மதுரை, செப்.25 தமிழ்நாட்டில் காவல்துறை அதிகாரிகள் மீது எழும் புகார்களை விசாரிக்க, மாநில, மாவட்ட மற்றும் மாநகர அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
திருச்சியைச் சேர்ந்த அய்யாக்கண்ணு என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், காவல்துறை நிலைய மரணங்கள், அதிகப்படியான காயங்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் போன்ற சம்பவங்களை விசாரிக்க, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில் குழு அமைக்க 2006-ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைச் சுட்டிக்காட்டினார். ஆனால், தமிழ்நாட்டில் இதுபோன்ற குழு அமைக்கப்படவில்லை என்றும், உடனடியாக குழு அமைக்க உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
குழுக்களின் கட்டமைப்பு
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்விடம், தமிழ்நாடு அரசு சார்பில் பின்வரும் விவரங்கள் அளிக்கப்பட்டன: தமிழ்நாடு உள்துறை செயலர் தலைமையில், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் சட்டம் – காவல்துறை கூடுதல் இயக்குநர் ஆகியோர் அடங்கிய குழு. மாவட்ட ஆட்சியர் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மூத்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் அடங்கிய குழு. சென்னை பெருநகர காவல் ஆணையர் அடங்கிய குழு. இந்தக் குழுக்கள் அமைப்பது தொடர்பாக 2019-ஆம் ஆண்டிலேயே அரசாணை பிறப்பிக்கப்பட்டுவிட்டது என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், அய்யாக்கண்ணு தாக்கல் செய்த மனுவை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.