‘‘தந்தை பெரியார்–இனப்பகையைச் சுட்டெரிக்கும் பெருநெருப்பு’’
– நமது முதலமைச்சர் கருத்துப் பதிவு!
கழகத் தலைவரின் தந்தை பெரியார் பிறந்த நாள் வாழ்த்து அறிக்கை
தமிழினத்தின் எழுச்சிக்கான பேரொளி தந்தை பெரியார் பிறந்த நாளில் அனைவருக்கும் பெரியார் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
இன்று (17.9.2025) அறிவாசான் தந்தை பெரியார் அவர்களது 147 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா! திருவிழா – அகிலமெங்கும்!!
‘‘பெரியார் உலகமயமாகி வருகிறார்!
உலகம் பெரியார் மயமாகி வருகிறது!’’
பெரியார் ஒரு பேராயுதம் – அறிவுப் போர் ஆயுதம்!
அறிஞர் அண்ணாவால், திராவிட அரசு பெரியாருக்குக் காணிக்கையாக அர்ப்பணிப்பு!
கலைஞர் ஆட்சியில் அது பல்துறைகளிலும் உறுதியாக்கப்பட்டது.
அனைவருக்கும் தந்தை பெரியார் பிறந்த நாள் வாழ்த்து – இன்று சமூகநீதி நாள் உறுதியேற்பு!
இன்றைய நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ‘திராவிட மாடல்’ ஆட்சி என்ற உலகப் புகழ் ஒளிவீசிடும் ஆட்சியில், பெரியார் பிறந்த நாள் செப்டம்பர் 17 என்பது ‘‘சமூகநீதி நாளாக’’ அரசின் ஆணையிட்டார். அனைவரும் சமூகநீதி உறுதி ஏற்கும் உன்னதம் கண்டது!
ஆனால், அவரது கொள்கை எதிரிகள் ‘மறைந்தும் மறையாதவர் அவர்’ என்று ஒப்புக்கொண்டதன் அடையாளமே, சிலையாக உள்ள நிலையிலும், அச்சத்தினால் அலறுகின்றனரே!
அவமானம் சுமந்த தமிழ்நாடு, தன்மான பூமியாகத் தலைநிமிர்ந்து, தந்தை பெரியார் தந்த சுயமரியாதை மானிட உலகின் மகத்தான அடையாளமாகி வருகிறது!
எதனால்? எதனால்?
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன் (குறள் 294)
அதனால், பெரியாரைப் பேணித் தமராக்கொண்டு உவகை அடைகின்றனர் – பகுத்தறிவாளர்களும், மனிதநேயர்களும்!
மகத்தான அந்தச் சமூக விஞ்ஞானியின் தொண்டறம் வென்று வருகிறது!
‘பேசு சுயமரியாதை உலகு’ அமைகிறது!
முதலமைச்சரின் வைர வரிகள்!
நமது ‘திராவிட மாடல்’ முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று (17.9.2025) குறிப்பிட்டுள்ள வைர வரிகள் வருமாறு:
‘‘தந்தை பெரியார் – இனப்பகையைச் சுட்டெரிக்கும் பெருநெருப்பு!
தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி!
தந்தை பெரியார் என்றும் – எங்கும் நிலைத்திருப்பார்!’’
இது ஒரு நிரந்தர வரலாற்று உண்மை – நம் மக்கள் நீடுதுயில் போக்கும் நெடியதோர் உண்மை!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
17.9.2025