‘‘மக்களுடன் ஸ்டாலின்’’ செயலியில் அனுப்பப்பட்டிருந்த கேள்விகளுக்கு ‘உங்களில் ஒருவன்’ மூலம் முதலமைச்சரின் பதில்கள்!

5 Min Read

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் பெரியார் படம் திறப்பு மெய் சிலிர்த்தது!

சென்னை, செப். 21 – ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் பெரியார் படம் திறப்பு மெய் சிலிர்த்தது! ‘‘மக்களுடன் ஸ்டாலின்’’ செயலியில் அனுப்பப்பட்டிருந்த கேள்விகளுக்கு  ‘உங்களில் ஒருவன்’ மூலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அண்மையில் மேற்கொண்ட ஜெர்மன், இலண்டன் பயணங்கள் குறித்தும், ‘திராவிட மாடல்’ அரசின் புதிய திட்டங்கள் குறித்தும் ‘மக்களுடன் ஸ்டாலின் செயலி’யில் அனுப்பப்பட்டிருந்த கேள்விகளுக்கு உங்களில் ஒருவன் பதில்கள் மூலம் அளித்த பேட்டி வருமாறு:–

கேள்வி:அண்மையில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயண அனுபவங்கள் பற்றி சொல்ல முடியுமா? தொழில் முதலீட்டாளர்களிடம் தமிழ்நாடு பற்றிய பார்வை எப்படி இருக்கிறது?

தமிழ்நாட்டை வியந்து பேசிய
ஜெர்மனி மக்கள்!

பதில்: முதலீட்டாளர்கள் சந்திப்பை பொறுத்தவரைக்கும், ஜெர்மனியில் முதலீட்டாளர்களை சந்தித்து, நம்முடைய தமிழ்நாட்டில் எப்படியெல்லாம் கட்டமைப்புகளை உருவாக்கியிருக்கிறோம்; எவ்வளவு படித்த திறமையான இளைஞர்கள் இருக்கிறார்கள்; இங்கு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு பாடத்திட்டத்தை (சிலபஸ்) தாண்டி, எப்படியெல்லாம் திறன் மேம்பாடு (ஸ்கில் டெவலப்மெண்ட்) செய்கிறோம் என்று காட்சி விளக்கங்கள் (பிரசண்டேஷன்) செய்தோம். அதைப் பார்த்த அவர்கள், தமிழ்நாட்டைப் பற்றி வியந்து பேசினார்கள்.

ஜெர்மனி நாட்டில், NRW மாநிலத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் மினிஸ்டர் பிரசிடெண்ட்-அய் சந்திக்கச்சென்றபோது, அவர்கள் கான்வாய்-இல் என்னை அழைத்து கொடுத்த வரவேற்பிலேயே, அவர்கள் எந்தளவிற்கு தமிழ்நாட்டுக்குமதிப்பு கொடுக்கிறார்கள் என்று தெரிந்தது!

முதலீட்டாளர்களிடம் பேசும்போது, இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் பெண்களுக்கு நாம் வேலைவாய்ப்பு கொடுத்திருப்பதை பெருமையுடன் சொன்னார்கள். அதனுடன், அனைத்து மாவட்டங்களுக்கும் பரவலாக்கப்பட்ட வளர்ச்சியைக் கொண்டு செல்வதையும், ஒரு தொழில் பிரிவை (செக்டாரை) மட்டும் முக்கியத்துவம் (ஃபோக்கஸ்) செய்யாமல், அனைத்து பிரிவுகளுக்கும் (செக்டாருக்கும்) முக்கியத்துவம் கொடுத்து, புதிதாக வளர்ந்து வரும் துறைகள் மீதும் கவனம் செலுத்துவதையும் அவர்கள் அதிகமாக பாராட்டிப் பேசினார்கள். தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் முதலீடு செய்ய ஆர்வமாக இருக்கிறார்கள். இந்த மாற்றத்தையும் வளர்ச்சியையும் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்லவேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதற்கான தொலைநோக்குத் திட்டங்களைத்தான் இப்போது திராவிட மாடல் அரசில் செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம்!

ஆக்ஸ்ஃபோர்டு யுனிவர்சிட்டியில் பெரியார் படம் திறப்பு மெய் சிலிர்த்தது!

கேள்வி: ஆக்ஸ்ஃபோர்டுக்கு சென்றதுபற்றியும், வெளிநாடுவாழ் தமிழர்களைச் சந்தித்தது பற்றியும், உங்களின் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள முடியுமா?

பதில்: ஆக்ஸ்ஃபோர்டு – ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையானயூனிவர்சிட்டி! அங்கு பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த பேராசிரியர்கள் – மாணவர்கள் முன்னால், தந்தை பெரியாரின் படத்தை திறந்து வைத்துவிட்டு, அய்யாவை பற்றி பேசிய போது, மெய் சிலிர்த்தது என்று சொல்லுவார்களே… அப்படி இருந்தது!

ஜெர்மனி மற்றும் லண்டனில், தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரைச் சந்தித்தாலும் அவர்கள் சொன்னது, “இட ஒதுக்கீட்டில் படித்து முன்னேறிதான் வெளிநாடு வந்திருக்கிறேன். எங்கள் குடும்பத்தில் நான்தான் முதல் தலைமுறைப் பட்டதாரி! தலைவர் கலைஞர் முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு கல்விக்கட்டணத்தை ரத்து செய்ததுதான் நான் இந்தளவிற்கு முன்னேறி வரக் காரணம்! அரசுப் பள்ளியில் படித்து, இப்போது லண்டனில் உயர்கல்வி படிக்கும் மாணவர்கள், நம்முடைய திராவிட மாடல் அரசு கொண்டு வந்த, ஃபுல் ஸ்காலர்ஷிப்புடன் இங்கு இருக்கிறோம்என்று சொன்னார்கள். இது போன்று, பல மறக்க முடியாத அனுபவங்கள் கொண்டதாக, என்னுடைய அய்ரோப்பிய பயணம் இருந்தது.

