சென்னை, செப்.16 பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 17 ஆம் தேதி, தமிழ்நாட்டின் “சமூகநீதி நாள்” என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைத் தமிழ்நாடு அரசு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.
உறுதிமொழி எடுக்கும் திட்டம்
தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17 அன்று, அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் தந்தை பெரியாரின் படம் வைக்கப்பட்டு, மரியாதை செலுத்தப்படும். அதைத் தொடர்ந்து, அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சமூகநீதி நாள் உறுதிமொழியை எடுத்துக்கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிகழ்வை முறையாகக் கடைப் பிடிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு சார்பில் அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, தமிழ்நாட்டின் சமூகநீதி கொள்கையை மீண்டும் வலியுறுத்துவதோடு, தந்தை பெரியாரின் சிந்தனைகளைப் புதிய தலைமுறை யினரிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
தந்தை பெரியார் பிறந்த நாள்
“சமூக நீதி நாள் உறுதிமொழி”
“சமூக நீதி நாள் உறுதிமொழி”
- பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும் யாதும் ஊரே யாவரும் கேளிர் எனது என்ற பண்பு நெறியும் வாழ்வியலில் கடைப்பிடிப்பேன்!
- வழிமுறையாகச் சுயமரியாதை, பகுத்தறிவு ஆளுமைத்திறனும், கூர்மைப் பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்!
- சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன்!
- மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது இரத்த ஓட்டமாக அமையும்!
- சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன்.
என்று சுற்றிக்கையில் குறிப்பிடப்பட் டுள்ளது.