திருப்பதி, செப்.21 திருப்பதி உண்டியல் பணத்தில் ரூ.100 கோடி திருடப்பட்டது தொடர்பான காட்சிப் பதிவு வெளியாகியுள்ளது. இந்த வழக்கை உயர்நீதிமன்றம் தானாகவே முன்வந்து சிஅய்டியிடம் விசாரணைக்கு ஒப்படைத்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியல் பணம் எண்ணும் இடமான ‘பரகாமணி’யில் தேவஸ்தான ஊழியர்கள், வங்கி ஊழி யர்கள், தன்னார்வலர்கள் (ஆண்கள் மட்டும்) உண்டியல் பணத்தை எண்ணுவது வழக்கம். மேனாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ஆட்சியின்போது, தேவஸ்தான ஊழியர் ரவிக்குமார் என்பவர், உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் வெளிநாட்டு கரன்சிகளைத் திருடி வந்துள்ளார். உண்டியல் பணத்தை எண்ணும்போது அடிக்கடி கழிப்பறைக்குச் சென்ற அவர், வெளிநாட்டு கரன்சியை பிளாஸ்டிக் கவரில் வைத்து ஆசன வாயிலில் திணித்து திருடி வந்துள்ளார்.
கையும் களவுமாக பிடித்து…
ஒருநாள் கண்காணிப்புக் கருவி உதவியுடன் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் அவரைக் கையும் களவுமாக பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, சுமார் ரூ.100 கோடி வரை வெளிநாட்டுg் கரன்சிகளை அவர் திருடியது தெரியவந்தது. திருடிய பணத்தில் திருப்பதியில் வீடு, நிலம் வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பான வழக்கு திருப்பதி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு திடீரென லோக் அதாலத் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அங்கு திருப்பதி தேவஸ்தானமும், ஊழியர் ரவிக்குமாரும் சமரசம் செய்து கொண்டனர். திருடிய பணத்தில் வாங்கிய சொத்துகளை மீண்டும் தேவஸ்தானத்துக்கே வழங்க ரவிக்குமார் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து, வழக்கை லோக் அதாலத் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஆனால், ரவிக்குமார் ரூ.100 கோடி அளவுக்கான சொத்துகளை தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கவில்லை. அப்போதைய அறங்காவலர் குழுத் தலைவர் கருணாகர் மற்றும் நிர்வாக அதிகாரி தர்மா ஆகியோர் ரவிக்குமாரிடம் இருந்து சில சொத்துகளை தங்களது பினாமிகளின் பெயர்களுக்கு எழுதி வாங்கிக் கொண்டதாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் பணம் திருட்டு தொடர்பான காட்சிப் பதிவு ஒன்று சமூகவலைதளத்தில் வெளியானது அதில் திருப்பதியில் பணம் எண்ணும் இடத்தில் ஊழியர் ரவிக்குமார் யாருக்கும் தெரியாமல் வெளிநாட்டு கரன்சியை தனது டிராயரில் மறைத்து வைக்கும் காட்சி அந்தக் காட்சிப் பதிவில் இடம்பெற்றிருந்தது.
வழக்கை உயர் நீதிமன்றம் தானாகவே முன்வந்து சிஅய்டியிடம் ஒப்படைத்துள்ளது. இந்த விவ காரம் ஆந்திரா மட்டுமின்றி, தெலங்கானாவிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.