95 வயது வரை வாழ்ந்த தந்தைபெரியாருக்கு ‘பெரியார் உலகம்’ அமைத்திட 92 வயதில் அயராது உழைக்கும் தமிழர் தலைவரின் பயணம்

7 Min Read

உலகத்தலைவர் தந்தை பெரியார் உலகமாயமாகிறார் என்ற கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவிப்பு வந்தாலும் வந்தது,  அடேயப்பா கழகத் தோழர்களின் உணர்ச்சி ப்பெருக்கு அதை செயல்வடிவம் கொடுக்கும் விதமாக பெரியார் உலகத்திற்கு பொதுமக்களிடையே நிதி ஆதாரத்தை திரட்டும் பணியில் நம்மால் பார்க்க முடிகிறது என்று சொல்வதை விட பார்க்க முடிந்தது என்றே சொல்லலாம். ஆம்!

திராவிடர் கழகம்

நம் உயிரனைய தலைவர் இலட்சோப இலட்சம் கழகக் குடும்பங்களின் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள்  கடந்த 13,14 ஆகிய இரண்டு நாட்கள் தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.  13- 09-2025 அன்று அதிகாலை 5 மணியளவில் தனது இல்லத்தில் இருந்து வேலூர் நோக்கி புறப்பட்டார். அவருடன் அய்யா அவர்களின் வாழ்விணையர் திருமதி மோகனா அம்மையாரும் உடன் வந்தார்கள். அன்று காலை சரியாக  8.15 மணிக்கு வேலூர் வந்தடைந்த கழகத் தலைவர் அவர்களை மாநில  ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெயராமன் தலைமையில் மாவட்ட கழக தலைவர்  வி.சிவக்குமார் மற்றும் தோழர்கள் அன்பொழுக வரவேற்றனர். காலை உணவு முடித்து ஆம்பூர் நோக்கி பயணம் துவங்கும் முன்பு திருமதி  கலைமணி பழனியப்பன், மருத்துவர் , ஜெகன் பாபு மற்றும் குடும்பத்தினர் பெரியார் உலகத்திற்கு நிதியை வழங்கினர்.  தொடர்ந்து வாணியம்பாடி மாராப்பட்டு பகுதியில் நடைபெற்ற சுயமரியாதைச் சுடரொளி மீரா ஜெகதீசன் நினைவேந்தல் நிகழ்வுகளில் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரை நிகழ்த்தி அம்மையாரின் படத்தினை திறந்து வைத்து உரை நிகழ்த்தினார்.

அந்த மேடையில் திருப்பத்தூர் மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் குடும்பத்தினர் மற்றும் மாவட்ட செயலாளர் பெ.கலைவாணன்  ஆகியோர் நிதிகளை வழங்கி மகிழ்ந்தனர். அந்த நிகழ்வு முடிந்து மதியம் 1. 15 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.30 மணிக்கு கிருஷ்ணகிரி  ஓட்டல் தமிழ்நாடு சென்று அடைந்தார் கழகத் தலைவர். அங்கே கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் வி.மதியழகன் மற்றும் மாவட்ட தி.மு.கழக முன்னணி நிர்வாகிகள், திராவிடர் கழக மாவட்ட  தலைவர் கி.திராவிடமணி தலைமையில் கழகத்தின் பொறுப்பாளர்கள் என மொத்தம் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆசிரியர் அவர்களை பட்டாடை, பயனாடை அணிவித்து வரவேற்று மகிழ்ந்தனர்.

திராவிடர் கழகம்

மதியம் 3 மணிக்கு உணவை முடித்து  சிறிய ஓய்வுக்கு பின் புறப்பட்ட கழகத் தலைவர் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.கழக செயலாளர் வி.மதியழகன் இல்லத்திற்கு சென்று அண்மையில் மறைந்த மதியழகன் தாயார்  உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அவர்தம் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து கலந்துரையாடி செய்தியாளர்கள் சந்திப்பையும் முடித்துக்கொண்டு  மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 7 மணிக்கு தருமபுரி நகர் வந்தடைந்தார். அங்கே  மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் ஏராளமான தொண்டர்கள் விண்ணதிர முழக்கமிட்டு வரவேற்றனர் தம் குடும்பத் தலைவரை!!  பிறகு கழகத் தோழர்களும் தலைவரை உடல் நலம் விசாரித்த வண்ணமிருந்து வரிசையாக வந்து கொண்டேயிருந்தார். நம் தலைவர் உடல் நலமின்றி சிகிச்சை முடிந்து வந்திருக்கிறார் என்று தெரிந்து ஏராளமான கழகத் தோழர்கள் குடும்பத்துடன் வந்து அய்யாவை பார்த்து விசாரித்து கழக ஏடுகளுக்கு  சந்தாக்களை வழங்கி மகிழ்ந்தனர்.

