சென்னை, செப். 23- பேருந்து, ரயில், மெட்ரோ பயணத்துக்கு பயணச்சீட்டு எடுக்க சென்னை ஒன்று’ என்ற செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (22.9.2025)தொடங்கி வைத்தார். ஒரே நாளில் சுமார் 1 லட்சம் பேர் அந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர்.
ஒரே செயலி
சென்னையில் உள்ள மக்கள் தொகையில் சுமார் 70 சதவீதம் பேர் பொது போக்குவரத்தை தான் அன்றாடம் பயன்படுத்துகின்றனர். அதன்படி நாள்தோறும் அரசு மாநகர பேருந்துகளில் 35 லட்சம் பேரும், மின்சார ரயில்களில் 12 லட்சம் பேரும், மெட்ரோ ரயிலில் 3 லட்சம் பேரும் பயணிக்கின்றனர். மக்களின், இந்த பயணத்தை எளிதாக்க அரசு பல்வேறு வழிகளில் பயணச்சீட்டுகளை வழங்கி வருகிறது. உதாரணமாக அரசின் சிங்கார சென்னை அட்டை மூலம் மாநகர பேருந்து மற்றும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யலாம். அதேபோல மின்சார ரயில் பயணத்தை சீசன் அட்டை, யுடிஎஸ் மற்றும் ரயில் ஒன் செயலிகள் மூலம் பயணச்சீட்டு எடுத்து கொள்ளலாம். இப்படி ஒவ்வொரு போக்குவரத்துக்கும் தனித்தனியாக பயணச்சீட்டு வேண்டும்.
ஆனால் இந்த நிலையை மாற்றி, அனைத்து பொது போக்குவரத்துக்கும் ஒரே செயலியில் பயணச்சீட்டு பெறும் வசதியை தமிழ்நாடு அரசின், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பான கும்டா தொடங்கி உள்ளது. அதற்காக வடிவமைக்கப்பட்ட ‘சென்னை ஒன்று’ (chennai one) என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் நேற்று (22.9.2025) தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் ரகுபதி முத்துசாமி, சிவசங்கர், சேகர்பாபு, மேயர் பிரியா, தலைமை செயலாளர் முருகானந்தம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஆட்டோ – கார் கட்டணம்
இந்த செயலி பொது போக்குவரத்துக்கு வெறும் பயணச்சீட்டு எடுப்பதற்காக மட்டுமல்லாமல் மக்களின் பயணத்தை எளிதாக வகுத்து கொடுத்து இருக்கிறது. இந்த பயணத்தில் ஆட்டோ, கார் தேவை என்றாலும் அதற்கும் அதில் புக் செய்து விடலாம். உதாரணமாக நீங்கள் நந்தனத்தில் இருந்து காசிமேடு மீன் மார்க்கெட் செல்ல வேண்டும் என்று வைத்து கொள்வோம். ‘சென்னை ஒன்று’ செயலில், நீங்கள் நந்தனத்தில் இருந்து மெட்ரோ மூலம் எழும்பூர் வரையும், அங்கிருந்து சென்னை கடற்கரை ரயில்நிலையம் வரை மின்சார ரயிலிலும், அங்கிருந்து ராயபுரம் வரை மாநகர போக்குவரத்து பேருந்திலும், பின் அங்கிருந்து ஆட்டோ அல்லது கார் மூலம் காசிமேடு மீன் மார்க்கெட் செல்வதற்கும் மொத்தமாக பதிவு செய்து கொள்ளலாம்.
