து வருகின்றனர்.
டென்மார்க் கப்பல்
தற்போது கடலில் இருந்து 5½ கிலோ மீட்டர் தூரத்தில் 22 மீட்டர் ஆழத்தில் இந்த ஆய்வுப் பணிகள் நடந்து வருகிறது. ஆய்வில், தமிழர்களின் பழைய அரிய மற்றும் புதிய சுவடுகள் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பூம்புகார் கடலில் 19 மீட்டர் ஆழத்தில் டென்மார்க் நாட்டை சேர்ந்த கப்பல் ஒன்று தென்பட்டுள்ளதாகவும், இந்த கப்பல் 18ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் எனவும் தகவல் கள் வெளிவந்துள்ளது.
முதல்கட்ட ஆய்வு
பூம்புகார் கடலில் தற்போது கப்பல் தென்பட்டுள்ளதன் மூலம் முற்காலத்தில் தமிழ்நாடு கடல்வழி வாணிபத்தில் தலைசிறந்து விளங்கியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதா? என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த ஆய்வின் முடிவில்தான் முழுமையான தகவல்கள் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பூம்புகார் கடலில் முதல்கட்ட ஆய்வுப் பணிகள் நேற்று நிறைவு பெற்றது.
ஆய்வின்போது சேகரிக்கப் பட்ட தகவல்கள் அனைத்தும் ஒரு அறிக்கையாக தயார் செய் யப்பட்டு தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.