மாநிலங்களைக் கடந்து உலகத் தலைவர் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா!

சென்னை, செப்.21- மாநிலங்களைக் கடந்து பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 147 ஆம் ஆண்டு பிறந்தநாள் கோலாகலமாகக் கொண்டாட்டப்பட்டது.

விசாகப்பட்டினம்  

தந்தை பெரியார் 147 ஆம் ஆண்டு பிறந்தநாள், இந்திய நாத்திகர் சங்கம் மற்றும் பெரியார் ஆசய சாதன சங்கத்தின் ஏற்பாட்டில், விசாகப்பட்டினத்தில் கோலா கலமாகக் கொண்டாடப்பட்டது.

விசாகப்பட்டினம் கடற்கரைச்சாலையில் உள்ள தந்தை பெரியார் சிலை அருகே நடந்த பிறந்த நாள் விழாவில் ‘லீடர்’ நாளிதழ் ஆசிரியர் வி.வி ராமமுர்த்தி, சிபிஅய் தலைவர் பி பதிராஜூ, நாத்திகர் சங்க ஆந்திரா மற்றும் தெலங்கானா தலைவர் சிறீராமமூர்த்தி, துறைமுக ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

‘லீடர்’ நாளிதழின் ஆசிரியர் வி.வி.ராமமுர்த்தி

பிறந்த நாள் விழாவில் எழுத்தாளர் அகாடமியின் தலைவர் மற்றும் ‘லீடர்’ நாளிதழின் ஆசிரியர் வி.வி.ராமமுர்த்தி பேசுகையில், ‘‘பெரியார் ஒரு புதிய யுகத்தின் தீர்க்கதரிசி, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சாக்ரடீஸ், சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை மற்றும் அறியாமை, மூடநம்பிக்கை, பயனற்ற பழக்கவழக்கங்கள், கொடிய பழைமைவாதங்களுக்கு எதிரான கடும் எதிரி’’ என்று கூறினார்.

தந்தை பெரியார், ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளின் உயர்வுக்காக தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் என்றும், யுனெஸ்கோவால் பாராட்டப்பட்டவர் என்றும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்களிடையே ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்து வரும் ஜாதி முறையை ஒழிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். ஜாதி மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தியதை விளக்கி, ஜாதி மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடி, அவற்றை முறியடிக்க அயராது உழைத்தார் என அவர் தனது உரையில் கூறினார்.

இந்திய நாத்திகர் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர்

இந்த நிகழ்ச்சியில், இந்திய நாத்திகர் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜே.ரவி பேசுகையில், ‘‘பெரியாரின் பெண்கள் விடுதலை குறித்த கருத்துகள் புரட்சிகரமானவை. நாம் விடுதலை பெற வேண்டுமானால், பெண்களுக்குச் சமமான விடுதலையை வழங்க வேண்டும்’’ என்றார்.

தீண்டாமை ஒழிப்பு, தலித்களுக்கு கல்வி வழங்குதல், தலித்கள் நீர்த்தேக்கங்கள் மற்றும் கிணறுகளில் இருந்து நீர் பயன்படுத்தும் உரிமை ஆகியவற்றிற்காக பெரியார் கடுமையாக உழைத்தார்’’ என்று அவர் குறிப்பிட்டார்.

இந்திய நாத்திகர் சங்கத்தின் மாநிலத் தலைவர்

இந்திய நாத்திகர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சிறீராமமூர்த்தி, ‘‘ஒடுக்கப்பட்ட ஜாதி மக்களின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் அடக்குமுறைகளில் இருந்து விடுதலைக்காக பெரியார் மேற்கொண்ட இயக்கமும், கருத்தியலும் தனித்துவமானவை’’ என்று கூறினார்.

சிபிஅய் தலைவர் பி.பைதிராஜு விழாவில் பேசுகையில், ‘‘பெரியார் ஏழைகள் மற்றும்  ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தவர் மற்றும் பெண்களின் உரிமைகளுக்காகப் பிரச்சாரம் செய்த தலைவர்’’ என்று கூறினார்.

நிகழ்ச்சியில் பெரியார் ஆசய சாதன சங்கத்தின் செயலாளர் பி.பென்டாராவ், தலித் சேனாவின் மாநில செயலாளர் கணபதி, ஒய்.நூக்கராஜு, சுநீதா, நாகமணி, ஜோகினாயுடு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வங்காள இளைய சமூகம் கொண்டாடிய
தந்தை பெரியாரின் 147ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா

சாந்திநிகேதன் அமைதியான சூழலுக்கு உரியது. இரவீந்திரநாத் தாகூரின் நினைவு களைச் சுமந்து நிற்கும் சாந்திநிகேதன் தந்தை பெரியாரின்  147 ஆம் ஆண்டு பிறந்தநாளை நினைவு கூறும் அரங்கமாக மாறியுள்ளது

விஸ்வ-பாரதி கூட்டுறவு சங்க அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வை, ‘‘பெரியார் வைக்கம் மற்றும் சுயமரியாதை நூற்றாண்டு விழா அமைப்பு’’ ஏற்பாடு செய்திருந்தது. சுமார் 60 பேர் ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு பிரிவினர்கள் இதில் பங்கேற்றனர். உள்ளூர் ஊடகங்களும் இணையம் வாயிலாகவும் இணைந்த இந்த விழா நிகழ்வு பரந்த பார்வையாளர்களைச் சென்றடைந்து.

விழாவில் டாக்டர் டெரன்ஸ் சாமுவேல், டாக்டர் ரன்பீர் சுமேத், டாக்டர் தனேஸ்வர் ஹெம்ப்ராம், சுப்ரியா தருண்லேகா, அஹ்சன் கமல், ரூமா முகர்ஜி மற்றும் பினோய் தாஸ் ஆகியோர் உரையாற்றினர். ஒவ்வொருவரும் பெரியாரின் நூற்றாண்டு பழைமையான கருத்துகளையும், சிந்தனைகளையும் இன்றைய காலத்துடன் இணைத்து விளக்கினர்.

டாக்டர் சாமுவேல், சுயமரியாதை இயக்கம் குறித்துப் பேசினார். கண்ணியம் மற்றும் சமத்துவம் தொடர்பான கேள்விகள் இன்றும் அவசரத் தேவையாக இருப்பதை அவர் நினைவூட்டினார். நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் சுப்ரியா தருண்லேகா, ஜாதி ஒடுக்குமுறை மற்றும் மூடநம்பிக்கைகளுடன் பெரியார் சமரசம் செய்துகொள்ள மறுத்ததை எடுத்துரைத்தார். பகுத்தறிவு, அறிவியல் மனப்பான்மை, மற்றும் மொழி உரிமைகளுக்கான அவரது அழைப்பின் தேவை இன்றளவும் உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார். விருந்தினர்கள்  தந்தை பெரியாரின் வாழ்நாள் களப்பணியால் இன்றுவரை அதன் தாக்கம் மதம் முதல் பொருளாதாரம் வரை பல்வேறு துறைகளில் எவ்வாறு பரவியுள்ளது என்பதையும் விளக்கினர்.

இந்த நிகழ்வில் சிறப்பானது என்ன வென்றால், தமிழ்நாட்டின் போராட்டங்களில் வேரூன்றிய சமூக சீர்திருத்தவாதியான பெரியார், தொலைதூர வங்காள இளையசமூகத்தின் ஒன்றியில்  இடம் பெற்றுள்ளார்.

மேற்கு வங்காளத்தில் உள்ள சாந்திநிகேதனில், மக்கள் ஆண்டுதோறும் கூடி அவரை நினைவுகூர்வது, சமத்துவம் குறித்த அவரது தொலைநோக்குப் பார்வையின் நீடித்த ஆற்றலைக் காட்டுகிறது.

 உஸ்மானியா பல்கலைக்கழகம்

சமூகப் புரட்சியாளர் தந்தை பெரியாரின் 147 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு, அவரது கொள்கைகளை நினைவுகூர்ந்து முன்னெடுத்துச் செல்லும் விதமாக, தெலங்கானா மாநிலம் அய்தராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழக கலைக் கல்லூரியில் செப்டம்பர் 17, 2025 அன்று நிகழ்ச்சி நடைபெற்றது.

பல்கலைக்கழக இந்திய நாத்திகர் சங்கத்தின் பல்கலைக் கழக மாணவர் பிரிவான அறிவியல் மாணவர் கூட்டமைப்பு (SSF) இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. உஸ்மானியா பல்கலைக்கழகத் தலைவர்   தாசரி சஷாங்கர் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அறிவியல் மாணவர் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் பன்சுவாடா வேதாந்த் மவுரியா பேசுகையில், ‘‘சமத்துவ சமுதாயத்தை நிறுவுவதற்கும், சமூக ஏற்றத்தாழ்வுகள் பற்றிய மூடநம்பிக்கைகளை ஒழிப்பதற்கும்  தந்தை பெரியார் கடுமையாக உழைத்தார்.

பெண்ணியப் புரட்சிக்கு வித்திட்டவர் பெரியார்!

பெண்கள் சமையலறைக்குள் முடக்கப்பட்டிருந்த ஆணாதிக்க அமைப்புக்கு எதிராகப் போராடி, பெண்களுக்குச் சம உரிமைகளையும் மரியாதையையும் பெற்றுத் தந்தவர் தந்தை பெரியார்’’ என்று மவுரியா புகழாரம் சூட்டினார். மேலும், தனது இணையர் நாகம்மையார் மற்றும் அவரது தங்கை ஆகியோரை இயக்கத்தில் இணைத்து, பெண்ணியப் புரட்சிக்கு வித்திட்டவர் பெரியார் என்றும் அவர் தெரிவித்தார்.

உஸ்மானியா பல்கலைக்கழகத் தலைவர் சஷாங்கர் பேசுகையில், ‘‘சமூக விழிப்புணர்வுக்காகவும், அறிவியல் அறிவைப் பரப்புவதற்காகவும், பெண்  உரிமைக்காகவும் அயராது பாடுபட்ட ஒரு மாமனிதர் தந்தை பெரியார்’’ என்று பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில், DBSA அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜங்கிலி தர்ஷன், MSF அமைப்பைச் சேர்ந்த மாண்டா ராஜு, சுரேந்தர், ரவி, மோகன், கல்யாணி, நவீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *