சமூக சீர்திருத்தவாதி நாராயணகுரு நினைவு நாள் இன்று (20.09.1928)
நாராயண குருவின் சிந்தனைகள், ஹிந்து மதத்தின் சடங்குகளையும், குருட்டு நம்பிக்கைகளையும் கேள்விக்குட் படுத்தின. அவர் மக்கள் பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டு சிந்திக்குமாறு வலியுறுத்தினார். அவருடைய முக்கிய முழக்கம்: “ஒரு ஜாதி, ஒரு மதம், ஒரு கடவுள் மனிதனுக்கு” என்பதாகும்.
நாராயண குருவின் குறிப்பிடத்தக்க புரட்சிகர செயல்பாடு, அருவிப்புரத்தில் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தது. ஜாதி ஆதிக்கத்தால் கோயில் நுழைவு மறுக்கப்பட்ட மக்களுக்கென்று, அவர் தாழ்த்தப்பட்ட ஜாதியினர் அதிகம் வசிக்கும் அருவிப்புரத்தில் ஒரு கோயிலைக் கட்டினார். இந்த நிகழ்வு, “ஈழவ சிவன்” என்று அழைக்கப்பட்டது. ஒரு பார்ப்பனர் அல்லாதவர், கோயிலில் கடவுளை நிறுவியது ஒரு புரட்சிகரமான செயலாகப் பார்க்கப்பட்டது.
நாராயண குருவின் பார்வையில், கல்வி என்பது சமத்துவத்தை அடைவதற்கான ஒரு முக்கிய கருவி. அனைத்து ஜாதியினருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அவர் பள்ளிகளையும், மடங்களையும் நிறுவி, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தார். மனிதநேயத்தை முதன்மைப்படுத்தினார். அனைத்து உயிர்களையும் சமமாக மதித்து, சேவை செய்வதே உண்மையான ஆன்மிகம் என்று போதித்தார். மனிதர்களுக்குள் ஜாதிப் பிரிவுகள் இல்லை, அனைவரும் ஒரே இனம் என்ற கருத்தை வலியுறுத்தினார்.
நாராயண குருவின் இந்தச் சீர்திருத் தங்கள், கேரளாவில் மட்டுமல்லாமல், இந்தியாவின் பிற பகுதிகளிலும் சமூக மாற்றங்களுக்கு வழி வகுத்தன. அவருடைய சிந்தனைகள், பகுத்தறிவு மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் அமைந்திருந்ததால், அவர் இன்றும் ஒரு முக்கிய சமூக சீர்திருத்தவாதியாகப் போற்றப்படுகிறார்.