சென்னை, செப்.24- தமிழ்நாடு அமைச்சர் கே.என். நேரு 22.9.2025 அன்று திருச்சியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் தமிழ்நாடு அரசு திட்டங்களில் சுமார் 35 ஆயிரம் கோடி ரூபாய் திருச்சி மாவட்டத்திற்கு வந்துள்ளது. அன்றைய மாவட்ட ஆட்சியர் இதை சொன்னார். அதற்கான விளக்கங்களையும் நாங்கள் தந்திருக்கிறோம். திருச்சி வளர்ந்திருக்கிறதா? இல்லையா? என்பதை திருச்சியில் உள்ள நீங்கள் சொன்னால் ஏற்றுக் கொள்வோம். மற்றவர்கள் சொன்னால்?. நாங்கள் வளர்ந்திருக்கிறோம். முதலமைச்சர் திருச்சி மாவட்டத்திற்கு மட்டுமல்ல, டெல்டா மாவட்டங்களுக்கு சிறப்பாக செய்திருக்கிறார். அதை வைத்து துணிந்து மக்களிடம் செல்வோம். தமிழ்நாட்டில் எங்கும் இல்லாத அளவிற்கு மணப்பாறை சிப்காட்டில் புதிய நிறுவனம் வரப்போகிறது. அந்த நிறுவனம் அமைந்த பிறகு, திருச்சி முகமே மாறும் என தொழில் அதிபர்கள் சொல்லியிருக்கிறார்கள். அரசு அதிகாரிகளும் சொல்லியிருக்கிறார்கள். 2026இல் நாங்கள்தான் நிற்கிறோம், நாங்கள்தான் ஜெயிப்போம். தளபதி மீண்டும் முதலமைச்சர் ஆவார். டெல்டாவில் மிகவும் அதிகமாக தொகுதிகளை வென்று கொடுப்போம்.
இவ்வாறு கே.என். நேரு தெரிவித்தார்.
32 லட்சம் மாணவர்களுக்கு 2ஆம் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் தயார்
பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தகவல்
சென்னை, செப். 24- தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் 44 ஆயிரத்துக்கும் அதிகமான அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை சுமார் 70 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இவர்களுக்கான பாட நூல்கள் அச்சிடும் பணியை தமிழ்நாடு பாட நூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மேற்கொண்டு வருகிறது. அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கு இலவச மாகவும், தனியார் பள்ளிகளுக்கு குறைந்த விலையிலும் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. இதற்கிடையே, பள்ளிக் கல்வியில் 1 முதல் 7ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முப்பருவக் கல்வி முறையும், 8 முதல் 12-ம் ஆண்டு வரையான மாணவர்களுக்கு முழு ஆண்டு கல்வியும் நடைமுறையில் உள்ளது. அதன்படி 1 முதல் 7ம் வகுப்பு வரை 3 பருவங்களுக்கும் தனித்தனியாக பாடப் புத்தகங்கள் வழங்கி தேர்வுகள் நடத்தப் படுகின்றன. தற்போது பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் முதல் பருவத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த தேர்வுகள் வருகிற 26ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து அனைத்து வகுப்புகளுக்கும் 27ஆம் தேதி முதல் அக்டோபர் 5ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது.
32 லட்சம் மாணவர்கள்: மாணவர்களுக்கு விநியோகிப் பதற்காக வைக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் பார்வையிட்டு செய்தியாளர்களிடம் கூறியதாவது:- நடப்பு கல்வியாண்டில் 2ஆம் பருவம் அக்டோபர் 6ஆம் தேதி தொடங்க உள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே 7ஆம் வகுப்பு வரை பயிலும் 32 லட்சத்து 60,960 மாணவர்களுக்கு வழங்குவதற்காக விலை யில்லா பாடப் புத்தகங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பாட நூல்களை விநியோகிப்பதில் எந்த தொய்வும் இருக்கக் கூடாது என்பதற்காக தொடர் ஆய்வுகள் மூலம் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்று கூறினார்.