நான் இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது, அங்கு உள்ள மக்கள் பொது இடங்களில், எந்த அளவிற்கு செல்ஃப் டிசிப்ளினை கடைப்பிடிக்கிறார்கள் என்று கவனித்தேன். இந்த பொறுப்புணர்ச்சி இங்கேயும் வரவேண்டும்என்று ஆசைப்படுகிறேன்.

அ.தி.மு.க.வை சேர்த்துக்கொண்டு
தமிழ்நாட்டுக்கு பா.ஜ.க. துரோகம்!

கேள்வி: ‘தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்’’ என்று எதற்கு சொல்கிறீர்கள்?

பதில்: பா.ஜ.க. எப்படியெல்லாம் தமிழ்நாட்டை குறி வைத்திருக்கிறார்கள் என்று முப்பெரும் விழாவில் பேசும்போதே சொல்லியிருந்தேன். அவர்களால் நேராக நுழைய முடியவில்லை என்று அ.தி.மு.க.வுடன் சேர்ந்துகொண்டு, என்னென்ன செய்கிறார்கள் என்று எடுத்துச் சொல்லியிருந்தேன். தொகுதி மறுவரையறை, நீட், S.I.R., கல்வி நிதி மறுப்பு, ஹிந்தி திணிப்பு, கீழடி அறிக்கையை மறைப்பது என்றுஇந்த லிஸ்ட் பெரிதாக இருக்கிறது. இதையெல்லாம் பொதுமக்களிடம் எடுத்துச் சொல்லி கடுமையாக எதிர்ப்பதால்தான் தி.மு.க.வை டார்கெட் செய்கிறார்கள். அவர்கள் கூட்டணிக்குள்ளேயே பல குழப்பங்கள் இருந்தாலும், தி.மு.க. வந்துவிடக்கூடாது என்று குறியாக இருக்கிறார்கள். பா.ஜ.க.வை எதிர்ப்பதாக வெளியில் நிறைய பேர் சொல்லிக்கொள்ளலாம். ஆனால்,அனுபவம், வலிமை, கொள்கைத் தெளிவுடன் பா.ஜ.க.வை தடுத்து நிறுத்தும் ஆற்றல் தி.மு.க.விடம் மட்டும்தான் இருக்கிறது. இது தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றாகத் தெரியும். அதனால்தான், தி.மு.க. ஆட்சி நீடித்தால்தான் தமிழ்நாடு இதேபோன்று, தொடர்ந்து தலைநிமிர்ந்து நடக்க முடியும் என்று தெளிவாக இருக்கிறார்கள். ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரை முன்னெடுப்பில், ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் இணைந்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் சேர்த்து, தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்று உறுதிமொழி எடுத்திருக்கிறோம். தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் மனதிலும் இருக்கும் உணர்வை தான் முப்பெரும் விழாவிலும் வெளிப்படுத்தி இருக்கிறோம்.

புதுப்புது திட்டங்கள் –
நன்றி கூறும் தமிழ்நாட்டு மக்கள்!

கேள்வி: தாயுமானவர் – அன்புக்கரங்கள்என்று தொடர்ந்து புது புது திட்டங்களாக தொடங்கிக்கொண்டே இருக்கிறீர்களே…

பதில்: நம்முடைய ‘திராவிட மாடல்’ ஆட்சியில் கலைஞர்மகளிர் உரிமைத்திட்டம், விடியல் பயணத் திட்டம், காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன், இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48, மக்களைத் தேடி மருத்துவம் என்று ஏராளமான திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறோம். இதில் பல திட்டங்களை மற்ற மாநிலங்களிலும் பின்பற்ற தொடங்கி இருக்கிறார்கள். இதன் தொடர்ச்சியாகத்தான், உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின், தாயுமானவர் திட்டம், அன்புக் கரங்கள், போன்ற திட்டங்களைத் தொடங்கி இருக்கிறோம். இந்தத் திட்டங்களைப் பற்றி, நான் சொல்வதைவிட பொதுமக்கள் என்ன சொல்கிறார்கள் என்று நான் பார்த்த சில பேட்டிகளை இப்போது “ப்ளே” செய்கிறேன்… என்று குறிப்பிட்டார்கள். (தமிழ்நாடு அரசின்கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம்ஆகிய திட்டங்களின் பயன்களைக் கூறி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்த பொதுமக்களின் பேட்டிகள் ஒளிபரப்பப்பட்டன)

அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் அவர்கள் இதெல்லாம் தொடக்கம்தான்! எங்களுக்கு இன்னும் நிறைய பணிகள் இருக்கின்றன. நாம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம். நான் ஏற்ெகனவே சொன்னது போன்று, இந்த நூறாண்டுகளில் நாம் அடைந்திருக்கும் முன்னேற்றம் என்பது ஒரு குழந்தை நடைபழகுவது போன்றதுதான். இன்னும் நாம் உலக அளவில் போட்டி போட்டு ஓடவேண்டும்! அதற்கான பணிகள் திராவிட மாடல் 2.0-இலும் தொடரும் என்று தெரிவித்தார்கள்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *