புதினப் படைப்பில் புகழ் எய்திய ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி அவர்கள், “அவர் உலகானுபவம் என்னும் கலாசாலையில் முற்றுமுணர்ந்த பேராசிரியர், என்பதில் சந்தேகமில்லை. பாமர ஜனங்களை வசப்படுத்தும் ஆற்றல் தமிழ்நாட்டில் வேறெவரையும் விட அவருக்கு அதிகம் உண்டு. எங்கிருந்துதான் அவருக்கு அந்தப் பழமொழிகளும், உபமானங்களும், கதைகளும், கற்பனைகளும் கிடைக்கின்றவோ! தமிழ்நாட்டில் இராமசாமியாரின் பிரசங்கம் ஒன்றை மட்டுந்தான் மூன்று மணி நேரம் உட்கார்ந்து கேட்க முடியும் என்று தயங்காமல் கூறுவேன்” என ஒளிவுமறைவு செய்யாமல் 1931இல் ‘ஆனந்த விகடன்’ வழி உலகிற்குப் பறையறைந்தார்.
“பெண்ணுரிமை பற்றிச் சிந்திப்போர் – பேசுவோர் எழுதுவோர் எவரும் பெரியார் அவர்களை விட்டுவிட்டு எவ்வகை முயற்சியிலும் ஈடுபடமுடியாது” எனவும், “பெரியாரின் பெண் விடுதலைக் கருத்துகளால் பாதிக்கப்பட்டுத்தான் முற்போக்காகச் சிந்தித்து எழுதத் தொடங்கினேன்” எனவும் எழுத்தாளர்கள் மாலன் உஷா சுப்பிரமணியம் போன்றவர்கள் ஊடகங்களின் வாயிலாக மெய்யுரைப்பதை நாம் காண்கிறோம்.
ஏ.எஸ்.கே. அய்யங்கார் (பிற்காலத்தில் அய்யங்கார் எனும் சாதிப் பெயரை நீக்கிக் கொண்டவர்) என்பார் பெரியாரை முழுமையாகப் படம் பிடித்துக் காட்டும் வகையில், “பகுத்தறிவின் சிகரம் பெரியார்” என்னும் பெயரில் ஒரு நூலையே யாத்து வழங்கினார்!
தமிழக மக்கள் மட்டும் அல்லர்; கிட்டத்தட்ட இந்திய மாநிலங்கள் அனைத்திலும் வாழ்ந்த பொது வாழ்வுத்தலைவர் களெல்லாரும் வாயாரப் பெரியாரைப் பாராட்டினர்; இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் தலைவர்கள் மனந்திறந்து புகழ்வதை நாம் நேரடியாகத் துய்த்துக் கொண்டிருக்கிறோம்.
பெரியாரின் ஒரு நாள் நடவடிக்கைகளைத் திரைப் படமாக்கும் நோக்குடன் கேரளப் படைப்பாளர் ராமுகாரியத் எனும் அறிஞர், “பெரியார் வைக்கத்தில் நடத்தி வெற்றி பெற்ற போராட்டத்தின் பின்விளைவுதான் தீண்டத் தகாதோர் என ஒதுக்கி ஒடுக்கப்பட்ட ஈழவக் குடியில் பிறந்த நான் இன்று புகழ் தோய்ந்த கலைப்புலமையாளராகப் போற்றப்படும் சூழ்நிலை! அதன் பொருட்டு என் நன்றியுணர்வினை வெளிக்காட்டும் முறையிலேயே அவரின் ஒரு நாள் வாழ்க்கைப் படப்பிடிப்பு முயற்சி” எனச் செய்தியாளரிடையே அறிவித்து, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
1970களில் மராட்டிய தலித் இயக்கத்தின் அடிநாள்களில், அவ்வியக்கத் தலைவர் செய்தியாளர்களிடம் அவ்வியக்கத்தின் கட்டுக்கோப்பான ஒற்றுமையுணர்வுக்கும் துணிச்சலான நடவடிக்கைகளுக்கும் அடிப்படைக் காரணமாகப் பெரியாரின் வடபுலச் சுற்றுப் பயணவுரைகளையும் அவர் நேருரையாக உணர்த்திய அறிவுரைகளையும் குறிப்பிட்டமை எத்துணை அரிய செய்தி!
கருநாடக மாநில முதல்வர் தேவராஜ் அர்ஸ், அமைச்சர் பசவலிங்கப்பா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிறீராமுலு, எஸ்.எம். சந்திர சேகர், இதழாளர் வி.டி. இராஜசேகர், பல்கலைக்கழகப் பேராசிரியர் நரசிம்மையா போன்றோர் பெரியாரின் தொண்டறம் பற்றி – அடடா, எவ்வாறெல்லாம் பாராட்டினர்!
பஞ்சாப் மாநிலச் சிந்தனையாளர் சந்த்ராம் என்பார், பெரியாரின் 1972ஆம் ஆண்டு பிறந்த நாளின் போது அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், “பெரியாரும் அண்ணாவும் எங்கள் கண்களிலேயே இருக்கிறார்கள். தாழ்ந்தோரின் ஏற்றத்திற்காகவும் பார்ப்பனியத்தின் வீழ்ச்சிக்காகவும் பாடுபடும் பெரியாரின் சேவை மகத்தான சேவையாகும் எனக் குறித்திருந்தார். (விடுதலை: 29-9-1972).
வங்கத்துச் சிந்தனையாளர் புகழ்தோய்ந்த எம்.என்.ராய் அவர்கள் கல்கத்தாவில் ஏற்பாடு செய்த மாநாட்டிற்குப் பெரியாரை அSைhot onealmeஃனுடைய நாத்திக ஆசான்” என மக்கமிடம் அறிமுகம் செய்த நிகழ்ச்சி ஆழமான பொருள் புதைந்ததாகும்.அமெரிக்க வரலாற்றறிஞர் ஜான் ரெய்லி என்பார் “கழிந்த இரண்டாயிரத்து அய்நூறு ஆண்டுகளில் தென்னிந்தியாவில் ஒரு பெரும் சமுதாயப்புரட்சி நிகழ்ந்துள்ளது. அதை நிறைவேற்றிக் காட்டியவர் பெரியார் இராமசாமி. இதுவே இந்நாட்டின் மூத்த பேராசிரியர்கள் அனைவரின் ஒட்டு மொத்த கருத்து” (“The one and only opinion of all the senior Professors of the United State of America”) என ‘ஆனந்த விகடன்’ துணையாசிரியர் மணியன் அவர்களிடம் நேருரை நிகழ்த்தியமை, எந்த அளவிற்குப் பெரியார் ஞாலப் புகழெய்தினார் என்பதற்கோர் அசைக்க வொண்ணாத சான்று.
இங்கிலாந்து நாட்டு ஃபிலிப்ஸ் ஸ்ப்ராட் என்னும் பயணப் பட்டறிவாளர், “பேரறிவாளர்கள் பெரும்புலவர்கள் என்போர் தோல்வியுற்ற இடத்தில் பெரியார் வெற்றி நாட்டினார். அதற்காக அவர் வற்புறுத்திய அடிப்படைக் கோட்பாடுகள் பகுத்தறிவு, தமிழினம் என்பவையாகும்” என அவர் அறுதியிட்டிருப்பது ஆழ்ந்த தீர்ப்பு எனலாம். (The D.M.K. in power” by Philip Spratt).
(பெரியார்ப் பேருரையாளர் அ.இறையன் அவர்கள் எழுதிய ‘இதழாளர் பெரியார்’ நூலிலிருந்து)