‘‘தமிழ்நாடு பெரியார் மண் அல்ல; பெரியாரே ஒரு மண்தான்’’ என்று சிலர் கேலி பேசுகிறார்கள்!
பெரியார் ஒரு மண்தான், அந்த மண்ணிலிருந்துதான் ஆயிரம் அறிவுச் செடிகள் வளர்ந்தன!
சென்னை, செப்.23 கேலி செய்வதாக நினைத்துக் கொண்டு சிலர், ‘‘தமிழ்நாடு பெரியார் மண் அல்ல; பெரியாரே ஒரு மண்தான்’’ என்று. உண்மைதான் தம்பி, ‘‘பெரியார் ஒரு மண்தான், அந்த மண்ணிலிருந்துதான் ஆசிரியரிலிருந்து என் அருமை மகள் மதிவதனி வரைக்கும் ஆயிரம் அறிவுச் செடிகள் இந்த மண்ணில் வளர்ந்தன. பெரியார் மண்தான்; ஆனால், அந்த மண், எல்லாவற்றையும் விளைவித்துத் தருகின்ற மண். அந்த மண், இந்தப் பூமிக்குத் தேவையானவர்களை உற்பத்திச் செய்து தருகின்ற மண்!’’ என்றார் திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள்.
தந்தை பெரியாரின் 147 ஆம் ஆண்டு பிறந்த நாள் மலரை வெளியிட்டு பேராசிரியர் சுப.வீரபாண்டியன் சிறப்புரை
கடந்த 17.9.2025 அன்று மாலை சென்னை எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் அருகே தந்தை பெரியாரின் 147 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் தந்தை பெரியாரின் 147 ஆம் ஆண்டு பிறந்த நாள் மலரை வெளியிட்டு சிறப்புரை யாற்றினார். அவரது சிறப்புரை வருமாறு:
எப்போதும் மக்களை நோக்கி இறங்கி வருகின்ற இயக்கம் திராவிடர் கழகம்!
எப்போதும் மக்களை நோக்கி இறங்கி வருகின்ற இயக்கம் திராவிடர் கழகம்தான் என்பதை இந்த மேடையிலும் மெய்ப்பித்திருக்கின்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களே,
கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் அவர்களே, பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களே, இந்தக் கூட்டத்தை மிகச் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கின்ற அருமை நண்பர் கரு.அண்ணாமலை அவர்களே, மற்றும் தோழர்களே உங்கள் அனைவருக்கும் என் அன்பு வணக்கம்!
என் உரையை நான் தொடங்குவதற்கு முன்பாக, ஒரு நன்றியை இந்த மேடையில் பதிவு செய்யவேண்டும் என்று கருதுகிறேன்.
நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இங்கி லாந்து, ஜெர்மனி நாடுகளுக்கு முதலீடுகளை ஈர்த்து வருவ தற்காகச் சென்றிருக்கின்றார் என்று ஊடகங்கள் சொல்லின.
உண்மைதான்! அவர் ஒரு முதலமைச்சராக, முதலீடுகளைத் தமிழ்நாட்டிற்கு ஈர்த்து வந்திருக்கின்றார். பெரியாரின் படத்தை ஒரு முதலீடாக அங்கே கொடுத்தும் வந்திருக்கின்றார் என்பதால், அவருக்கு நம்முடைய பாராட்டுகளை முதலில் நான் பதிவு செய்கிறேன்.
இன்றைக்குத் தந்தை பெரியார் 147 ஆம் ஆண்டு பிறந்த நாள் ‘விடுதலை’ மலரை வெளியிட்டு, அம்மலர் குறித்து உரையாற்றவேண்டும் என்று எனக்குப் பணித்திருந்தார்கள்.
ஆனால், மேடையில்தான் எனக்கு அந்த மலர் கிடைத்தது என்பதால், அந்த மலரைப் படித்துவிட்டு, விரிவாகப் பேசுகின்ற வாய்ப்புடையவனாக இல்லை. இருந்தாலும், மேடையில் அமர்ந்து அம்மலரைப் புரட்டுகின்றபோது, எனக்குக் கிடைத்த சில செய்திகளை உங்களோடு நான் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று விரும்புகிறேன்.
வழக்குரைஞர் வில்சன் கட்டுரை!
அந்த மலரின் தொடக்கத்திலேயே, புகழ்பெற்ற நம்முடைய வழக்குரைஞர் வில்சன் அவர்கள், தந்தை பெரியாரைப்பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.
அந்தக் கட்டுரையின் தலைப்பை நான் பிறகுசொல்கிறேன். அந்தத் தலைப்பை அப்படியே காட்சியாக ஓரிடத்தில் நான் பார்த்திருக்கின்றேன். அதை முதலில் கூறவேண்டும் என்று கருதுகிறேன்.
சென்னை அண்ணா நகரில் உள்ள மருத்துவர் தாயப்பனுடைய பல் மருத்துவமனைக்குச் சென்றவர்களுக்குத் தெரியும். அங்கே, அவர் பல படங்களை பிரேம் போட்டு வைத்திருக்கிறார். காரல் மார்க்ஸ் படம், அம்பேத்கர் படம், டார்வின் படம் இப்படி வரிசையாக வருகிறபொழுது, அய்யா பெரியாரின் படம், ஒரு சட்டகத்திலிருந்து கீழே விழுகிற மாதிரி இருக்கிறது.
‘‘எந்தச் சட்டகத்திற்கும்
அடங்க மறுப்பவர் தந்தை பெரியார்!’’
முதலில் அதைப் பார்த்தவுடன், அடடா, அய்யாவின் படம் கீழே விழுகிறதே, என்று மேலே நகர்த்திப் பார்த்தேன், நகர்த்த முடியவில்லை. எனக்குப் பின்னால் வந்தவர்களும் அதையே செய்தார்கள்.
அந்தப் படம், சட்டகத்திலிருந்து கீழே விழப் போகிறது என்று தள்ளி வைத்தார்கள்; யாராலும் தள்ளி வைக்க முடிய வில்லை.
பிறகுதான் அந்தப் படத்திற்கு மேலே எழுதப்பட்ட வரியைக் கவனித்தேன்.
அந்த வரி இதுதான், ‘‘எந்தச் சட்டகத்திற்கும் அடங்க மறுப்பவர் தந்தை பெரியார்!’’
வழக்குரைஞர் வில்சன் எழுதியிருக்கின்ற கட்டுரையின் தலைப்பும் அதுதான் – ‘‘எந்தச் சட்டகத்திற்கும் அப்பாற்பட்டவர் பெரியார்’’ என்கிற தலைப்பிலே தான் அந்தக் கட்டுரை அமைந்திருக்கின்றது.
எந்தச் சட்டகத்திற்குள்ளும் அவர் பொருந்துவதற்கு மறுத்தார்; எந்தச் சட்டகத்திற்குள்ளும் அவர் இல்லை. நாம் சொல்லுகின்ற வழக்கமான மரபுகள் எல்லாவற்றிலும் இருந்தும் மீறி, மரபுகளைத் தாண்டிச் சிந்திப்பதற்கு நமக்குக் கற்றுக் கொடுத்தவர் தந்தை பெரியார் அவர்கள்தான்.
தோழர் மதிவதனி மிக எளிமையாகச் சொன்னதைப்போல, ஒரு பெண்ணைப் பார்த்தால், ‘‘திருமணம் ஆகிவிட்டதா?’’என்று கேட்கிற சமூகத்தில், ‘‘என்ன படித்துக் கொண்டிருக்கின்றாய்?’’ என்று கேட்டவர் தந்தை பெரியார்.
அதுதான் அடிப்படையானதும்கூட!
ஒரு பெண், பள்ளிக்கூடத்திற்குப் போகவேண்டும். கவிஞர்தான் எனக்குச் சொல்லியிருக்கின்றார். உரத்தநாடு பகுதியில், அய்யாவோடு பயணம் செய்கின்றபோது, ஓரி டத்தில் காரை நிறுத்தச் சொல்லி, கண்ணாடி கதவை இறக்கச் சொல்லி, ஒரு சின்னக் குழந்தையைப் போல அய்யா கைதட்டி மகிழ்ந்தார். எந்தக் காட்சியைப் பார்த்து என்றால், 10, 15 பெண் பிள்ளைகள் மிதிவண்டியில் பள்ளிக்கூடம் போகிற காட்சியைப் பார்த்து மகிழ்ந்தவர்தான் நம்முடைய அய்யா பெரியார் அவர்கள்.
எனவே, அவர் எப்போதும், எந்த மரபிற்குள்ளும் நிற்காத வர். அதனைத் தாண்டிச் சிந்திக்கின்றவர். புதிய வழிகளைக் காட்டுகிறவர்.
பெரியார் பிறந்த நாள் மலரில், தோழர் விஜயசங்கர் அவர்கள் எழுதிய கட்டுரையில் ஒரு தலைப்புக் கொடுத்திருக்கிறார். ‘‘அதுதான் பெரியார்!’’
அந்தத் தலைப்பு பல செய்திகளைச் சொல்லுகிறது. ‘‘சமதர்மமா? ஸநாதனமா?’’ ‘‘திராவிடமா? ஆரியமா?’’ என்கின்ற கேள்வியை நாம் இப்படிச் சொல்லலாம் ‘‘சமதர்மமா? ஸநாதனமா?’’ இதற்கு விடையை அய்யா பெரியார் அவர்களே, 1971 ஆம் ஆண்டு விடுதலை மலரில், இப்போது பெரியார் பிறந்த நாளில், நாம் மலர் வெளியிடுவதைப்போல, 1971 ஆம் ஆண்டு, அய்யா இறப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான அந்த மலரில், இதற்கான மிகச் சரியான விடையை பெரியார் அவர்கள் சொல்லியிருக்கிறார்.
ஜாதி ஒழிப்புதான் என்னுடைய
ஒரே வேலை: தந்தை பெரியார்!
அவர் என்ன கூறுகிறார் என்றால், ‘‘நான் ஜாதி சீர்திருத்தக்கா ரன் அல்ல; ஜாதி ஒழிப்புக்காரன். மத சீர்திருத்தக்காரன் அல்ல; மத ஒழிப்புக்காரன். ஜாதி ஒழிப்புதான் என்னுடைய ஒரே வேலை’’ என்கிறார்.
‘‘பிறகு ஏன் நீ கடவுளை எதிர்க்கிறாய்? பிறகு ஏன் நீ மதத்தை எதிர்க்கிறாய்? நீ ஜாதியை மட்டும்தானே எதிர்க்கவேண்டும்?’’ என்கிற கேள்விகளுக்கு மிக அருமையான ஒரு விடையைச் சொல்லுகிறார்.
ஜாதி ஒழிப்புதான் என் வேலை. ஆனால், அந்த ஜாதி என்பது, இந்த நாட்டில், கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பனியம் ஆகிய நான்கோடும் பின்னிப் பிணைந்திருக்கின்றது. அவற்றை ஒழிக்காமல் ஜாதியை ஒழிக்க முடியாது. ஜாதியை ஒழிக்காமல், மனிதர்களுக்கு வந்திருக்கின்ற இழிவை ஒழிக்க முடியாது.
மனிதர்களுக்கு எதிரானவனோ, மதத்திற்கோ, கடவுளுக்கோ நமக்கொன்றும் சிக்கலில்லை. கடவுளுக்கும், எனக்கும் வாய்க்கால் வரப்பு தகராறா?’’ என்று அய்யா கேட்டார்.
நமக்கு கடவுளோடு அல்ல, கடவுளின் பெயரால் சொல்லப்படுகின்ற ஜாதியோடுதான் போராட்டம். இதை மக்களும் இந்த நாட்டில் புரிந்துகொண்டிருக்கின்றார்கள்.
இங்கே பேசுகிறபோது சொன்னார்கள், மிக பழுத்த ஆன்மிகவாதியான ஒருவர், ‘‘பெரியார்’’ என்று கையில், பெரியாரின் படத்தைப் பச்சைக் குத்திக் கொண்டிருக்கின்றார் என்று.
அதுபோல, ஓர் அனுபவம், ஒரு நிகழ்வை சென்ற வாரம் நானும் பெற்றேன். காரைக்குடியில் இனமானப் பேராசிரியர் படிப்பு வட்டத்தின் சார்பில் உரையாற்றுவதற்காக நானும், என்னுடைய துணைவியாரும் காரைக்குடிக்குச் சென்றோம். இரவு 10.30 மணிக்குத் தொடர் வண்டி நிலையத்தில் இறங்குகிறபோது, பக்கத்துப் பெட்டியிலிருந்து ஒரு 5, 6 பேர் இறங்கினார்கள். அவர்கள், ஏதோ ஒரு ஆன்மிகப் பயணம் போகிறார்கள் என்பதை அவர்களுடைய தோற்றமே காட்டிற்று.
அதில் ஒருவருடைய கழுத்து நிறைய ருத்திராட்ச மாலை. அவ்வளவுதான் போட முடியும்; அதற்குமேல் கழுத்துத் தாங்காது. அந்த அளவிற்கு ருத்திராட்ச மாலை; நெற்றி நிறைய திருநீறு. அவ்வளவு பெரிய குங்குமப்பொட்டு.
என்னை வரவேற்பதற்காக, எழுத்தாளர் குமரன்தாஸ் அவர்களும், நம்முடைய கவியரசு முடியரசனுடைய மகன் செல்வமும் வந்திருந்தார். அவர்களுக்கும் அந்தக் காட்சி வியப்பாக இருந்தது.
ஓர் ஆன்மிகவாதியின் மகிழ்ச்சி!
அவர் என்ன செய்தார் என்றால், நான் மிகைப்படுத்திச் சொல்லவில்லை, உண்மையாகச் சொல்கிறேன். கையில் இருந்த பெட்டிகளையெல்லாம் கீழே வைத்துவிட்டு, என் கையைப் பிடித்துக்கொண்டு, ‘‘அய்யா, உங்களைப் பார்த்தது எனக்கு அவ்வளவு மகிழ்ச்சி. உங்கள் பேச்சைத்தொடர்ந்து கேட்கிறேன்’’ என்றார்.
நெற்றியில் திருநீறு, கழுத்தில் ருத்திராட்சக் கொட்டை, முழுக்க முழுக்க ஓர் ஆன்மிகப் பயணம். ஆனால், நான் அணிந்திருப்பது கருப்புச் சட்டை, ஆனால், அவர் சொன்னார், ‘‘அய்யா, உங்களைப் பார்த்தது எனக்கு அவ்வளவு மகிழ்ச்சி. உங்கள் பேச்சைத்தொடர்ந்து கேட்கிறேன்’’ என்றார்.
அப்படி கேட்பவர், அதைப் பின்பற்றுகிறாரா? என்பதல்ல. கேட்கிறார், என்ன ஒற்றுமை! என்ன அன்பு நமக்குள் ஏற்படுகின்றது என்றால், நான் கடவுளை மறுக்கிறவன் என்று அவருக்குத் தெரியும். பெரியாரின் பிள்ளை என்று அவருக்குத் தெரியும்.
மனிதநேயத்தை என்றென்றும் ஏற்றிப் போற்றுகின்றவர்களாக இருக்கின்றோம்!
ஆனாலும்கூட, என்னிடத்தில் ஏன் அவர் அன்புக்காட்டுகிறார் என்றால், நாம் கடவுளை, மதத்தை, ஜாதியை மறுக்கிறோமே தவிர, மனிதநேயத்தை என்றென்றும் ஏற்றிப் போற்றுகின்றவர்களாக இருக்கின்றோம். இன்னும் சொல்லப்போனால், அவர்களுக்கும் சேர்த்தே நாம் போராடுகின்றோம்.
நமக்கு விலங்கு மாட்டுகின்ற காவல்துறை நண்பர்க ளிடத்தில் நான் சில நேரம் சொல்வேன், ‘‘உங்கள் விலங்கு களையும் உடைப்பதற்காகவே நாங்கள் போராடுகிறோம்’’ என்று.
