ஒன்றிய அரசு கொண்டாடும் ‘ஹிந்தி தின’த்தையொட்டி, அகில பாரதிய ராஜ்யபாஷா சம்மேளன் (அனைத்திந்திய அரசு மொழி மாநாடு) அண்மையில் நடத்தப்பட்டுள்ளது.
அதையொட்டி பிரதமர் மோடி தனது ‘எக்ஸ்’ பதிவில் “ஹிந்தி ஒரு ஒன்றுபடுத்தும் சக்தி. அது வெறும் தொடர்பு ஊடகம் மட்டுமல்ல, நமது அடையாளம் மற்றும் கலாச்சாரத்தின் வாழும் பாரம்பரியமாகும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
சிந்துவெளி நாகரிகம், கீழடி, ஆதிச்ச நல்லூர் அகழ்வாய்வுகளின் காலக்கணிப்பின் படி, 3000 ஆண்டுகளுக்கு முன்பே கட்டமைக்கப்பட்ட குடியிருப்புகளில், எழுத் துக்களோடு மொழியைப் பேசி மனிதர்கள் வாழ்ந்திருப்பது அய்யத்துக்கிடமின்றி வெளிப்பட்டுள்ளது.
ஹிந்தி மொழி 1893இல் நாகரி பிரச்சாரணி சபையால் ஒழுங்கமைக்கப்பட்ட மொழி யாகும். அதிகபட்சம் அதனுடைய வயது 200-300 ஆண்டுகள்தான்.
200 வயது கொண்ட ஒரு மொழி எவ்வாறு மூவாயிரம் ஆண்டுப் பாரம்பரியத்தின் அடையாளமாக இருக்க முடியும்? பண்பாட்டுக் கூறுகளை எடுத்துரைக்கும் அளவுக்கு அதில் ஏது இலக்கியம்?
மோடி சொல்வது போல், அது ஒன்றிணைக்கும் மொழியா?
இலக்கிய வளமும், செழுமையான நாட்டுப்புறக் கலை இலக்கிய மரபுகளும் கொண்டிருந்த அய்ந்து கோடி மக்களின் தாய்மொழியான போஜ்புரி, மைத்திலி, மகாஹி, துளசிதாசர் ராமாயணம் எழுதிய அவதி, பிரஜ், ராஜஸ்தானி, புண்டேலி, சத்தீஸ்கரி, கர்வாலி, குமவோனி போன்ற பல மொழிகளைக் கொன்றழித்த மொழி.
இந்திய விடுதலைக்குப் பின்பு நடத்தப்பட்ட மக்கள் தொகைக் கணக் கெடுப்பில், போஜ்புரி, ராஜஸ்தானி போன்றவை ஹிந்தியின் வழக்கு மொழிகள் எனச் சேர்க்கப்பட்டன. இதனால் ஹிந்தி பேசுவோரின் எண்ணிக்கை செயற்கையாக அதிகரிக்கப்பட்டு, அவர்களது மொழிகளின் தனித்தன்மை மறுக்கப்பட்டது.
உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலப் பள்ளிகளில் ஹிந்தி மட்டுமே கற்பிக்கப்பட்டது. தாய்மொழியில் பேசு வதும் கற்பிப்பதும் தரக்குறைவாகப் போதிக் கப்பட்டன.
அகில இந்திய வானொலியும், சினிமாக்களும் ஹிந்தியில் மட்டுமே பேசின. மராட்டியில் படம் எடுத்தால் நான் இலவசமாகப் பாடுகிறேன் என்று லதா மங்கேஷ்கர் சொல்லும் அளவுக்கு அது கொடுமையானதாக இருந்தது. எழுத்து வடிவம் இல்லாத பல மொழிகள் அழிக்கப்பட்டு விட்டன.
இதே விழாவில் பங்கேற்றுப் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சமஸ்கிருதம் நமக்கு “அறிவின் கங்கையை” அளித்திருப்பதாகவும், இந்த அறிவை ஹிந்தி ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு சென்றுள்ளது” என்றும் பேசி இருக்கிறார். ஆக சமஸ்கிருதத்தைத் திணிப்பதற்கே, ஹிந்தியை ஒரு கருவியாக அவர்கள் கையில் எடுக்கிறார்கள்.
“அடிமைத்தனத்தின் கடினமான காலகட்டத்தில் கூட, எதிர்ப்பின் குரலாக இந்திய மொழிகள்” இருந்தனவாம்! விடுதலைப் போராட்டத்தில் இவர்கள் ஈடுபடவே இல்லை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்! விடுதலைக் கனல் தெறிக்கும் உரைகள், கவிதைகள் சமஸ்கிருதத்தில் உண்டா?
தாய் மொழியைக் காப்பதற்கான போராட்டம் தமிழில் துவங்கி இன்று பல மாநிலங்களுக்கும் பரவி விட்டது. எனவே ‘ஹிந்தி திவஸ்’ஸைக் கொண்டாடும் போதே, ‘ஹிந்தி மற்றும் பிற இந்திய மொழிகளுக்கு இடையே எந்த மோதலும் இல்லை” என்று அடக்கி வாசிக்க வேண்டிய கட்டாயம் அமித் ஷாவுக்கு ஏற்பட்டிருக்கிறது. எல்லா மொழிகளையும் வளர்க்க வேண்டும் என்பது உண்மையான விருப்பமாக இருந்தால், எதற்காக ஹிந்திக்காகத் தனி மாநாடு? விஷத்தில் இனிப்பைக் கலந்தால் அது அமுதமாகி விடாது.
இந்திய மொழிகள் இயல்பாகவே ஹிந்திக்குள் கலந்து விடவில்லை; அரசியல், கல்வி, ஊடகம், மக்கள் எண்ணிக்கை கணக்கெடுப்பு ஆகியவற்றின் மூலம், அவை “மொழி வழக்குகள்” என்ற பெயரில் விழுங்கி ஒடுக்கப்பட்டன.
உள்ளூர் இலக்கியம், நாட்டுப்புறப் பாடல்கள், வாய்மொழிக் கலைகள் ஆகியவற்றின் குரல்வளைகள் நெரிக்கப்பட்டன. போஜ்புரி, ராஜஸ்தானி போன்ற மொழிகளுக்கான தனி அங்கீகார இயக்கம் தொடர்ந்து நடக்கிறது.
வட இந்தியா “ஹிந்தி பேசும் பகுதி” போல தோன்றினாலும், உண்மையில் அதில் ஒடுக்கப்பட்ட பன்மை இருக்கிறது.
தமிழ், தெலுங்கு, பெங்காலி போன்றவை வலுவான எதிர்ப்பைச் செய்ததால் தப்பின. வடமாநில மொழிகள் அப்படி செய்யவில்லை. அதனால் எளிதில் ‘ஹிந்தி’யால் விழுங்கப்பட்டன.
ஒரு மொழி என்ற வகையில் ஹிந்தி மீது நமக்கு எந்த வெறுப்பும் இல்லை.
பல இனங்களையும் மரபுகளையும் கொண்ட இந்தியாவில், அவற்றின் அடையாளங்களைப் பறித்து மேலாதிக்கம் செய்ய எடுக்கப்படும் முயற்சிகளை முறியடிப்பதன் மூலமாக மட்டுமே இந்தியாவை ஒன்றுபடுத்த முடியும்
நன்றி: ‘ஜனசக்தி’ தலையங்கம் செப்.21–செப்27, 2025