இரவு அங்கே உணவருந்தி தங்கி  மறுநாள் 14-09-2025 காலை தங்கியிருந்த விடுதியின் கூட்ட அரங்கில் மாவட்ட கழக தோழர்களை சந்தித்து ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைத்து அனைவரையும் விசாரித்தார் அய்யா அவர்கள்.

திராவிடர் கழகம்

பெரியார் உலகத்திற்கு தோழர்கள் ஆசைத்தம்பி, சேலம் மாவட்ட காப்பாளர் பழனி.புள்ளையண்ணன், தருமபுரி மக்களவை தொகுதி மேனாள் உறுப்பினர் பா.ம.கட்சியை சார்ந்த சீரிய பகுத்தறிவாளர் மருத்துவர் செந்தில்- தங்கம் இணையர்கள் ஆகியோர் பெரியார் உலகத்திற்கான நிதியை வழங்கினர். மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெயராமன்- மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி இணையரின் 45 ஆம் ஆண்டு மணநாளினையொட்டி அவர்களுக்கு கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.   தொடர்ந்து ஏராளமான கழகத் தோழர்கள் பெரியார் உலகத்திற்கு நிதிகளை தந்த வண்ணமிருந்தனர். அதை முடித்து அங்கிருந்த புறப்பட்ட கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் அண்மையில் மறைந்த தருமபுரி மாவட்ட மேனாள் தி.மு.க. செயலாளரும், மேனாள் சட்டப்பேரவை உறுப்பினருமான முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் ஆர்.சின்னச்சாமி இல்லம் சென்று அன்னாரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவர்தம் குடும்பத்தினருக்கு தமது ஆழ்நத் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டு விடைபெற்றார். மதியம் 12.20 க்கு  அங்கிருந்து புறப்பட்டு அரூர்‌ நகர் தங்கும் விடுதிக்கு வந்து போது மணி மதியம் 1.15. அங்கே  மாவட்ட திராவிடர் கழக தலைவர் வேப்பிலைப்பட்டி தமிழ்ச்செல்வன் தலைமையில் ஏராளமான கழகத் தோழர்களும்,  மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவரும், தி.மு.கழக ஆதி திராவிடர் நலக்குழு மாநில துணை செயலாளருமான சா.இராசேந்திரன் நகர்மன்ற தலைவர் சூரியா தனபால் , மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கவிதா மோகன் உள்ளிட்ட ஏராளமான தி.மு.கவினரும், வி.சி.க. தோழர்களும் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர்.  அன்று மதியம் திரு.சா.இராசேந்திரன் இல்லத்தில் கழகத் தலைவருக்கு உணவுடன் கூடிய உபசரிப்பு வரவேற்பு நடந்தது.  அங்கு திரு. இராசேந்திரன், அவரது வாழ்விணையர் திருமதி மாலதி மற்றும்  இவர்களது  மகன் மருத்துவர் சிவராமன், மருமகள் மருத்துவர் விசாலினி இணையர் ஆகியோர் பெரியார் உலக நிதி வழங்கி கழகத் தலைவரின் அயராத தொண்டிற்கு மேலும் பெருமை சேர்த்தனர். பின்னர் சிறிது ஓய்வுக்கு பின் மாலை 5.30 மணிக்கு புறப்பட்ட கழகத் தலைவர் அவர்கள்  6 மணிக்கு பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையத்தில் நடந்த பெரியார் உலகம் நிதியளிப்பு பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

திராவிடர் கழகம்

அந்த நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்த தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மேனாள் அமைச்சர் பி.பழனியப்பன், திராவிடர் கழக மாநில கலைத்துறை செயலாளர் மாரி.கருணாநிதி , அவரது தந்தையார் மேனாள் பேரூராட்சி மன்றத் தலைவர் செங்கல் மாரி, தருமபுரி மாவட்ட மேனாள் தி.க. தலைவர் வீ.சிவாஜி, மகளிரணி தோழியர் சுதா ஆகிய தோழர்கள்  பெரியார் உலகம் நிதியினை வழங்கி நிகழ்வுக்கு மேலும் சிறப்பு சேர்த்தனர்.

பாப்பிரெட்டிப்பட்டி நிதி அளிப்பு விழா மற்றும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தை ஒட்டி நகரெங்கும் கழகக் கொடிகள் கட்டப்பட்டு மிகப்பெரிய அளவில் பறையிசை முழங்க பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கூட்டத்தை முடித்துக் கொண்டு இரவு 9 மணிக்கு புறப்பட்ட கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் வரும் வழியில் அரூர் புறவழிச்சாலையில் வழக்கம்போல பெட்ரோல் பங்கில் வாகனத்தை நிறுத்தி உணவருந்தி, உடல் நலன் காக்கும் மருந்துகளை எடுத்து முடித்து சென்னை நோக்கி பயணமானார்கள்.   இரண்டு நாட்களில்  வேலூர், வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, தருமபுரி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி என ஆறு நகரங்களில் சுமார் 750 கி.மீ சுற்றுப்பயணம் செய்திருக்கிறார் ஆசிரியர். தனக்கு வயது 92 என்ற எண்ணம்  துளியும் அவருக்கில்லைதான்.  இத்தனைக்கும் தொற்று காரணமாக காது அறுவை சிகிச்சை முடிந்து ஒரு மாத காலத்தில் ஒரு சூறாவளிப்பயணத்தை முடித்திருக்கிறார். எதற்காக? பெரியாரை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே! என்று‌ எப்போதும் சொல்வாரே அந்த தந்தை பெரியார் பெயரில் அமையவிருக்கும் “பெரியார் உலகத்திற்கு’’ நிதி ஆதாரத்தை திரட்டிடத்தான் இந்த பயணம். இதில் மற்றுமொரு சிறப்பு.

திராவிடர் கழகம்

இந்த இரண்டு நாட்களில் மூன்று நினைவேந்தல் நிகழ்வுகள், ஒரு மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்,  ஒரு மணநாள் நிறைவு நிகழ்ச்சி, குழந்தைக்கு பெயர் சூட்டல், நிதி அளிப்பு பொதுக்கூட்டம், என பல்வேறு நிகழ்ச்சிகளில் கழகத் தலைவர்  தனது உடல்நலத்தைப் பற்றியும் கவலலைப்படாமல் பல சிரமங்களையும் சகித்துக் கொண்டு பெரியார் பணி முடிக்க பெரும் பயணம் செய்திருக்கிறார்.

ஆங்காங்கே கழகத் தோழர்கள் மற்றும் தோழமை கட்சியினர் சந்திப்பு, செய்தியாளர்கள் கூட்டம் என அடுக்கடுக்காக அடுத்தடுத்து தொடர் நிகழ்வுகள். இத்தனையும் இரண்டு நாட்களில்!! சாத்தியமா இது என்று கேட்கலாம். அது மற்றவர்க்கு! நம் தலைவர்க்கு என் கடன் பெரியார் பணி செய்து முடிப்பதே!! என்ற உள்ள உறுதி. அதனால்தான் மானம் பாராத தொண்டினை, காலம் பார்க்காமல், பருவம் கருதாமல், தன்நலம் சாராமல் பொது நலம் கருதி திராவிடப் பகை முடிக்க, பெரியார் பணி முடிக்க அயராது உழைக்கும் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு வரும் டிசம்பர் 2ஆம் நாள் 93 வயது. பல்லாண்டு, பல நூறாண்டு வாழ வாழ்த்துகிறோம் என்பது அவரது தொண்டிற்கு தொண்டர்களாகிய நாம் அவருக்கு உறுதுணையாக இருப்போம் என்று உறுதியேற்று பணி முடிப்போம் வாரீர்
வாரீர்..

திராவிடர் கழகம்

குடிசெய்வார்க்கில்லை பருவம் மடி செய்து மானம் கருதக் கெடும் என்ற  வள்ளுவரின் குறள் ஒன்று தான் தந்தை பெரியாருக்கு மிகவும் பிடித்த குறள் என்று ஆசிரியர் அடிக்கடி சொல்வார்கள். யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ ஆசிரியருக்கு நூறு விழுக்காடு அப்படியே பொருந்தும்.

பெரியார் உலகம் அமைப்போம்!

பெரியார் பணி முடிப்போம்!

தொகுப்பு: தி.என்னாரெசு பிராட்லா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *