‘திராவிட மாடல்’ அரசின் நாயகர் நமது முதலமைச்சர் பங்கேற்கிறார்! வாழ்வில் ஓர் திருநாள் – தவறாமல் பங்கேற்பீர்!! அறிவாசான் பெரியார் அழைக்கிறார் குடும்பத்தோடு வாரீர்! வாரீர்!!

4 Min Read

*அக்டோபர் 4 அன்று மறைமலைநகரில் சு.ம. இயக்க நூற்றாண்டு நிறைவு விழா – திராவிடர் கழக மாநில மாநாடு!
* காலை முதல் இரவு வரை அடர்த்தியான நிகழ்ச்சிகள்!

அக்டோபர் 4 அன்று செங்கற்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் நடைபெறவிருக்கும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மற்றும் திராவிடர் கழக மாநில மாநாட்டிற்கு நானே அழைக்கிறேன் என்று எண்ணாதீர் – நமது அறிவு ஆசான் அழைக்கிறார்!! என்ற உற்சாகத்தோடு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

நமது பாசமிகு கொள்கை உறவுகளே!

மதிப்புமிகு பெரியார் பற்றாளர்களே, போராளிகளே, தமிழ் இனவுணர்வாளர்களே, அனைவருக்கும் சுயமரி யாதை வணக்கம்!

இன்னும் பத்து நாள்கள்தான் இடைவெளி!

ஒப்பாரும் மிக்காருமிலா நமது அறிவுப் பேராசான் உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் கண்ட ‘‘சுயமரியாதை இயக்கத்திற்கு’’ நூற்றாண்டு நிறைவு விழா!

அதுவும், 1929 இல் அவ்வியக்கத்தின் முதல் மாகாண மாநாடு நடைபெற்ற செங்கற்பட்டில் நடைபெற்றது. தமிழ்க்கடல் மறைமலையடிகளார் பெயரான மறைமலை நகரில், இவ்வாண்டு வருகின்ற அக்டோபர் 4 ஆம் தேதி, காலை 8 மணிமுதல் இரவு 9 மணிவரை அடர்த்தியான கொள்கை விளக்க, சாதனை சரித்திரத்தினை இன்றைய இளைய தலைமுறையினரும் கண்டு, அதன் தாக்கம் எப்படி சமூகப் புரட்சியாக மலர்ந்து, புதியதோர் சுயமரி யாதை உலகை உண்டாக்கியுள்ளது என்பதை அகிலம் அறிய மகத்தான, பெரியார் சுயமரியாதை இயக்க நிறைவு விழா மாநாடு ஓர் அரிய புதிய பொன்னேட்டை இயக்கச் சரித்திரத்தில் இணைக்கப் போகிற மாநாடு, கொள்கைக் கொண்டாட்டத்துடன், கோலாகலமாக நடக்கவிருக்கிறது!

உலக மயமாகும்
தந்தை பெரியாரின் கொள்கைகள்!

தந்தை பெரியாரின் தொண்டறக் கொள்கைகள் உலகமயமாகிக் கொண்டிருப்பதால், ஒரு சீரிய பங்கைச் சிறப்பாகச் செய்துவரும், உலக நாடுகள் பலவும் மெச்சிப் பாராட்டி, தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ ஆட்சியின் அரியதோர் சாதனையாக, தமிழ்நாட்டு வளர்ச்சிக்கும், தமிழின இளைஞர்களின் வேலை வாய்ப்புகளுக்கும் வழி ஏற்படுத்த தொழில் முதலீடு களை ஈர்க்கும் பணியிலும், ‘திராவிட மாடல்’ ஆட்சி கடந்த 50 ஆண்டுகளுக்குமுன் அறிஞர் அண்ணா வால் பெரியாருக்கு அர்ப்பணிக்கப்பட்டு, அதன் தொடர்ச்சியாக அதனை உறுதியாகவும், சிறப்பாக பெருமிதத் திசை காட்டியாக்கி மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞர் அவர்களது கொள்கைவழி ஆட்சியில் வெற்றி சாதனை களும், அவருக்குப் பின் சில ஆண்டுகள் கழித்துப் பொறுப்பேற்று, புரட்சித் தமிழ்நாடாக நம் பெரியார் மண்ணை நாளும் ஆக்கி வருகிற ஆளுமைமிகு  ‘திராவிட மாடல்’ நாயகர், அந்த நூற்றாண்டு நிறைவு மாநாட்டின் சிறப்புகளை எடுத்துரைத்து, தனது கொள்கை எதிரிகளைப் புறமுதுகிட்டு ஓடச் செய்து புதிய புறநானூறு படைக்கவிருக்கிற நமது முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் நிறைவுரையாற்ற ஒப்புதல் அளித்துள்ளார்.

காலைமுதல் வியத்தகு நிகழ்ச்சிகள்!

மாநாட்டில், காலை முதல் நமது கொள்கைப் பரப்புப் பணியினரும், தி.மு.க.வின் முக்கிய தலைவர்களும் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்!

வியக்கத்தக்க ஏற்பாடுகள்!

நமது வாழ்நாளில் மறக்க முடியாத சாதனை இயக்க சரித்திரத் திருவிழா, பெருவிழா!

கடந்த சில மாதங்களாக உடல்நலங் குன்றி, அறு வைச் சிகிச்சைக்கு ஆளாகி, எண்ணிய வேகத்தோடு சுற்றுப்பயணத்தைத் தொடர முடியாத நிலையில், கழகத்தின் கொள்கைத் தோழர்கள் குடும்பம், குடும்பமாக வருவதைக் கண்டு, எனது வலியகற்றி, வழிமீது விழி வைத்து காத்திருக்கிறேன், தோழர்களே!

தவறாது வாருங்கள்!

மறைமலைநகரை நோக்கி வாரீர்!

செல்லுமிடங்கள் எல்லாம் கட்சிகளைக் கடந்தும்கூட திராவிடப் பெருமக்கள், பெரியாரின் வாழ்நாள் எளிய தொண்டன்மீது பொழியும் வற்றாத அன்பும், வாஞ்சையும் என்னை மேலும் தொண்டு செய்து, துவளாது நம் உரிமைப் போரை நடத்த, களங்களுக்குச் செல்ல, நமது இளைஞர் பட்டாளத்தையும், மகளிர் மற்றும் அனைத்து இயக்கத்தின் மாண்பை பரப்பும் பணியை மேலும் ஊக்கமூட்ட, உற்சாகம் பொங்கிய நிலையில்,  மறைமலைநகர் நோக்கி ஓடோடி வாருங்கள் தோழர்களே!

நானே அழைக்கிறேன் என்று எண்ணாதீர் –

நமது அறிவு ஆசான் அழைக்கிறார்!!

உலக மயமாகி வரும் நமது உன்னத உலகத் தலை வர் தந்தை பெரியார் அழைக்கிறார்!!

நமது பேட்டரிகளை ‘ரீசார்ஜ்’ செய்துகொள்ள வேண்டாமா?

தந்தை பெரியார்தம் கொள்கை எதிரிகளின் அழி முயற்சிகள் எவ்வளவு கூடினாலும், அவற்றை ஊதித் துரும்புபோல் அழித்தொழிக்கும் உண்மைத் தொண்டர் கூட்டம் இவ்வளவா? அதுவும் மகளிரிலா என்று மலைக்க வையுங்கள்!

‘இவ்வளவுப் பெரிய திரளா’
என்று வியக்கவேண்டும்!

‘‘இந்த இயக்கம் பெரியாரோடு முடிந்துவிடும்’’ என்று நம் கொள்கை எதிரிகள் போட்ட கணக்கைப் பொய்யாக்கிட, இதோ நன்றி, பதவி, புகழ் நாடா, தேடாத தனித்தன்மை வாய்ந்த இளைஞர் கூட்டம், மாணவர் கூட்டம், பலதரப்பட்டவர்களும் இதில் இவ்வளவு பேர்களா? இத்தகைய மக்கள் பெருந்திரளா? என்று  அவர்கள் மருண்டு போகின்ற அளவிற்கு அனை வருக்கும் ஒரே இலக்கு – மறைமலை நகர் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு – திராவிடர் கழக மாநில மாநாடு – அக்டோபர் 4 – நம் வாழ்வில் ஒரு திருநாள்!

‘‘பெரியார் உலக மயம்

உலகம் பெரியார் மயம்’’ என்ற சாதனைகள் தொடர மாநாடு ஒரு பெரிய, அரிய திருப்பமாகும். பணித் தோழர்கள் என்னும் சிங்கக் குட்டிகளின் சிறப்புமிகு கூடல் களிப்புடனும், கடமையுடனும் வாருங்கள்! குடும்பத்துடன் வாருங்கள்!

வாருங்கள் தோழர்களே, தவறாது வாருங்கள்!

எதிர்நோக்கி அழைக்கும் உங்கள் தொண்டன்,

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
23.9.2025

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *