ஜெனிவாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் செயலிழந்த உடலுறுப்புகளுக்கு தொழில்நுட்பத்தின் துணைகொண்டு உயிர் கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். தொட்டுணரும் திறன்கொண்ட செயற்கை உறுப்புகளை உருவாக்கும் புதிய கண்டுபிடிப்பாக அது கருதப்படுகிறது.
பாப்ரிஸியோ பிடாடி (Fabrizio Fidati) தனது வலக்கையில் சூட்டை அல்லது குளிர்ச்சியை உணர்ந்து ஏறத்தாழ 25 ஆண்டுகளாகிவிட்டது. ஒரு விபத்துக்குப் பிறகு கையில் உணர்ச்சியை அடியோடு இழந்தார் பிடாடி. இனி நிலைமை வேறு. சுவிட்சர்லந்தின் ஆய்வுப் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள சோதனைகளில் ஃபிடாடியையும் சேர்த்து 28 உடற் குறையுள்ளோர் கலந்துகொண்டனர்.
ஓடும் நீரின் குளிர்ச்சி, அடுப்பின் சூடு உள்ளிட்ட பொருள்களின் வெப்ப நிலையை நோயாளிகள் உணர்ந்து பார்க்கச் சோதனைகள் உதவுகின்றன. ஜெனிவாவைச் சேர்ந்த இந்த ஆய்வாளர்கள் ஒருவகை வெப்ப மின்கடத்திகளைக் கொண்டு ஃபிடாடியின் கைக்கு உணர்வைக் கொடுக்கப் பார்க்கின்றனர். இவ்வாறு செய்வதால் செயலிழந்த உறுப்புகள் மீண்டும் உணர்ச்சியைப் பெற்றதாகக் கூறினர். பிளாஸ்டிக், கண்ணாடி, செம்பு போன்றவற்றைத் தொட்டுப் பார்த்து வேறுபடுத்த முடிந்தது. இரண்டு ஆண்டுகளுக்குமேல் இந்தத் தொழில்நுட்பம் சோதிக்கப்பட்டு வந்துள்ளது. இதை உடலுக்குள் செலுத்தத் தேவையில்லை. தோலின்மீது பொருத்திக்கொண்டு செயற்கை உறுப்புகளுடன் இணைத்துக்கொள்ளலாம்.