திராவிட இயக்கம் பயன்படுத்தும் ஆயுதங்களில் மிக முக்கியமானது, மாநாடு. அந்த மாநாடுகளின் வரலாற்றை வாரம் ஒன்றாக வாசிப்போம்…
“ஒரு நாட்டில் தாழ்த்தப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்றால், அது கொடுமையும் மூடத்தன்மையும் கொண்ட ஒரு கூட்டத்தால் தங்கள் சுயநலம் கருதி, சூழ்ச்சியாலும் புரட்டினாலும் சாதுக்களை அழுத்தி வைத்திருக்கும் அக்கிரமச் செயலாகும். அப்படி தாழ்த்தப்பட்ட மக்களைக் கை தூக்கி விடுகிறார் ராமசாமி நாயக்கர். ஜாதியில் உயர்வு தாழ்வு உண்டு என்பதற்கு ஆதாரமான எல்லாவற்றையும் குப்பைத்தொட்டியில் போடச் சொல்லுகிறார். மானுடப் பற்றைப் பறைசாற்றுகிறார்”
வட ஆற்காடு ஜில்லா, `பார்ப்பனரல்லாத வாலிபர்கள் சங்கத்தின் முதலாவது மாநாடு’, 1929-ஆம் ஆண்டு ஜனவரி 4, 5 ஆகிய தேதிகளில் வேலூர் லட்சுமண முதலியார் நகர மண்டபத்தில் நடைபெற்றது. பேரணியில் தலைவர்களுக்கு மோட்டார் வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், நடந்தே செல்லலாம் என பெரியார் கூறிவிட்டார். வழக்குரைஞர் கிருஷ்ண ரெட்டியார் இல்லத்தில் இருந்து பாண்டு வாத்தியங்கள் முழங்க, காலை 9 மணிக்கு புறப்பட்ட ஊர்வலம், மண்டபத்தை அடைய 11 மணி ஆனது. ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை என வழியெங்கும் பழங்கள் வழங்கி, மாலைகள் அணிவித்து மக்கள் உபசரித்தனர்.
மாநாட்டுக் கொடியை ஏற்றிவைத்து, உரையாற்றிய ராவ் பகதூர் எம்.கே.ரெட்டியார், “தோழர்களே நமது இயக்கத்தின் கொள்கை வெறும் பேச்சல்ல, செயல். மூடநம்பிக்கை என்னும் சனியன் நம்மைப் பிடித்து முன்னேற விடாமல் தடுக்கிறது. அதை ஒழித்து வெற்றி பெறுவதே நமது நோக்கம்’’ என்றார். அதன்பிறகு தந்தை பெரியார் மாநாட்டைத் திறந்துவைத்தார். “ஆரியா அவர்களால் தொடங்கப்பட்ட பார்ப்பனரல்லாதோர் வாலிபர் சங்கமானது, இப்போது நமது நாடு முழுவதும் ஏற்பட்டு பெருத்த கிளர்ச்சி செய்து வருகிறது. எனது இயக்கத்தையும் தொண்டையும், உடல் நலிவும் சரீர தளர்ச்சியும், எதிரிகள் தொல்லையும் ஒரு சிறிதும் என்னைத் தடை செய்ய முடியாமல், மேலும் மேலும் உற்சாகப்படுத்தி, வெற்றிக்கொடியை நாட்டி வருவதற்கு பெரிதும் உதவியாக இருந்து வருவது இந்த வாலிபர் சங்கமே. வெகு சீக்கிரத்தில் இந்த வாலிபர்கள் உலகை நடத்த முன்வர வேண்டும் என்று ஆசைப்பட்டுக்கொண்டு இம்மாநாட்டை திறக்கிறேன்’’ என பெரியார் கூறியபோது, அரங்கம் கரவொலியில் அதிர்ந்தது.
நகர்மன்றத் தலைவராக இருந்த பத்மநாப முதலியார் வரவேற்புரை ஆற்றினார். அதன்பிறகு மாநாட்டுத் தலைமை உரையை வாசித்த கேசவ மேனன், “ஸ்திரீகட்கு (பெண்களுக்கு) சகல உரிமைகளையும் மறுத்து, நடைப்பிணங்களாக நடத்தி வருவது என்ன கொடுமை? இதையெல்லாம் விட்டொழித்து, பால்ய விவாகத்தைத் தடுக்க வேண்டும், விதவை மறுமணத்தை ஆதரிக்க வேண்டும். ஜாதி பேதத்திற்கு எதிராக கிராமம்தோறும் பிரச்சாரம் செய்ய வேண்டும். நம் மத்தியில் வைக்கம் வீரர் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் இருக்கிறார். அவரைப் பின்பற்றினால், நமக்கு வெற்றி கிடைப்பதில் அய்யமில்லை’’ என்றார்.
அதன்பிறகு திருமதி மார்த்தா ஆரியா, தந்தை பெரியாரின் படத்தைத் திறந்துவைத்து, சிறப்பானதொரு உரையாற்றினார். “ஈ.வெ.ராமசாமி நாயக்கரை ஒப்பற்ற பெரியாரென்று மதித்திருக்கின்றேன். அவரைப் பற்றி புகழ எதுவும் சொல்லப்போவதில்லை. நான் ஒரு பெண் என்ற முறையில் நாயக்கருக்குக் காட்ட வேண்டிய நன்றி மிக அதிகம் உள்ளது. ஒரு நாட்டில் தாழ்த்தப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்றால், அது கொடுமையும் மூடத்தன்மையும் கொண்ட ஒரு கூட்டத்தால் தங்கள் சுயநலம் கருதி, சூழ்ச்சியாலும் புரட்டினாலும் சாதுக்களை அழுத்தி வைத்திருக்கும் அக்கிரமச் செயலாகும். அப்படி தாழ்த்தப்பட்ட மக்களைக் கை தூக்கி விடுகிறார் ராமசாமி நாயக்கர். ஜாதியில் உயர்வு தாழ்வு உண்டு என்பதற்கு ஆதாரமான எல்லாவற்றையும் குப்பைத்தொட்டியில் போடச் சொல்லுகிறார். மானுடப் பற்றைப் பறைசாற்றுகிறார். அதைக் கேட்பவர்கள் மயக்கத்தில் இருந்து எழுந்து ஜாதி- பேதக் கொடுமையில் இருந்து விலகி சுயமரியாதையை அடைகிறார்கள்’’ என்றார்.
தமிழ்நாடு இன்றும் சுயமரியதையைப் பெறுகிறது பெரியாரால்…