அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஒரு சாலை ஓரம் அமைக்கப்பட்ட மிக உயரமான அனுமன் சிலை, அங்கு வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் பல்வேறு துயரங்களுக்கும், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் புதிய கொள்கைகளுக்கும் காரணம் என ஒரு விதமான ‘அபசகுண’ நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக ஒரு கும்பல் கூறுகிறது.
டெக்சாசில் உள்ள டக்சால் நகரில் உணவகம் நடத்தி வரும் ஓர் இந்தியர், தனது உணவகத்தின் வெளிப்பகுதியில் 90 அடி உயர அனுமன் சிலை ஒன்றை நிறுவ விரும்பினார். இதனை அறிந்த சில பார்ப்பனர்கள். இது இந்திய கலாச்சாரத்தின் அடையாளமாக இருக்கும் என்று கூறி இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தனர். சிலையை நிறுவும்போது, ஒரு பிரிவைச் சேர்ந்த பார்ப்பனர்கள் சிலர், சாலை ஓரத்தில் இருப்பதால் சிலையின் ‘புனித’த்தன்மை கெடும் என்றும், கடவுள் பக்தி இல்லாதவர்கள் இதனைத் தொடுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்றும் சமூக வலைதளங்களில் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர், இந்தியர்களுக்கு எதிராகப் பல கடுமையான கொள்கைகளை அமல்படுத்தி வருகிறார்.
lஇந்தியர்களை கையில் விலங்கிட்டு இந்தியாவிற்கு அனுப்புவது,
l50% கூடுதல் வரி மற்றும் அபராதங்கள் விதிப்பது,
lஇந்திய மாணவர்களுக்குக் கடுமையான விசா விதி முறைகளை அமல்படுத்துவது,
lமாணவர்கள் பகுதிநேர வேலை செய்வதைத் தடை செய்வது,
lவிசா கட்டணத்தை இந்திய மதிப்பில் ஒரு கோடி ரூபாயாக உயர்த்துவது,
lஅமெரிக்க நிறுவனங்கள் இந்தியர்களுக்கு வேலை அளிக்கக் கூடாது என்று நேரடியாக மிரட்டுவது
போன்ற நடவடிக்கைகள் மூலம் அமெரிக்க வாழ் இந்தியர்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர்.
சமீபத்தில், விசா கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டதால், ‘தசரா’வுக்காக இந்தியா வந்திருந்த 14,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அவசரமாக அமெரிக்கா திரும்பினர். இதனால், ஒரே நாளில் விமானப் பயணச்சீட்டு விலை 2 லட்சம் ரூபாய் வரை உயர்ந்தது. ‘ரெடிட்.காம்’ இணையதளத்தில் வெளியான செய்தியின்படி, சிலர் விமானப் பயணச்சீட்டு வாங்க தங்கள் நகைகளை அடமானம் வைத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த திடீர் துயரங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் டெக்சாஸ் சாலை ஓரத்தில் நிற்கும் ‘அனுமன் சிலைதான் காரணம்’ என அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் ஒரு அவநம்பிக்கையும் பரவி வருகிறதாம். ஆகா, என்ன கண்டுபிடிப்பு!
இந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொண்ட சில வைணவப் பார்ப்பனர்கள், அந்த அனுமன் சிலைக்கு அருகில் ஒரு கோயில் கட்டி, உற்சவர் அனுமன் சிலை ஒன்றை வைத்து, நாள்தோறும் பூஜைகள் செய்தால் பிரச்சினைகள் தீரும் என உணவக உரிமையாளரிடம் அறிவுறுத்தியுள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இந்த நெருக்கடியிலும் வருமானத்துக்கு வைணவப் பார்ப்பனர்கள் வழி தேடுகின்றனர் என்ற செய்தியும் வருகிறது.
நல்லது நடந்தாலும், அல்லது நடந்தாலும் அவாள் வயிற்றில் தானே அறுத்துக்கட்டும்!
எப்படி இருக்கிறது? புராணப் புளுகு பாத்திரமான அனுமான் என்ன பாடுபடுகிறான். அனுமான் யார் என்றால் வாயு புத்திரனாம்!
அறிவுக்குப் பொருந்துகிறதா? என்பதுபற்றி அறவே கவலைப்படாமல் பார்ப்பனர்கள் கடவுளுக்கே கதை கட்டுவார்கள்.
‘பிறப்பு, இறப்பு இல்லாதவன் கடவுள்’ என்று சொல்லிக் கொண்டு ‘ராம நவமி’ என்றும், ‘கிருஷ்ண ஜெயந்தி’ என்றும் கொண்டாடுவதில்லையா?
அதன்படி அனுமனுக்கும் கதைகட்டாமல் இருப்பார்களா? கேசரி என்ற வன ராஜாவின் மனைவி அஞ்சனை தேவிக்கு சிவ பெருமானின் அருளால் மகன் பிறந்தான். அப்போது, அந்தத் தெய்வீக சக்தியை வாயுதேவன் (காற்றுத் தெய்வம்) கொண்டு வந்து அஞ்சனையின் கருவறையில் பதித்தானாம். அதனால் அனுமன் ‘வாயுபுத்திரன்’ என்று அழைக்கப்படுகிறான்.
இது அண்டப்புளுகு, ஆகாயப் புளுகு என்று மேலோட்டமாகப் பார்த்தாலே புரியும். இந்தியப் பார்ப் பனீயத்தை எங்கு சென்றாலும் பார்ப்பனர்கள் தங்களோடு கொண்டு செல்லுவார்கள். இந்துக் கடவுள்களின் புளுகு மூட்டைகளைப் பற்றி அறிந்தால் அமெரிக்கர்களும், அமெரிக்காவில் வாழும் பன்னாட்டவர்களும் கை கொட்டிக் கேலி செய்ய மாட்டார்களா!