செல்வப் பெருந்தகை பேட்டி
சென்னை, செப்.19 ‘தமிழ்நாடு அமைச்சரவையில் பங்கு கேட்குமாறு காங்கிரஸ் தலைமை எனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை’ என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அமைச்சரவை
இரட்டை மலை சீனிவாசன் நினைவு தினத்தை நாளை, கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் நேற்று (18.9.2025) செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, கூட்டணிக் கட்சித் தலைவரை பார்ப்பதில் எந்தத் தவறும் இல்லை.
அதை ஏன் முகத்தை மூடிக்கொண்டு சென்று பார்க்கிறீர்கள் என்று தான் கேட்கிறோம். பாஜக தமிழ்நாட்டையும், தமிழ்நாடு மக்களையும் புறக்கணிக்கிறது. சமக்ரசிக்ஷா நிதி, ஜிஎஸ்டி நிதியை தமிழ் நாட்டிற்கு ஒன்றிய அரசு ஒதுக்கவில்லை. இதை பழனி சாமி ஒன்றிய பாஜக அரசிடம் கேட்க வேண்டும்.
ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் போது, ‘நீட்’டை தமிழ்நாட்டிற்குள் நுழைய விட மாட்டேன். ஜிஎஸ்டி திட்டத்தில் கையெழுத்து போட மாட்டேன். உதய் மின் திட்டத்தை அனுமதிக்க மாட்டேன் என்றார்.
பிறகு இவை எல்லாம் யார் ஆட்சியில் இருக்கும்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது? அகில இந்திய காங்கிரஸ் என்ன வழி காட்டுகிறதோ அதன்படி ஒரு மாநிலத் தலைவராக நான் நடந்து கொள்வேன். தமிழ்நாட்டில் இத்தனை தொகுதிகளை கேளுங்கள், அமைச்சரவையில் பங்கு கேளுங்கள் என்று காங்கிரஸ் தலைமையில் இருந்து எனக்கு எந்த அழுத்தமும் வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.