ஆனால் அதில் ஆட்டோ மற்றும் கார் கட்டணத்தை மட்டும் ஓட்டுநர்களிடம் செலுத்த வேண்டும். மற்ற மெட்ரோ,ரயில், பேருந்து ஆகியவற்றுக்கு பணம் செலுத்தி கியூஆர் கோடு பயணச்சீட்டு பெற்றுக் கொள்ளலாம். அதில் சிறப்பு என்னவென்றால் மெட்ரோ, ரயில், பேருந்து எப்போது எந்த நேரத்தில் வரும், நீங்கள் எதில் செல்ல வேண்டும் என்பதனை தெரிந்து கொள்வதுடன் நீங்கள் பேருந்து நிலையத்தில் இறங் கியவுடன் உங்களுக்கான ‘ஆட்டோ, கார் தயாராக இருக்கும். அதாவது, மக்களின் பயணத்தை இந்த செயலி மிக எளிமையாக, சிக்கனமாக வடிவ மைத்து கொடுத்து விடுகிறது. அதே போல ஒவ்வொரு இடங்களிலும் நேரடியாக சென்று பயணச்சீட்டு எடுக்க தேவையில்லை. அதே போல, தனித்தனி செயலிக்கு சென்று பயணச்சீட்டு பதிவு செய்ய வேண்டியதும் இல்லை.
ரத்து முடியாது
இந்த செயலியில் தமிழ் மட்டுமின்றி ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய 5 மொழிகளிலும் பயன்படுத்த முடியும் என்பதால் அனைத்துத் தரப்பு மக்களும் எளிதாக பயன்படுத்தி கொள் ளலாம். அதே போல் பயணச்சீட்டிற்கு பணம் செலுத்த வசதியாக கும்டா யு.பி.அய். வசதியும் இருக்கிறது. அதனால் மற்ற யு.பி.அய். செயலிகள் தேவையில்லை. ‘சென்னை ஒன்று’ செயலியில், பல மேம்பட்ட அம்சங்கள் இருந்தாலும் இன்னும் சிலவற்றை மேம்படுத்த வேண்டி உள்ளது. நீங்கள் மெட்ரோ, ரயில் மற்றும் பேருந்தையும் இணைந்து பயணச்சீட்டு எடுத்துவிட்டால், அதில் ஒன்றை நீங்கள் ரத்து செய்ய முடியாது. பதிவு (புக்கிங்) செய்து விட்டால் ரத்து செய்ய முடியாது.
மெட்ரோ ரயில் சி.எம்.ஆர்.எல். செயலில் மை பாஸ் என்ற வசதி உள்ளது. அதில் நாம் பணம் செலுத்திவிட்டால், நாம் மெட்ரோவில் செல்லும் பயணங்களுக்கு மட்டும் பணம் செலுத்திக் கொள்ளலாம். அதேபோல் இந்த ‘சென்னை ஒன்று’ செயலியிலும் செல்லும் பயணத்துக்கு பணம் எடுத்துக்கொள்ளும் வசதியை ஏற்படுத்த வேண்டும். நேற்று (22.9.2025) ஒரே நாளில் 1 லட்சம் பேர் ‘சென்னை ஒன்று’ செயலியை பதிவிறக்கம் செய்து இருக்கின்றனர்.
அடுத்தது என்ன?
போக்குவரத்து வசதியை முழுமையாக டிஜிட்டல் மயமாக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்ததன் வெளிப்பாடு தான் இந்த ‘சென்னை ஒன்று’ செயலி. அதில் உள்ள வசதிகளை விட பல மடங்கு மேம்படுத்த வசதிகள் வரும் நாட்களில் வர உள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
* இந்த செயலி மூலம் பேருந்து, மெட்ரோ மற்றும் மின்சார ரயில்களுக்கு தனித்தனியாக பயணச்சீட்டு எடுக்கலாம்.
* வெளியூர் பயணத்திற்கான அரசு விரைவுப் போக்குவரத்து கழக பேருந்து பயணச்சீட்டு மற்றும் ரயில்கள் பயணச்சீட்டு எடுக்கும் வசதி.
* பேருந்து மற்றும் மின்சார ரயில்களுக்கான மாதாந்திர சீசன் பயணச்சீட்டு பெறும் வசதி.
* வெளியூர் பயணத்திற்காக தனியார் பேருந்துகளில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி.
* ஓலா, ரேபிடோ போன்று ஆட்டோ, கார் பயணத்தை மிக குறைந்த விலையில் முன்பதிவு செய்யும் வசதி.
*கும்டா யு.பி.அய். செயலியை மேம்படுத்தும் திட்டம் இது போன்ற வசதிகள் அடுத்தடுத்து வர உள்ளது.