சென்னை: செப் 23- தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சைதாப்பேட்டையில் ரூ. 77.76 கோடியில் கட்டப்பட்ட 504 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளைத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேற்று (செப். 22, 2025) திறந்து வைத்து, பயனாளிகளுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், சைதாப் பேட்டை தொகுதியானது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந் தெடுக்கப்பட்ட தொகுதி என்பதைக் குறிப்பிட்டார். “கலைஞர் அவர்கள் 1970-ல் குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கினார். அதே இடத்தில், அவர் 448 குடியிருப்புகளைக் கட்டித் தந்தார். தற்போது, நம் திராவிட மாடல் அரசு ரூ. 78 கோடி செலவில் 504 புதிய குடியிருப்பு களைக் கட்டித் தந்திருக்கிறது,” என்று கூறினார்.
அரசின் முக்கிய சாதனைகள்:
குடியிருப்புத் திட்டம்: கடந்த நான்கரை ஆண்டுகளில், ரூ. 6,000 கோடி மதிப்பீட்டில் 52,000 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், 18.50 லட்சம் பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
உதவித்தொகை உயர்வு: கட்டுமானப் பணிகளின்போது பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட மாத உதவித்தொகை ரூ. 8,000-லிருந்து ரூ. 24,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
திறன் மேம்பாடு: பழைய 300 சதுர அடி குடியிருப்புகள், இப்போது 410 சதுர அடியாக விரிவாக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.
மகளிர் உரிமை: கலைஞர் வழியில், இந்த வீடுகள் அனைத்தும் அந்த வீட்டில் வசிக்கும் பெண்களின் பெயரிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளன.
அரசுத் திட்டங்கள்: மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணத் திட்டம், காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்கள் குறித்தும் அவர் விரிவாகப் பேசினார்.
“திறமையான அரசு தரமான அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டிக் கொடுத்து, உங்கள் வாழ்விட உரிமையைப் பாதுகாப்பது சுயமரியாதைதான்” என்று குறிப்பிட்ட துணை முதலமைச்சர், இந்த வீடுகளைப் பொறுப்புடன் பராமரிக்க வேண்டும் என்று பயனாளிகளைக் கேட்டுக்கொண்டார். மேலும், அரசுக்குத் துணையாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.