திருச்சி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் நேற்றைய தினம் (25.5.2023) திருச்சி பெரியார் மாளிகையில் நடைபெற்றது!
தோழர்கள் பலர் கலந்து கொண்ட இந்நிகழ்வில், மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் கோர்வையாகப் பேசிய செய்தித் துளிகள் சில!
1) மே மாதம் 13 ஆம் தேதி ஈரோடு மாநகரில் நடைபெற்ற பொதுக் குழுத் தீர்மானங்களைத் தோழர்கள் சிறப்பாக நடத்தித் தர வேண்டும்!
2) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது!
3) தலைவர், துணைத் தலைவர், பொதுச் செயலாளர்கள், மாநில ஒருங்கிணைப்பாளர்கள், துணைப் பொதுச் செயலாளர்கள், மகளிரணி பொறுப்பாளர்கள், தலைமைக் கழக அமைப்பாளர்கள் எனச் சீரிய முறையில் வடிவமைக்கப்பட்டு, பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டு, சிறப்பான முன்னெடுப்புகள் தொடங்கியுள்ளன!
4) பொதுக் குழுவின் அற்புதமான தீர்மானங்களில் ஒன்றான சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, சேரன்மாதேவி குருகுலப் போராட்ட நூற்றாண்டு விழா, சிந்துவெளி அகழ்வாய்வுகள் மூலம் திராவிடர்களின் தொன்மை வரலாற்றை வெளிப்படுத்திய சர்ஷான் மார்ஷல் ஆய்வு நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா ஆகியவை நமது இரண்டாண்டு தொடர் பணிகள் என ஆசிரியர் தனித்துவமாகக் குறிப்பிட்டு முன்மொழிந்துள்ளார்கள்!
5) தோழர்கள் தாங்கள் வசிக்கும் மாவட்டம் குறித்து முழுமையாக அறிந்திருக்க வேண்டும். அவ்வகையில் திருச்சி கழக மாவட்டத்தில் மாநகராட்சி 1, வார்டுகள் 65,
மணப்பாறை, துவாக்குடி என 2 நகராட்சிகள், கூத்தைப்பார், சிறுகமணி என 2 பேரூராட்சிகள், திருவெறும்பூர், அந்தநல்லூர், மணிகண்டம், மணப்பாறை, மருங்காபுரி என 5 ஒன்றியங்கள். இதில் மொத்தமாக அடங்கிய ஊராட்சிகள் எண்ணிக்கை 137.
6) மாவட்டம் குறித்த அனைத்தையும் நாம் அறிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத் தோழர்களும் இந்தப் பட்டியலை தயார் செய்து வைத்திருக்கவும்.
7) எங்கு அமைப்பு இருக்கிறது? இல்லாத பகுதி எது? எனக் கணக்கிட்டு ஆசிரியர் கூறியது போல, “கழகக் கிளை, கழகக் கொடி, விடுதலை ஏடு இல்லாத ஊரே இருக்கக் கூடாது”, என்கிற நிலையை ஏற்படுத்த வேண்டும்!
8) அமைப்பு இல்லாத ஊர்களில் ஒருமித்த கட்சிகள், இயக்கங்களின் ஆதரவுடன் கூட்டங்களை ஏற்பாடு செய்ய வேண்டும்!
9) மகளிரணி, மகளிர்ப் பாசறை, இளைஞரணி, மாணவர் கழகம், தொழிலாளரணி அமைப்புகள் மிக வீரியமாக செயல்பட வேண்டும் என்பது நமது தலைவரின் பெரு விருப்பமாகும்!
10) அந்தந்த பகுதியில் வசிக்கும் தோழர்கள், “எங்கள் பகுதியில் கூட்டம் நடத்த வேண்டும்”, என ஆர்வமாக மாவட்டப் பொறுப்பாளர்களிடம் கேட்க வேண்டும்!
11) ஆண்டுதோறும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்கிற ஆசிரியர் அறிவுறுத்தலுக்கு இணங்க மே 27 முதல், ஜூலை 30 வரை தொடர் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் குற்றாலம் பயிற்சி முகாமும் நடைபெற இருக்கின்றது!
12) நாமும் உற்சாகத்தோடு பணியாற்றி, அவரவருக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளை முழுமையாகச் செயல்படுத்தி, ஆசிரியர் அவர்களுக்கு வெற்றிக் குவியல்களைக் குவித்து மகிழ்வோம்!
– வி.சி.வில்வம்