காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கரில் மொத்தமுள்ள 90 தொகுதி களுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை (7.11.2023) வாக்குப்பதிவு நடைபெற்றது.
இரண்டாவது கட்டமாக 70 தொகுதிகளுக்கு வரும் 17-ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதையொட்டி, சூரஜ்பூர் மாவட்டத்தில் 7.11.2023 அன்று நடைபெற்ற பாஜக பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசியதாவது:
“இந்தியாவின் கட்டமைப்பில் பழங்குடியினரின் பாரம்பரியத்தை திட்டமிட்டு புறக்கணித்த காங்கிரஸ் கட்சி, அவர்களின் வளர்ச்சியையும் தடுத்தது. ஆனால், பழங்குடியினருக்கு உரிய கண்ணியத்தையும், மதிப்பையும் உறுதி செய்தது பாஜக. அதற்கு உதாரணம் நமது குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு.
பல்வேறு முன்னெடுப்புகளின் வாயிலாக அனைத்து நிலைகளிலும் பழங்குடியினரின் முன்னேற்றத்துக்கு நாங்கள் வழிவகுத்துள்ளோம்.
நாட்டில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் பயங்கர வாதிகளும் நக்ஸல் தீவிரவாதிகளும் தலைதூக்குகின்றனர். குண்டுவெடிப்புகள், கொலைச் சம்பவங்கள் தொடர்பான செய்திகளும் காங்கிரஸ் ஆட்சியில் வாடிக்கையாக இருக்கும்.
காங்கிரஸ் எங்கெல்லாம் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறதோ, அங்கெல்லாம் குற்றங்களும் ஊழலும் நிகழும். சத்தீஸ்கரில் நக்ஸல் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த காங்கிரஸ் அரசு தவறிவிட்டது.
இம்மாநிலத்தில் நக்ஸல் வன்முறையில் பாஜக தொண்டர்கள் உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது. சில தினங்களுக்கு முன்புகூட பாஜக நிர்வாகி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
‘பாதுகாப்பே முதன்மையானது’: வெடிகுண்டுகள், துப்பாக்கிகளின் அச்சுறுத்தலில் மக்கள் வாழ முடியுமா?
நீங்கள் எவ்வளவு பணம் வைத்திருந்தாலும், உங்களின் மகன் உயிரோடு வீடு திரும்பவில்லை என்றால், அந்தப் பணத்தால் என்ன பயன்? அனைவருக்கும் பாதுகாப்பே முதன்மையானது. இதற்கு, காங்கிரஸ் கட்சியை ஒவ்வொரு மூலையில் இருந்தும் அப்புறப்படுத்த வேண்டும்.” என்று பேசியுள்ளார் பிரதமர் மோடி.
பயங்கரவாதத்தைப் பற்றி யார்தான் பேசுவது என்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது.
குஜராத் முதலமைச்சராக இருந்தபோது அந்த மாநிலத்தில் என்னவெல்லாம் நடந்தது? இப்பொழுது நினைத்தாலும் நெஞ்சமெல்லாம் பதறுகிறது.
‘பெஸ்ட் பேக்கரி’ படுகொலை சாதாரணமானதுதானா? பேக்கரி அடுப்பு நெருப்பில் விறகுக் கட்டைகளைப் போல் கட்டி ஒரு குடும்பத்தையே கொளுத்திக் கூத்தாடியது எந்த ஆட்சியில்?
மூன்று நாள்கள் தாராளமாகத் தருகிறேன். அதற்குள் சிறுபான்மையின மக்களை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என்று அதிகாரிகள் கூட்டத்தில் முதலமைச்சர் நரேந்திர மோடி கட்டளையிட்டதை காவல்துறை அதிகாரியே சொல்லவில்லையா? பரோடாபாட்டியாலாவில் நடந்தது என்ன? பச்சைப்படுகொலை தானே!
இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி 2014-ஆம் ஆண்டு பொறுப்பேற்றதிலிருந்து எந்த பெரிய பயங்கரவாத சம்பவங்களும் நடைபெறவில்லை என்று கூறுகின்றார். 2014-ஆம் ஆண்டுக்குப் பின் பல பயங்கரவாத சம்பவங்கள் இந்தியாவில் நடந்துள்ளன. இந்தக் கால இடைவெளியில் நடந்த பயங்கரவாத சம்பவங்களில் இரண்டு தாக்குதல்கள் மிகப் பெரியவை என அரசுத் தரவுகளே கூறுகின்றன.
இந்தியக் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீர் பகுதிகளில், 2009- 2014 கால கட்டங்களில் தாக்குதல் சம்பவங்கள் மெல்ல குறைந்து வந்துள்ளன. ஆனால், பாஜக அரசு பொறுப்பேற்ற பின் அங்கு தாக்குதல் கொடூரங்கள் அதிகரித்துள்ளன.
2018-ஆம் ஆண்டில்தான், அதிகளவிலான மக்கள் பயங்கரவாதம் தொடர்பான தாக்குதல் சம்பவங்களில் பலியாகி உள்ளனர். அதாவது 451 பேர். கடந்த பத்தாண்டுகளில் இந்த எண்ணிக்கைதான் அதிகம். 2016-ஆம் ஆண்டு தொடக்கத்தில் பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள ராணுவ தளத்தில் நடந்த தாக்குதலில் 7 இந்திய ராணுவ வீரர்களும், ஆயுத குழுக்களை சேர்ந்த 6 பேரும் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானை சேர்ந்த ஆயுத குழுக்களால் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்திய ஆளுகையின் கீழ் இருக்கும் உரியில் நடந்த தாக்குதலில் 17 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 2014 – 2018 இடையேயான கால இடைவெளியில் 388 பெரிய தாக்குதல் சம்பவங்கள் இந்தியாவில் நடந்துள்ளன.
அமைச்சக தகவல்கள் மற்றும் ஊடக செய்திகளை கொண்டு இந்த புள்ளி விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது
2019 இறுதியில் இருந்து 2020 வரை கரோனா காலகட்டத்தில் தாக்குதல்கள் குறைந்திருந்த போதிலும் 2020இல் மீண்டும் டில்லி கலவரத்தில் துவங்கிய தீவிரவாத தாக்குதல் நடவடிக்கை மணிப்பூர் வரை பற்றி எரிந்துகொண்டு இருக்கிறது.
கேபினட் அமைச்சர் என்ற பொறுப்பில் உள்ளவர்களே, சிறுபான்மையினரை அச்சுறுத்தும் வகையில் நாடாளுமன்றத்திலேயே பேசி வருவது சாதாரணமானதுதானா?
பிரதமர் மோடி, பழங்குடியினரின் முன்னேற்றம் பற்றியும் பேசுகிறார். பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்தவரை குடியரசு தலைவராக ஆக்கி விட்டதாகவும் மார் தட்டுகிறார்.
ஊரை ஏமாற்றுவதற்குத்தானே இந்த நாடகம்! நாடாளுமன்ற அடிக்கல் நாட்டு விழாவிலோ, திறப்பு விழாவிலோ, குடியரசுத் தலைவர் என்ற மரியாதைக்காவது குறைந்தபட்சம் ஓர் அழைப்பாவது உண்டா?
பட்டியலின சமுதாயத்தை சேர்ந்த ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவராக இருந்தபோது, பூரி ஜெகந்நாதர் கோயிலிலும் அஜ்மீர் பிரம்மா கோயிலிலும் அவர் தடை செய்யப்படவில்லையா?
அதற்குக் காரணமாக இருந்தவர்கள்மீது மோடி அரசு எடுத்த நடவடிக்கைதான் என்ன?
வாய்ச்சவடால்கள் பலிக்காது – இனியும் மக்கள் ஏமாற மாட்டார்கள். 2024 மக்களவைத் தேர்தலில் மக்கள் நல்ல பாடம் கற்பிப்பார்கள் என்பதில் அய்யமில்லை. நன்றாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள்!