செப்.28 லூயி பஸ்தேர் 130ஆவது நினைவு நாள்

2 Min Read

மூடநம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தடுப்பூசி

மிது கார்த்தி

தொற்று நோய்களுக்கான தடுப்பூசியோ  தடுப்புமுறைகளோ சாதாரணமாக நமக்குக் கிடைத்துவிடவில்லை. அதற்காக அறிவியலா ளர்கள் நீண்ட காலமாகப் போராடித்தான் தீர்வைக் கண்டறிந்தனர். வெறிநாய்க்கடியால் ஏற்படும் ரேபிஸ் நோயைத் தடுக்கத் தடுப்பூசியைக் கண்டறிந்து, மனிதக் குலத்துக்கு மகத்தான சேவை யாற்றியவர் பிரெஞ்சு வேதியியலாளரும் நுண்ணுயிரியலாளருமான லூயி பஸ்தேர்.

தூண்டிய நிகழ்வு

இன்று தெரு நாய்கள் பற்றியும், தெருவில் அலையும் வெறிநாய்கள் கடிப்பதால் ஏற்படும் ரேபிஸ் நோய் பற்றியும் தீவிரமாகப் பேசப்படுகிறது. 1880களிலும் இப்படியான நிலை இருந்தது. ஆம், அந்தக் கால கட்டத்தில் வெறி நாய்க்கடி மிகப் பெரிய சிக்கலாக இருந்தது. அப்போது நாய்க்கடிக்குத் தடுப்பு மருந்தும் கிடையாது.

பிற இதழிலிருந்து...

வெறிநாய்க்கடிக்கு ஆளானவர்கள் வைரஸ் தாக்குதலால் நாயை போன்ற அறிகுறிகள்  தோன்றி, பரிதாபமாக இறந்து போனார்கள். அப்போது நாய்க் கடிக்குப் பழுக்க காய்ச்சிய கம்பியைக் கொண்டு சூடுபோடுவது, சதையைக் கொத்தாக வெட்டி எடுப்பது எனப் பல்வேறு மூடநம்பிக்கைகளை மக்கள் கடைப்பிடித்து வந்தார்கள்.

அந்தச் சூழலில்தான ரேபிஸ் நோய்க்குத் தடுப்பூசியைக் கண்டறியும் பணியை பஸ்தேர் தொடங்கினார். அதன் பின்னணியில் ஒரு சிறுவன் இருந்தான். வெறிநாய் கடித்து ஜோசப் மெய்ஸ்டர் என்கிற சிறுவன் துயரகரமான நிலையில் இருந்தான். அதைத் தொடர்ந்து இந்நோயை எதிர்த்துப் போராடுவதற்கான அவசரத் தேவை ஏற்பட்டது. அந்தத் தேவையால் தூண்டப்பட்டு, ரேபிஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் பணியில் இறங்கினார் பஸ்தேர்.

நாய்களுக்குப் பின்னால்…

இதுபோன்ற கண்டறிதல்களில் நோய்க் கிருமியின்  தாக்கத்தைக் குறைப்பதற்கு  ஆய்வில் முன்னுரிமை அளிப்பார்கள்.  ஆனால், வழக்கமான முறையைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, ரேபிஸ் வைரஸில் பஸ்தேர் கவனம் செலுத்தினார். அதாவது, பாதிக்கப்பட்ட நாய்களிடமிருந்து வைரைஸத் தனிமைப்படுத்தி, பின்பு முயல்களுக்கு வைரஸைச் செலுத்தித் தடுப்பூசியைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டார்.

இதற்காக லூயி பஸ்தேர் பல நாய்களின் பின்னால் உயிரைப் பணயம் வைத்துத் திரிந்தார்.  நாய்களின் எச்சிலில் இருக்கும் கிருமிகளே நோய்க்குக் காரணம் என்று உணர்ந்ததால், நாயின் உமிழ்நீரை உறிஞ்சி எடுத்து,  மருந்தாகப் பயன்படுத்தினார். அந்த மருந்தை 1885 ஜூலை 6 அன்று அந்தச் சிறுவனின்  உடலில் செலுத்தினார். இதன் விளைவாக ஜோசப் மெய்ஸ்டர் பதினான்கு நாள்களில் குணமடைந்தான். இப்படித்தான் ரேபிஸ் நோய்க்கு எதிரான தடுப்பூசி உருவானது. இது மிகப் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது!

சாதித்த பஸ்தேர்

அது மட்டுமல்ல, கொடிய நோய்களை வெல்ல தடுப்பூசிகளின் திறனையும் அது வெளிப்படுத்தியது. அந்தக் காலக்கட்டத்தில் மனிதர்கள் கொத்துக்கொத்தாக நோய்களால் இறந்து போவது ‘கடவுள்’ அளிக்கும் தண்டனை என மக்கள் நம்பினர். ஆனால், தொற்றுகளிலிருந்து உயிரைக் காக்கத் தடுப்பூசிகள் உதவும் என்று  பஸ்தேர் மெய்ப்பித்தார். ரேபிஸ் நோய்க்கான தடுப்பூசியை மட்டும் பஸ்தேர் கண்டறியவில்லை. கால்நடைகளைக் கொல்லும் ஆந்த்ராக்ஸ் நோய்க் கிருமிக்கு எதிராகவும் சாதித்தார்.

நொதித்தலுக்குக் காரணமான நுண்ணு யிரிகளையும் பஸ்தேர் கண்டறிந்தார். நோய்களைப் பரப்பும் நுண்ணுயிரிகளைக் கண்டறிந்து நுண்ணுயிரிக் கோட்பாட்டையும் வெளியிட்டார். நொதித்தல் செயலுக்கு இந்த நுண்ணுயிரிகளே காரணம் என்றும், அவற்றை நுண்ணோக்கியால் மட்டுமே காண முடியும் என்றும் சொன்னார். பால் கெடாமல் இருக்க  நன்றாகச் சூடாக்கி உடனடியாகக் குளிர வைக்கும் ‘பாஸ்சரைசேஷன்’ என்கிற முறையை உருவாக்கியவரும் இவரே!

நன்றி: ‘இந்து தமிழ் திசை’ 27.9.2025

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *