தந்ைத பெரியாரை நாட்டு மக்களிடம் இருந்து பிரிக்க முடியாது! பெரியாரின் பிம்பத்தை உடைப்பதற்கு இன்னும் நூறாண்டுகள் அல்ல; ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் முடியாது!
கோவை, செப்.22 பெரியாரையும், தமிழ்நாட்டில் முதல மைச்சராக இருக்கிற முத்துவேல் கருணாநிதி மு.க.ஸ்டாலின் அவர்களையும், எந்த காலத்திலும் பிரிக்க முடியாது. திராவிடர் கழகத்தையும் – திமுகவையும் எந்தக் காலத்திலும் பிரிக்க முடியாது; பெரியாரை நாட்டு மக்களிடம் இருந்து பிரிக்க முடியாது என்றார் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள்.
தந்தை பெரியார் சிலையைத் திறந்து அமைச்சர் எ.வ.வேலு உரை!
கடந்த 14.9.2025 அன்று கோவை ஆற்று பாலம் பகுதி யில் நடைபெற்ற புனரமைக்கப்பட்ட தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவில், நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆற்றிய உரை வருமாறு:
‘‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு!’’ என்ற ஒரு தத்துவத்தை உலகிற்கு தந்த அய்யா அவர்களின் சிலை திறப்பு விழாவிற்கு வருகை தந்துள்ள உங்கள் அத்துைண பேருக்கும் என் அன்பு கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
தாய்க் கழகம் சார்பில் நடைபெறும் இந்த விழாவில், அதன் குழந்தைகளான நாங்களெல்லாம் கலந்து கொள்வதில் பெருமை கொள்கிறோம்.
கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு ‘‘பொன் வைக்கிற இடத்தில் பூ வாவது வைக்கவேண்டும்’’ என்று சொல்வார்கள். அது எங்கே பொருத்தமாக இருக்கிறதோ தெரியாது, இங்கே அது பொருத்தமாக இருக்கிறது.
சிலையை திறக்கின்ற உரிமை, அதன் பிறகு ஒரு பண்பட்ட உரை – இதையல்லாம் செய்ய வேண்டியது யாரொன்று சொன்னால், தமிழர் தலைவர் அருமை அண்ணன் ஆசிரியர் வீரமணி அவர்கள் தான் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கிறேன்.
அவர் பொன் போன்றவர்; நான் பூ போன்றவன்.
இந்த நிகழ்ச்சியை அன்புராஜ் அவர்களும். மாவட்ட கழகத் தோழர்களும் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர். அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி கலந்த வணக்கத்தைத் தெரிவித்து கொள்கிறேன்
பெரியாரின் பிம்பத்தை உடைப்பதற்கு
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் முடியாது!
பெரியாரின் பிம்பத்தை உடைப்பதற்கு இன்னும் நூறாண்டுகள் காலம் அல்ல; ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தமிழ்நாட்டில் முடியாது.
அப்படிப்பட்ட நமது அய்யா பெரியார் அவர்கள் வாழ்ந்த காலம் என்று சொன்னால் 94 ஆண்டு காலம்; அதில் 8,600 நாள்கள் பயணம் செய்திருக்கிறார்; சுமார் 13 லட்சத்து 12 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணித்து இருக்கிறார். அவர் 10,700 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இருக்கிறார்,
தமிழ் சமுகத்தை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்ற உழைத்திருக்கிறார்.
தனிமனித முன்னேற்றம் இருந்தால், சமுக முன்னேற்றம் ஏற்படும் என்று எண்ணியவர், அதற்காக உழைத்து உழைத்து சமுதாய புரட்சி செய்தவர் அய்யா தந்தை பெரியார் அவர்கள்.
பெரியாரை ‘சமூகப் போராளி’ என்று
ஏன் அழைக்கிறோம்?
அதனால் தான் அவரை ‘சமூகப் போராளி’ என்று நாம் அனைவரும் அழைத்து கொண்டாடுகிறோம்
தீண்டாமை கொடுமை ஒழிக்க வைக்கம் வரை சென்று போராடியவர். தந்தை பெரியார் அவர்களை 13 வயதிலேயே பார்த்தவன் நான். இன்னும் சொல்லப்போனால் அழுத்தமாக அவர் கொள்கையைப் படித்தவன்.
அகிலத்திற்கே அறிவு தீபம் ஏற்றிய
அய்யா பெரியார் சிலை திறந்து வைப்பதில்
நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்!
எங்கள் ஊருக்கும், திருவண்ணாமலைக்கும், அய்யா அவர்களுக்கும் நீண்ட நெடிய தொடர்பு உண்டு.
ஆண்டாண்டு காலமாக ஆன்மீக தீபம் ஏற்றிய திருவண்ணாமலைக்காரனான நான், அகிலத்திற்கே அறிவு தீபம் ஏற்றிய அய்யா பெரியார் சிலை திறந்து வைப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். திராவிடர் கழகம் ஆன்மீகத்தை ஏற்றுக்கொள்ளாது. மனித முன்னேற்றம் தான் சமூக முன்னேற்றம் என்று சொன்னவர் பெரியார்.
நாம் வைக்கத்தைப் பற்றி பல்வேறு கால கட்டத்தில் படித்து இருக்கிறோம். தமிழ்நாட்டில் ‘திராவிட மாடல்’ ஆட்சியை முதலமைச்சர் அவர்கள் மிகச் சிறப்பாக நடத்தி வருகிறார்
திராவிடர் கழகம் தோன்றுவதற்கு முன்பே – இன்னும் சொல்லப்போனால், நாட்டுக்குச் சுதந்திரம் வாங்குவதற்கு முன்பே அந்த காலக்கட்டத்தில் தீண்டாமை ஒழிக்க வேண்டும் போராட்டம் செய்து, நூறாண்டு காலம் நிறை வுற்றதை நினைவூட்டும் வகையில் ஒரு நிகழ்வை வைக்கத்தில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நம் முதலமைச்சர் ஆணையிட்டார்.
அது ஒரு நிகழ்வாக மட்டும் இல்லாமல் அறிவுப் புரட்சியாக வேண்டும் என்று அவர் பெயரில் வைக்கத்தில் ஒரு நூலகம் அமைக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஆணையிட்டார்
வாழ்நாள் முழுவதும் எனக்கு பெருமை!
அந்த அடிப்படையில் வைக்கம் வீரர் என்று பலரும் பாராட்டுகின்ற அய்யா அவர்கள் பெயரில் ஒரு நூலகத்தையும், ஒளிப்பட கண்காட்சி அரங்கத்தையும் எங்கள் துறையின் சார்பில் அமைத்து, அந்த நிகழ்ச்சியை அம் மாநிலத்தின் முதலைமைச்சர் பினராயி விஜயன் உள்பட, அந்த மாநில நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் பங்கேற்க வைத்து, தளபதி அவர்களுடைய தலைமையில், அண்ணன் வீரமணி அவர்கள் உரையோடு அந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சி என்று சொல்வதை விட ‘மாநாடு’ என்று சொல்லும் அளவிற்கு மிக சிறப்பாக நடைபெற்றது.
அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பை, 13 வயதில் நான் மாணவனாக இருந்தபோது, தந்தை பெரியார் அவர்களைப் பார்த்த எனக்குக் கிடைத்த வாழ்நாள் பெருமையாகும்.
அய்யா அவர்கள் ஒரு தீர்க்கதரிசி; தென் கிழக்கு ஆசியாவில் சாக்ரடீஸ் என்று அய்யா அவர்களைத் தான் சொல்லுவார்கள். அவர் ஒரு தத்துவமேதை; அறியாமை, மூட நம்பிக்கை, அர்த்தமற்ற பழக்கம் வழக்கத்திற்கு எதிரானவர்.
கல்வி நிலையங்களில் தாய் மொழியில் கற்க வேண்டும் என்று சொன்னார்,
ஆண்களுக்கு சமமான உரிமை, பெண்களுக்கு வேண்டும் என்று சொன்னார்.
பள்ளிக்கூடத்தில் ஆரம்பக் கல்வியில் கூட தாய்மார்களான சகோதரிகள் தான் ஆசிரியராக இருக்கும் வேண்டும் என்று சொன்னவர் தந்தை பெரியார் அவர்கள்.
பகுத்தறிவு கருத்துகளால்
பண்பட்ட எங்கள் மாவட்டம்
பெரியார் அறிமுகப்படுத்திய சுயமரியாதைத் திருமணம் நம் நாட்டில் அதிகம் நடைபெற்ற கொண்டு இருக்கிறது. எங்கள் மாவட்டம் திராவிடர் கழகத்தின் பகுத்தறிவு கருத்துகளால் பண்பட்ட மாவட்டம்.
பகுத்தறிவு திருமணத்தை, சீர்திருத்த திருமணத்தை, தமிழ் திருமணத்தை, சுயமரியாதை திருமணத்தை, திராவிட திருமணத்தை நாட்டில் வித்திட்டவர் அய்யா என்று சொன்னால் மிகையாகாது,
சேரன்மகாதேவி குருகுலத்தில்
தீண்டாமைக் கொடுமை!
இதற்கெல்லாம் என்ன காரணம்? எது அவரை தூண்டி யது? என்று அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் படித்து பார்த்தேன், என் மனதிற்குள் தோன்றியது – சேரன்மகாதேவி குருகுலத்தில் தீண்டாமை கொடுமை அதன் விளைவு தான் மாபெரும் புரட்சியை செய்யத் தூண்டியது என உணர்கிறேன்.
தந்தை பெரியார் அவர்களின் முதல் குழந்தை அறிஞர் அண்ணா அவர்கள். கருத்து மாறுபாடுகள் இருந்த நிலையில், நேரடியாக மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற முடிவின் அடிப்படையில், அரசியல் கட்சி தொடங்கி போது, அய்யா அவர்கள் எதிர் விளைவை ஆற்றியதாக சிலர் சொல்வார்கள்.
திமுக ஆட்சி தந்தை பெரியாருக்கு காணிக்கை
மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்றுதான் அறிஞர் அண்ணா கட்சியைத் தொடங்கினார் ஆட்சிக்கு வந்ததும் அண்ணா அவர்கள் சொன்ன முதல் வார்த்தை, ‘‘இந்தத் திமுக ஆட்சி தந்தை பெரியாருக்கு காணிக்கை’’ என்று அறிவித்தார்
அதற்கு பிறகு ஆட்சிக்கு வந்த டாக்டர் கலைஞர் அவர்கள், தமிழ்நாடு அரசு தான் பெரியார், பெரியார் தான் தமிழ்நாடு அரசு என்றார்.
ஒரு நாணயத்தை இரண்டு பக்கமும் திருப்பித் திருப்பிப் பார்த்தால், அது ஒரு நாணயம் தான்; அதுபோல இது பெரியார் அரசு தான், தமிழ் நாடு அரசு தான், பெரியாருடைய அரசு என்று சொன்னார் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள்.
நான் இப்போது தந்தை பெரியார் சிலை திறந்து வைக்கிறேன்; மேடையில் அய்யாவின் கொள்கையைப் பேசிக் கொண்டு இருக்கிறேன் என்று சொன்னால், என் மீது கூட விமர்சனம் இருக்கலாம்.
பெரியார் ராமசாமி தனை
முதன்முதலில் தொழுதிடுவோம்!
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள், ஒருமுறை சேலத்தில் கவியரங்கம் ஒன்றில் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
‘‘‘பூமியிலே நம்மை வாழவைத்த வளரவைத்த
சாமிதனை முதன்முதலில் தொழுதிடுவோம் – ராம
சாமிதனை முதன்முதலில் தொழுதிடுவோம் – பெரியார்
ராமசாமி தனை முதன்முதலில் தொழுதிடுவோம்’’
என்று தான் கவியரங்கம் தொடங்குகிறார்.
கவியரங்கத்தைக் காண வந்த, பாட வந்த பெருமக்களோ ‘‘திருவரங்கம் பெருமாள் போல் படுத்திருந்து எப்படி கலைஞர் இணைக்கிறார் பாருங்கள்’’ என்றனர்.
தந்தை பெரியார் அவர்கள் படுக்கையறையில் இருந்து போதும் கூட மக்களுக்காக உழைக்காமல் இருந்ததில்லை. தமிழ் உணர்வை திசை எங்கும் விழித்திருந்து முழக்கம் செய்தார் சீர்திருத்தியவர் பெரியார் அன்றோ…
அதனால் அவர்,
‘‘பயிர் போன்றார் உழவர்க்கு!
பால் போன்றார் குழந்தைகளுக்கு!
பசும் பால் கட்டி தயிர் போன்றார் பசித்தவர்க்கு!
தாய் போன்றார் ஏழைக்கு!
தவம் போன்றார் முனிவர்க்கு!
செந்தமிழ் நாட்டில் பிறந்த மக்களுக்கெல்லாம் உயிர் போன்றார் தந்தை பெரியார்!
முகத்தில் நீண்ட தாடி உண்டு
கண்ணிலே நீண்ட கூர்மை உண்டு’’
‘‘பம்பரமும் சுற்றிய பின் நின்று விடும்!
படுகிழமாய் ஆனபின்னும் பம்பரமாய் சுற்றியவர் தந்தை பெரியார்!’’
‘‘தமிழ்நாட்டின் தந்தை!’’
அவருக்கு அரசு மரியாதை கொடுப்போம்!
பெரியார் அவர்கள் மறைந்த போது, டாக்டர் கலைஞர் அவர்கள் பெரியார் உடலுக்கு அரசு மரியாதை செய்ய வேண்டும் என்று அதிகாரிகளை அழைத்துக் கேட்ட போது,
‘‘பெரியார் எந்த அரசுப் பதவியிலும் இருந்ததில்லை; அதனால் அரசு மரியாதை வழங்க சாத்தியமில்லை’’ என்றனர் அரசு அதிகாரிகள்.
‘‘காந்தியார் எந்த அரசுப் பதவியில் இருந்தார்; அவ ருக்கு அரசு மரியாதை வழங்கியதே’’ என்றார் கலைஞர்.
அதற்கு அதிகாரிகள் அவர் ‘தேசத் தந்தை’ என்றனர்.
‘‘எங்களுக்கு ஊனாய், உயிராய் இருந்த தந்தை பெரியார் ‘‘தமிழ்நாட்டின் தந்தை!’’ அவருக்கு அரசு மரியாதை கொடுப்போம்; அதனால் எது நடந்தாலும், அதைச் சந்திக்க தயார்’’ என்றவர் டாக்டர் கலைஞர் அவர்கள்.
அவருக்கு பின்னால் ஆட்சிக்கு வந்த தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், இந்த மும்மூர்த்திகள் கொள்கைகள் – எந்த மும்மூர்த்திகள்? தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகியோரின் கொள்கைகள் வழியில்தான் இந்த ஆட்சி நடைபெறுகிறது. அதனால் இது ‘திராவிட மாடல் ஆட்சி’ என்று அறிவித்தவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்.
‘திராவிடம்’ என்ற சொன்னால், பல பேருக்கு கசக்கும்; ஆனால், தமிழ் நாட்டில் இருக்கிற சூடு, சுரணை உள்ள அத்தனைப் பேருக்கும் திராவிடம் என்றால் இனிக்கும்.
இந்த ஆட்சியில், சட்டமன்றத்தில் பலமுறை அதை பறை சாற்றினார். இந்த மும்மூர்த்திகளின் கொள்கைகள், கோட்பாடுகள், தீர்மானங்களை நிறைவேற்றுவதே ‘திராவிட மாடல்’ ஆட்சியின் கொள்கைத் திட்டம் ஆகும் என்றார்
சமத்துவபுரம் திட்டம் தந்தார் கலைஞர் அவர்கள். உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்து சமத்துவபுரங்களைக் கட்டி முடித்தவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்தான்.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகப்
பணி நியமனம்!
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்பது கொள்கை லட்சியம். அதற்கு மாபெரும் போராட்டம், அதற்கு ஆணை பிறப்பித்தவர் டாக்டர் கலைஞர். அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.
இந்த ஆட்சியில் வழக்கில் வெற்றி பெற்று அதற்கு ஆணை பிறப்பித்தவர் தளபதி மு.க.ஸ்டாலின் ஆவார்.
அதனால் தான் இன்று அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகி, பல கோயில்களில் பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்கள் என்று சொன்னால் அதற்கும் வித்திட்டவர் நம் முதலமைச்சர், இந்தத் ‘திராவிட மாடல்’ ஆட்சி தான்.
பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் என்றவர் தந்தை பெரியார்!
தாய்மார்கள் இங்கு ஏராளமாக அமர்ந்து இருக்கிறீர்கள்; ‘‘போகிற இடத்தில் பிழைப்பு நடத்தினால் போதும்’’ என்று சொல்லும் தாய்மார்கள் உண்டு. அதையும் மீறி ஆணும் – பெண்ணும் சமம் தான் அவர்களுக்கும் சொத்தில் பங்கு வேண்டும் என்றார்.
இந்த ஆட்சியை பயன்படுத்திப் பெண்களுக்குச் சொத்தில் பங்கு உண்டு என்றதும் கலைஞர் ஆட்சியில்தான், தி.மு.க. ஆட்சியில் தான்.
திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் அன்புராஜ் அவர்கள் குறிப்பிட்டதை போல, இந்தக் கொங்கு மண்டலத்தில், கொங்கு சீமையில் பெரியார் பிறந்தார்; நான் ஆரம்பத்தில் சொன்னது போல ‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு.’
குலத்தொழிலில் இருந்து மீண்டு நல்ல நிலைக்கு உயர வேண்டும்; பல அறிஞர்கள் வரவேண்டும்; அந்த அறிவைப் பெற அறிவார்ந்த நூலகம் தேவை. அப்படிப்பட்ட நூலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கோவை மண்ணிலேயே பெரியாருடைய பெயரிலே கட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.
பெரியார் பிறந்த நாள்,
சமூகநீதி நாளாக அறிவிப்பு!
ஆட்சியைப் பயன்படுத்தி, அதிகாரத்தை பயன்படுத்தி ஆணை போட்டால் ஒன்று செய்ய முடியாது; சட்டமன்றத்தில் சட்டம் இயற்றி, தந்தை பெரியார் பிறந்த நாளை (செப்.17) சமூக நீதி நாள் என்று அறிவித்தது ‘திராவிட மாடல்’ ஆட்சி தளபதி ஆட்சியில் தான்
அய்யாவின் வழித்தோன்றலாக நடைபெற்றுக் கொண்டிருக்கிற இந்த ஆட்சியில், பொது மேடையாக இருந்தாலும், கழக மேடையாக இருந்தாலும், திருமண மேடையாக இருந்தாலும் நான் எப்போதும் சொல்வதும் உண்டு – எங்கள் இயக்கத்தின் முதல் தலைமுறை தந்தை பெரியார்; இரண்டாம் தலைமுறை அறிஞர் அண்ணா; மூன்றாவது தலைமுறை முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர்; நான்காவது தலைமுறை தற்போதைய முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆவார்.
இந்தியாவில் நம்பர் 1 மாநிலமாக தமிழ்நாடும், நம்பர் 1 முதலமைச்சராக தளபதி மு.க.ஸ்டாலினும் திகழ்கிறார்கள்!
ஆக, நான்காம் தலைமுறையாக இந்த ஆட்சி நடைபெறும் காரணத்தால், இன்றைக்கு இந்தியாவே பாராட்டும் அளவிற்கு தமிழ்நாடு அரசு, பொருளாதாரத்திலே, உயர் கல்வியிலே, தொழில் வளர்ச்சியிலே, மகளிர் முன்னேற்றத்திலே, கர்ப்பிணி பெண்கள் பராமரிப்பிலே, வேளாண்மைத் துறையிலே, மருத்துவத்திலே –ஏன் அனைத்து துறைகளிலும் இந்தியாவில் நம்பர் 1 மாநிலமாக தமிழ்நாடும், நம்பர் 1 முதலமைச்சராக தளபதி மு.க.ஸ்டாலினும் திகழ்கிறார்கள் என்று சொன்னால், அதற்குக் காரணம் நாங்கள் தந்தை பெரியார் வழியில், ‘திராவிட மாடல்’ ஆட்சியை நடத்தி கொண்டிருப்பதினால்தான்.
தமிழ்நாடு முதலமைச்சருக்கு பெரியார் மீது அளப்பரிய பாசம் உண்டு; ஒரு புரிதலுக்கு அதை ‘பக்தி’ என்று கூட சொல்லலாம். ‘பக்தி’ என்கிற வார்த்தை ஆன்மீகத்துக்கு மட்டும் சொந்தமல்ல; பகுத்தறிவாளருக்கும் சொந்தம்தான்.
லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் படம் திறப்பு!
அதனால் தான், உலகத் தலைவராக தந்தை பெரியார் படத்தை தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில், பல ஆய்வு மாணவர்கள் நிறைந்த இடத்தில் திறந்து வைத்து அவர் ஆற்றிய உரை என்பது மிக சிறப்பானது ஆகும்.
திரையுலகின் மூலம் தந்தை பெரியார் பற்றி மேலும் அனைவரும் அறிந்த கொள்ளும் வகையில் ‘பெரியார்’ திரைப்படம் எடுக்கப்பட்டது
அது அருமையான ஒரு திரைப்படம் அது மக்களுக்கு போய்ச் சேரவேண்டும். படம் எடுப்பது, பெரியார் புகழை நாட்டு மக்களுக்கு கொண்டு போய் சேர்ப்பது, படிக்காதவர்கள் கூட பெரியாரை பற்றி புரிந்து கொள்வதற்கு திரைத்துறையில் ஒரு முயற்சியை தாய் கழகம் எடுக்கிறது. அண்ணன் வீரமணி அதற்கான முயற்சிகளைச் செய்தார்.
பெரியார் திரைப்படமும் –
முதலமைச்சர் கலைஞரும்!
அப்போது அண்ணன் கலைஞர் முதலமைச்சராக இருந்தார். ஒரு நாள் தொலைபேசியில் என்னை அழைத்தார், ‘‘உங்க ஊர் மாப்பிள்ளை கோபாலபுரத்துக்கு வந்துள்ளார்; நீ வாப்பா’’ என்று சொன்னார்.
எங்க ஊர் மாப்பிள்ளை என்றால், அது அண்ணன் வீரமணி அவர்கள் தான் என்பதை நான் உடனே புரிந்து கொண்டேன். எங்கள் ஊரில் உள்ள காந்தி நகர் தான் அவரின் மாமனார் வீடு உள்ளது. எங்கள் ஊர் பேரன் தான், அன்புராஜ் அவர்கள்; அந்தக் குடும்பத்திலே எங்களுக்கு நெருக்கமான உறவு உண்டு.
நான் திரைப்பட துறையில் தயாரிப்பாளராக, விநியோகஸ்தராக ஈடுபட்டு பணி செய்து கொணடு இருந்தேன்.
அண்ணன் கலைஞர் தொலைப்பேசியில் அழைத்ததும், ஓடோடிச் சென்றேன்.
‘‘உனக்குச் சரியான வேலை வந்து இருக்கு’’ என்றார்
‘‘என்ன?‘’ என்று கேட்டேன்.
‘‘சொல்லுங்க ஆசிரியர்’’ என்றார்
ஆசிரியர் சொன்னார், ‘‘‘பெரியார்’ பற்றி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. நாளைக்கு படம் போட்டு பாக்கப் போறோம்; நீங்களும், முதலமைச்சர் அவர்களுடன் படம் பார்க்க வரbவண்டும்’’ என்றார்
‘‘அழைப்புக் கொடுத்தால், வரப்போகிறேன்; இதைத் தொலைபேசி சொன்னால் போதுமே’’ என்று கூறினேன்
மறுநாள் அண்ணன் கலைஞர் அவர்களுடன், ஆசிரியர் அவர்களோடு படம் பார்க்கப் போனோம்.
படத்தைப் பார்த்தோம். சிறப்பாக இருந்தது, சில இடங்களில் கொஞ்சம் மாற்றினால், நன்றாக இருக்கும் என்றோம்.
படத்தைப் பார்த்து விட்டு நாங்கள் வெளியே வந்து போது,
‘‘ஏங்க ஆசிரியர், வேலு கிட்ட படத்தை கொடுங்கள்; அவர் ரிலீஸ் பண்ணிடுவார்’’ என்றார் கலைஞர்.
‘‘வாழ்க்கையில், அதை விட வேறு என்ன பெருமை வேண்டும். பெரியார் படத்தை மக்களுக்கு கொண்டு போய்ச் சேர்ப்பது, பெரியார் யாரொன்று சொன்னால், அது பாமர மக்களுக்கும் தெரியவேண்டும் என்கிற ஒரு முயற்சியை தாய்க்கழகமான திராவிடர் கழகம் எடுக்கிறது; அது போய்ச் சேரவேண்டும் என்று அண்ணன் கலைஞர் ஆணையிடுகிறார்; அதைச் செய்த பெருமை அடியேன் இந்த வேலுக்கு உண்டு’’ என்று இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கிறேன்.
திராவிடர் கழகத்தையும் – திமுகவையும் எந்தக் காலத்திலும் பிரிக்க முடியாது!
ஆகவே, திராவிடர் கழகத்தையும் – திமுகவையும் எந்தக் காலத்திலும் பிரிக்க முடியாது; பெரியாரை நாட்டு மக்களிடம் இருந்து பிரிக்க முடியாது.
இன்னும் சொல்லப்போனால், பெரியாரையும், தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருக்கிற முத்துவேல் கருணாநிதி மு.க.ஸ்டாலின் அவர்களையும், எந்த காலத்திலும் பிரிக்க முடியாது. அப்படிப்பட்ட கொள்கை உறவு, பாசம் ஒரு சேர அமைந்திருக்கும் காரணத்தால்தான், எங்கள் ஊர் மாப்பிள்ளை, என் அண்ணன் தமிழர் தலைவர் வீரமணி அவர்களின் கட்டளையை நிறைவேற்றுவதற்குத்தான் அடியேன் இங்கே நிகழ்ச்சிக்கு வந்து இருக்கிறேன்.
இவ்வாறு தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்புரையாற்றினார்.