எங்கெங்கே தமிழ் உணர்ச்சி தவழ்கின்றதோ, எங்கெங்கே சமுதாயச் சீர்திருத்தம் பேசப்படுகின்றதோ, எந்தெந்த இடத்தில் புரட்சி வாடை வீசுகின்றதோ, அங்கெல்லாம் ஈ.வெ.ரா.வின் பெயர் ஒளிவீசித் திகழ்
கின்றது.
அந்தக் காலத்தில் நாங்கள், படித்த கூட்டத்தாரைக்கொண்டு, சீர்திருத்த ஆர்வத்தை, நாட்டில் எழுப்பிவிடலாம் என்று நம்பினோம். ஆனால், இராமசாமி நாயக்கரவர்கள் படித்த கூட்டத்தாரைப்பற்றிக் கவலைப்படுவதே கிடையாது. என்ன ஆனாலும் சரி, சீர்திருத்தம் மட்டும் கூடவே கூடாது என்று சூள் உரைத்து விட்ட (படித்த) கூட்டத்தாரிடம் சீர்திருத்தப் பணியாற்றுவதில் ஈ.வெ.ரா. அவர்களுக்கு நம்பிக்கை கிடையாது; ஆம்! படிப்பு வாசனை அறியாத பாமர மக்களிடம் தன் முழுச் சக்தியையும் அவர் செலவிட்டுப் பணியாற்றி வருகிறாரே, அதிலேதான் அவருடைய வெற்றியின் இரகசியம் அடங்கி இருக்கிறது. பரிதாபத்திற்குரிய வாழ்க்கையில் உழன்று கொண்டிருக்கும் பாமர மக்களை அவர்களுடைய நீண்ட உறக்கத்தினின்றும் தட்டி எழுப்புவது; அவர்களுடைய உள்ளத்தில் தன் கருத்துகள் நேரே சென்று பதியக்கூடிய வண்ணம் பேசுவது; எழுதுவது;- இவற்றின் தொகுப்புத்தான் நண்பர் இராமசாமி நாயக்கரின் பெருந்
தொண்டு.
(நண்பர் நாயக்கர் அவர்கள்) இதுவரையில் வேறு யாரும் செய்திராத அளவு மறுமலர்ச்சி இயக்கத்தை இந்தத் தென்னாட்டில் பரவச் செய்து விட்டார். இளைஞர் உலகத்தில் முழு ஆற்றலையும் பெருந்தீரத்தையும் ஒன்றாய்க் கூட்டிக் கலந்து பேரெழுச்சியை உண்டுபண்ணி விட்டார்.
இளைஞர் கூட்டம் மட்டுமன்று; முதியவர் கூட்டமுந்தான் அவரால் எழுச்சி பெற்றுவிட்டது. உள்ளபடியே நம்முடைய நாட்டு வளர்ச்சியில் நாட்டம் கொண்ட ஒவ்வொருவரும் ஈ.வெ.ரா. அவர்களுக்குக் கடமைப்பட்டுத்தான் இருக்கிறார்கள்.