எனவே, நாம் அவர்களின் விலங்குகளையும் உடைப்ப தற்காகத்தான் போராடுகிறோம்.
அந்த உந்துதலால்தான், இங்கே உரையாற்றுகின்றபோது, ஆசிரியருடைய வயதுபற்றியும், அவருடைய நினைவாற்றலையும்பற்றி சொன்னார்கள்.
ஒரு கூட்டத்தில் என்னிடம் கேட்டார்கள், ‘‘உங்களுக்கு 73 வயதாகிறது என்கிறீர்கள்; நீங்கள், ஆண்டு, மாதம், தேதி ஆகியவற்றையெல்லாம் நினைவில் வைத்துக் கொண்டு சொல்கிறீர்களே, எப்படி?’’ என்று கேட்டார்கள்.
92 வயதில் நினைவிருக்குமானால்,
73 வயது ஒன்றும் பெரிதல்ல!
நான் ஒரே ஒரு வரியில் விடை சொன்னேன். நான் எப்படிச் சொல்லுகிறேன் என்றெல்லாம் விளக்கிச் சொல்லவில்லை. ஆசிரியருக்கு வயது 92. அவ்வளவுதான் விடை!
92 வயதில், அவருக்கு அவ்வளவு நினைவிருக்குமானால், 73 வயதில் நான் சொல்வது ஒன்றும் பெரிய செயல் அல்ல.
மக்களுக்காக உழைக்கவேண்டும் என்கின்ற அந்த ஊக்கம்.
இங்கே மகிழ்நன் உரையாற்றுகின்றபோது, ‘‘ஆஸ்திரே லியாவில் நடைபெறுகின்ற பெரியார் பன்னாட்டு அமைப்பின் மாநாட்டிற்கு ஆசிரியரை அழைத்திருக்கின்றோம்’’ என்றார்.
நான், ஆசிரியரிடத்தில் ‘‘நீங்கள் ஆஸ்திரேலியாவிற்குச் செல்லவேண்டாம்; உங்கள் உடல்நலத்திற்கு அது சரி வராது’’ என்று சொன்னேன்.
‘‘மருத்துவர் சோம.இளங்கோவன் அந்த மாநாட்டிற்கு வருகிறார். அவர் என்னைப் பார்த்துக் கொள்வார். நாம், ஆஸ்திரேலியாவிற்குச் செல்லலாம்’’ என்றார்.
நான் சொன்னேன், ‘‘இந்த வயதில் அரியலூருக்குப் போய் வருவதே கடினம்; ஆனால், நீங்கள் ஆஸ்திரேலியாவிற்குப் போய்விட்டு வரலாம் என்கிறீர்களே?’’ என்றேன்.
வயதிற்கேற்ற தளர்வுகள் உடம்பில் இருந்தே தீரும். அதில் ஒரு மாற்றமும் இல்லை. ஆனால், மனதில் ஒரு உந்துதல், அது பெரிய உற்சாகம் அல்ல, மகிழ்ச்சியல்ல, கடமை உணர்ச்சி!
இதைச் செய்யவேண்டும்; மக்களுக்குச் சொல்லவேண்டும் என்கின்ற கடமை உணர்ச்சி அவரை உந்துகிறது.
ஓரு செய்தி உங்களுக்குச் சொல்லவேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது.
இவற்றையெல்லாம் புரிந்துகொள்ளாதவர்கள், அல்லது புரிந்து கொள்ளாததுபோல நடிப்பவர்கள். பிறருக்காகப் பேசுகிறவர்கள் என்ன சொல்லுகிறார்கள்?
இன்றைக்கு அருள்மொழி பேசுகிறபோதும், கவிஞர் பேசுகிறபோதும் என்ன குறிப்பிட்டார்கள் என்றால், இது பெரியார் மண்ணா? இல்லையா? என்று.
அருள்மொழி மிகச் சரியாகச் சொன்னார், ‘‘இது பெரியார் மண்ணா, இல்லையா? என்பதல்ல கேள்வி. இது பெரியார் மண்ணாக இருக்கவேண்டுமா? வேண்டாமா?’’ என்பதுதான் கேள்வி.
தமிழ்நாடு பெரியார் மண் என்பதைக் கேலி செய்வதற்காகப் பேசுகின்ற சிலர்; அல்லது கேலி செய்வதாக நினைத்துக் கொண்டுப் பேசுகிற சிலர் என்ன சொல்லுகிறார்கள் என்றால், ‘‘இது பெரியார் மண் அல்ல; பெரியாரே ஒரு மண்தான்’’ என்று.
இதைக் கேட்டதும் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. உண்மைதான் தம்பி, ‘‘பெரியார் ஒரு மண்தான், அந்த மண்ணிலிருந்துதான் ஆசிரியரிலிருந்து என் அருமை மகள் மதிவதனி வரைக்கும் ஆயிரம் அறிவுச் செடிகள் இந்த மண்ணில் வளர்ந்தன. பெரியார் மண்தான்; ஆனால், அந்த மண், எல்லாவற்றையும் விளைவித்துத் தருகின்ற மண். அந்த மண், இந்தப் பூமிக்குத் தேவையானவர்களை உற்பத்திச் செய்து தருகின்ற மண்!’’
இதை ஏன் அவர்கள் பேசுகிறார்கள் என்றால், பேசவேண்டியவர்கள், பேசுவதற்கு அஞ்சி, இவர்களைப் பேசத் தூண்டுகிறார்கள்.
கூடுதலாக ஒவ்வொரு நாளும் இழிவாகப் பேசுகிறார்களே!
அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.
நீங்கள் வாடகை மகிழுந்தில் பயணம் செய்தால், எவ்வளவு தொலைவு கூடுதலாகப் பயணம் செய்கிறீர்களோ, அவ்வளவுக் கட்டணம் கூடிக்கொண்டே இருக்கும்.
அவர்கள் கூலிக்குப் பேசுகிறார்கள்;
நாம், சமூகத்திற்காகப் பேசுகிறோம்!
அதேபோல, பெரியாரை எவ்வளவு இழிவாகப் பேசுகி றார்களோ, அதற்கேற்ற அளவு கூலியும் அவர்களுக்குக் கூடிக் கொண்டே இருக்கும். எனவே, அவர்கள் கூலிக்குப் பேசுகி றார்கள்; நாம், இந்த சமூகத்திற்காகப் பேசுகிறோம்.
எனவேதான், எவ்வளவுப் பேசினாலும், எத்தனை ஆண்டுகளாகப் பேசினாலும், யார் யாரை வைத்துப் பேசினாலும், இன்றுவரையில், பெரியார்தான் பேசப்படுகிறார். மற்றவர்களின் எந்தப் பேச்சும் இந்த மண்ணில் நிற்கவில்லை; நிற்காது.
பெரியார் பிறந்த நாளில், இன்றைக்கு அவருடைய பல செய்திகளை மிக அழுத்தமாக தமிழ்நாடு முழுவதும், உலகம் முழுவதும் தோழர்கள் எடுத்துச் சொல்லிக் கொண்டி ருக்கின்றார்கள்.
இந்த மலரில், ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் வந்த கட்டுரையை தமிழில் மொழிப் பெயர்த்துப் போட்டி ருக்கிறார்கள்.
மக்கள் தொகைக் கட்டுப்பாட்டைப்பற்றி முதலில் பேசியவர் அய்யா பெரியார்தான். எப்பொழுது பேசினார், அரசு எப்போது சொல்லிற்று?
அரசு அதனை முன் வைத்தது 1950 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு. ஆனால், பெரியார், 1930 ஆம் ஆண்டிலேயே பேசி னார். அதையும் இங்கே இருக்கின்ற பெண்கள், பின்னால் அமர்ந்திருக்கின்ற தோழர்கள் மிக கவனமாகக் கேட்க வேண்டும்.
நாமெல்லாம் என்ன சொல்வோம் என்றால், குடும்பக் கட்டுப்பாடு என்பது பொருளாதாரத்திற்கு நல்லது.
குடும்பக் கட்டுப்பாடு என்பது இந்த நாட்டினுடைய வளர்ச்சிக்கு நல்லது என்று சொல்வார்கள்.
ஆனால், பெரியார் அப்படிச் சொல்லவில்லை.
பெரியார் சொன்னார், எதற்காகக் குடும்பக் கட்டுப்பாடு?
ஒரு பெண், தான் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்கின்ற விருப்பமும், உரிமையும் உடையவள்.
கூடுதல் குழந்தை, பெண்களுடைய உடல்நலத்தையும், உரிமையையும் கெடுத்து விடுகிறது என்பதால், குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைப்பற்றிப் பேசியவர் பெரியார்.
அதைத்தான் அப்படியே புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், பெரியாருடைய கருத்தைத்தான் பாட்டாகச் சொன்னார். நான் பல கூட்டங்களில் சொல்லியிருக்கின்றேன்.
பொதுவாக பாட்டுக்குத்தான் உரை எழுதுவார்கள். புரட்சிக்கவிஞரோ, பெரியாரின் உரைக்கெல்லாம் பாட்டு எழுதினார்.
‘‘காதலுக்கு வழி வைத்து
கருப்பாதை சாத்த
கதவொன்று கண்டறிவோம்
இதில் என்ன குற்றம்?’’ என்று பெரியாரின் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை அழகான தமிழ் வரிகளால் சொன்னது அந்தப் பாட்டு!
அப்போது பெரியார் ஒரு கருத்தைச் சொல்லுகிறார். அதைப்பற்றி இப்போது நினைத்தாலும் எனக்கு வியப்பாக இருக்கிறது.
இங்கிலாந்து மருத்துவர் மேரி ஸ்டோப்ஸ்
அய்யா சொல்லுகிறார், ‘‘இந்தக் குடும்பக் கட்டுப்பாடு திட்டம்பற்றி, இங்கிலாந்தில் உள்ள ஒரு மருத்துவப் பெண்மணி சரியாகச் சொல்லியிருக்கிறார்’’ என்கிறார்.
நான் தேடுகிறேன், அப்படி ஒரு மருத்துவப் பெண்மணி சொல்லியிருக்கிறாரா? என்று.
1928 ஆம் ஆண்டில், மேரி ஸ்டோப்ஸ் என்கின்ற இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மருத்துவர் சொல்லியிருக்கிறார்.
இதில் என்ன வியப்பு என்றால், இன்றைக்கு நம் கைகளில் கைப்பேசி இருக்கிறது. இப்போது அமெரிக்காவில் நடப்பது, அடுத்த நிமிடம் நமக்குச் செய்தியாக வந்துவிடுகிறது.
ஆனால், அய்யா வாழ்ந்த காலத்தில், இங்கிலாந்தில் உள்ள ஒரு மருத்துவர் பேசியதை, இவர் எப்படி அறிந்தார்? எப்படி அதைப் படித்தார்? எங்கே அதைப் படித்தார்? தெரியவில்லை. காரணம், வாழ்நாளெல்லாம் அய்யா படித்துக் கொண்டிருந்தார். நமக்காகப் படித்துக் கொண்டிருந்தார்.
பெரியாரும், அம்பேத்கரும் அறிவாளிகள் என்றால், படித்ததால் அவர்கள் அறிவாளிகளல்ல. நமக்காகப் படித்ததால், அவர்கள் அறிவாளிகள்.
காலத்தை வென்று நிற்பவர்கள் யார்?
தன் சொந்த முயற்சிக்காக, சொந்த உயர்வுக்காகப் படிக்கின்றவன் அறிவாளியாக இருக்கலாம். ஆனால், சமூகத்திற்காக எவன் படிக்கிறானோ, சமூகத்திற்காக எவன் உழைக்கிறானோ, அவனே காலத்தை வென்று நிற்பான்.
அய்யா பெரியார் இன்றும் நிற்பார்!
என்றும் இந்த உலகத்தில் உயர்ந்து, ஓங்கி நிற்பார்!
வாய்ப்புக்கு நன்றி! நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.