சேலை அணிவதில் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்

– அருள் வல்லரசி

ஆடைகள் ஆரம்பத்தில் வெயிலிலும் குளிரிலும் உடலைப் பாதுகாப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டன. ஆனால் பின்னர் அவை செல்வச் செழிப்பைக் காட்ட பயன்பட்டன. அரசனுக்கு ஒரு வகையான ஆடை. சாதாரணக் குடிமகனுக்கு ஒரு வகையான என ஆடை வகைப்படுத்தப்பட்டது. இன்று அரசன் ஆண்டி என்ற வகைப்பாடு இல்லாவிட்டாலும் சமுதாயத்தால் மதிக்கப்படும் ஆடை, மதிக்கப்படாத ஆடை என்ற வகைப்பாடு உள்ளது.

‘திருமண விழா என்றாலே பட்டுச் சேலை தான் அணிய வேண்டும்’ என்பதே பெண்கள் மனதில் மரியாதையும் பெருமையும் அளிக்கும் ஓர் உளவியல் உருவாக்கமாகச் சமுதாயம் விதைத்துவைத்துள்ளது. “சேலைதான் நம் கலாச்சாரம்” என்ற எண்ணத்தை நிலைநிறுத்தும் முயற்சியாகவே இந்தக் கருத்து தொடர்ந்து ஊட்டப்படு கின்றது.

15, 20 ஆண்டுகளுக்கு முன் தாவணிதான் மாணவிகளின் சீருடையாக இருந்தது. அப்போது தாவணியால் மாணவியருக்கு ஏற்படும் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, அப்போது பரவலாகி வந்த சுடிதார் சீருடையாக அறிமுகப்படுத் தப்பட்டது.

ஆனால், பெண் ஆசிரியர்களுக்கு அந்த விதிமுறை பொருந்தவில்லை.

18 வயதைக் கடந்த பெண்கள் மீது ஏற்றப்படும் கலாச்சாரச் சுமைகளில் ஒன்றாகவே சேலை அமைகிறது. ஆண்கள்  வேட்டி அணியாத போது அழியாத கலாச்சாரம். பெண்கள் சேலை அணியாத போது அழிந்து விடுவதாகச் சொல்லப்படுகிறது.  பெண்கள், சேலையை ஒரு மானசீகக் கட்டுப்பாடாக ஏற்கச் செய்வதற்காகவே, சமூகம் அதன் சிறப்பைப் புகழ்ந்து பேசுகிறது. அதை மனதார ஏற்றுக் கொள்கிற பெண்கள், சேலை அணிவதைப் பெருமையாய் கருதுகிறார்கள்.

‘சேலைதான் கலாச்சாரம்’ என மார்தட்டிப் பேசும் சில பெண்களே, தங்கள் வீடுகளில் சேலையை அணிய விரும்புவதில்லை. சேலை அணியாத பெண்களைக் குறை கூறும் சேலை அணிந்தவர்களின் மனதுக்குள், “ஒரு பெண் மதிக்கப்பட வேண்டுமெனில் அவள் சேலை அணியவேண்டும்” என்ற ஆணாதிக்க மனோநிலை இயல்பாகவே பதிந்துள்ளது. உண்மையில், சேலை என்பது நைட்டி, சுடிதார் போன்ற ஓர் ஆடை வகைதான்.

ஆனால், சமூகம் சேலையை உன்னதமாக்கச் செய்வதற்காக, அதனைச் சுற்றிப் புகழ்ச்சி வார்த்தைகளைத் தெளித்து அதன் மீது ஒரு கலாச்சார மரியாதையை கட்டியெழுப்புகிறது.

சேலை அணிவதில் ஏற்படும்
நடைமுறைச் சிக்கல்கள்:

நடப்பதில் சிரமம் / இயக்கக் கட்டுப்பாடு

சேலையின் மடிப்புகள் கால்கள் சுதந்திரமாக நகர்வதைத் தடுக்கும். வேலை, படிப்பு, பொது இடங்களில் சுறுசுறுப்பாக இயங்க வேண்டிய பெண்களுக்கு இது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. இதனால், படி ஏறுவது, விரைவாக நடப்பது, வாகனங்களில் ஏறி இறங்குவது போன்ற அன்றாட இயக்கங்கள் கூட சிரமமாக மாறுகின்றன. இது நேரடித் திறன் குறைபாட்டையும் (Reduced efficiency) உடல் சோர்வையும் (physical fatigue) உண்டாக்கும்.

பேருந்து பயணத்தில் சேலை அணிந்த பெண்களுக்கு ஏற்படும் பாதுகாப்புப் பிரச்சினைகள்

  • சேலை அணிந்த பெண்கள் பொது இடங்களில் — குறிப்பாக பேருந்துகளில் முந்தானை அல்லது முன்புறம் திரியும் துணியைச் சரியாகப் பிடிக்க முடியாமல் தடுமாறுவார்கள். பஸ்களில் நிற்கும் போது, உயரமான கைப்பிடிகளைப் பிடிப்பதில் சேலை அணிந்த பெண்களுக்கு சிரமம் ஏற்படும். அதனால், நிமிடத்துக்கு நிமிடம் சமநிலையில் நிலைநிறுத்தப்படாமல் தடுமாறுதல், சறுக்குதல் போன்ற ஆபத்துக்கள் உண்டாகும்.
  • மேலும், பேருந்துகள், தொடர் வண்டிகள் போன்ற பொது இடங்களில், பின் இருக்கையில் நிற்கும் சில இளைஞர்கள் பெண்களை எதிர்பாராமல் படம் பிடிக்காவோ, நோட்டமிடவோ செய்கிறார்கள். இது அவர்களுக்குப் பாதுகாப்புக் கவலைகளை ஏற்படுத்துகிறது.

உயரமான பெண்களுக்கு ஏற்ற அகலம் இல்லாத சேலை

பெரும்பாலும் சந்தையில் கிடைக்கும் சேலைகள் அகலம் (width) சுமார் 1.1 (44 அங்குலம்) மட்டுமே இருக்கும். இந்த அளவு பெரும்பாலும் குறைந்த உயரம் அல்லது நடுத்தர உடல் அமைப்புடைய பெண்களுக்கு ஏற்றதாக இருந்தாலும், உயரமான பெண்களுக்கு இது போதுமானதாக இல்லை. சேலை போதுமான அகலத்தைப் பெற்றிராததால், உயரமான பெண்களுக்குச் சேலை முழுமையாகச் சுற்றிக் கட்டுவது சிரமமாக இருக்கும்.   இதனால், உயரமான சில பெண்கள் சேலை கட்டும்போது ‘லோ ஹிப்’ (இடுப்புக்குச் சற்று இறக்கிய) முறையில் அணிய நேரிடுகிறது. ஆனால் சமூகத்தில் இதைப் பற்றிச் சரியான புரிதல் இல்லாமல், சில நேரங்களில் விமர்சனமும், தவறான அணுகுமுறையும் காணப்படுகிறது.

துணியின் தன்மையில் சிக்கல்கள்

சேலை உடலைச் சுற்றி 2-3 மடங்காக கட்டப்படுவதால், அடுத்து உள்ள துணிப் பகுதிகளுக்கு இடையில் உராய்வு (friction) அதிகமாக ஏற்படுகிறது.

இதனால், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களை ஓட்டும் போது, சேலை அசந்து தடுமாறும் அபாயம் உள்ளது.   பருத்தில் சேலையில் இந்த அபாயம் குறைவென்றாலும், பருத்திச் சேலைகள் பராமரிப்பு மற்றும் கையாளலில் பல சிரமங்களை ஏற்படுத்தும்.

வயிற்றுப் பகுதி தெரியக்கூடிய தோற்றம் (Midriff Insecurity)

சேலை வடிவமைப்பு இயல்பாக வயிற்றுப் பகுதியை வெளிப்படவைக்கும் விதமாக இருக்கும்.  இருந்தாலும், சமுதாயத்தின் நம்பிக்கைகளுக்கும் மற்றும் அழுத்தங்களுக்கும் ஏற்ப, அவள் அந்தப் பகுதியை மறைக்க வேண்டும். ஏனெனில், வயிற்றுப் பகுதி தெரிந்தால், சிலர் அவளை நடத்தை சரியில்லை என்று விமர்சித்து விடுவார்கள். இதுவே பெண்களின் ஆழ்ந்த மன அழுத்தங்களையும், உடல் தன்னம்பிக்கையின்மையையும் ஏற்படுத்துகிறது. அதற்காக, சேலை அணியும்போது  அதனதன் இடத்தை நிலைப்படுத்தவும், வயிற்றுப் பகுதியை மெல்லிய வகையில் மறைக்கவும், 10 முதல் 20 வரை பாதுகாப்பு ஊக்குகள் (safety pins) பயன்படுத்துவது அவசியமாகிறது. அத்தனையும் தேவை இல்லாத ஆணி.

அதிக நேரம் சேலை அணிவதில் ஏற்படும் சிரமங்கள்

வேலை, பயணம் அல்லது நீண்ட நேரம் நீடிக்கும் நிகழ்ச்சிகளில் சேலை அணிந்து இருப்பது, பெண்களுக்கு உடல் சோர்வையும் மற்றும் மன உளைச்சளையும் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. பல்லு மற்றும் மடிப்புகள் இடமாற்றம் ஆகாமல் இருக்க, அதனை அடிக்கடி சீரமைக்க (adjust) வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இது தொடர்ந்து கவனத்தைத் தேடும் செயலாக இருப்பதால், மன அழுத்தத்தையும் சோர்வையும் உருவாக்குகிறது. குறிப்பாக வேலைச் சூழலில் அல்லது பயணத்தின் போது, சேலையை அடிக்கடி சரிசெய்வது, வேலையின் ஓட்டத்தையும், நேர மேலாண்மையையும் பாதிக்கிறது.

மேல் சட்டை (Blouse) தொடர்பான சிக்கல்கள்

  • இறுக்கமாக அமைந்த மேல் சட்டை, பெண்களின் முழு இயக்கத்தையும் தடுக்கக்கூடும். இதனால் பெண்கள் கைகளை நிமிர்த்த, சாய, அல்லது மேலே உயர்த்த முடியாத நிலை ஏற்படுகிறது. குறிப்பாக, வேலைச் சூழலில் நீண்ட நேரம் அமர்ந்து பணிபுரியும் பெண்களுக்கு, இது சோர்வையும் வலியையும் ஏற்படுத்தும்.
  • மேல் சட்டை மிகவும் இறுக்கமாக இருப்பதால் அசவுகரியம் அதிகமாக இருக்கும். மூச்சு விட சில சமயம் சிரமம் ஏற்படும். மிகவும் இறுக்கமாக இருக்கும் மேல் சட்டையை நீண்ட நேரம் அணிந்து இருப்பது, குறிப்பாக சுவாச கோளாறு (asthma, bronchitis போன்றவை) அல்லது இருதயப் பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்தும். பெண்கள் தளர்வான உடையை அணியத் தடை செய்யப்பட்டுள்ள இடங்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் நிலை என்ன? (எடுத்துக்காட்டாக ஆசிரியர்கள்)
  • பெண்கள் வயது போக்காலோ அல்லது ஹார்மோன்களின் காரணமாகவோ உடல் அளவில் ஒரே ஒரு இன்ச் அதிகமானால் கூட, அந்த சட்டை அவர்களது உடலில் அதிக இறுக்கத்தையும் வலியையும் தரும். சுவாசிக்கத் தடையாக மாறி, சுதந்திரமாக நகரவோ, சாயவோ கூட முடியாமல் அவர்களை நெருக்கடிக்குள்ளாக்கும்.

சேலை பாவாடை அணிவதில் ஏற்படும் சிக்கல்கள்

  • இயல்பான நடையில் சிரமம்

சேலை அணிவதால் பெண்களின் இயல்பான நடையில் மாற்றம் ஏற்படுகிறது. கால்களைச் சுதந்திரமாக நகர்த்த முடியாததால், இயல்பானநடை குறைந்து, அதற்குப் பதிலாக நடை சுருங்கி, வேகம் குறைந்து கட்டுப்படுத்தி நடக்க வேண்டி இருக்கும்.

  • சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை சிக்கல்கள்:

வேலை அல்லது விழாக்களில் நீண்ட நேரம் சேலை, பாவாடை அணிந்து இருப்பதால், வெப்பம், ஈரப்பதம் குறைவு அல்லது அதிக ஈரப்பதம் போன்ற சூழ்நிலைகள் காரணமாக அவுகரியங்கள், சளி, வறட்சி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

  • பாவாடை வியர்வையில் ஒட்டிக்கொள்ளுதல்:

வியர்வை அதிகமாக இருக்கும் போது, பாவாடை உடல் மற்றும் காலுக்கு நெருக்கமாக ஒட்டிக்கொள்ளும் தன்மை கொண்டது. இதனால் பாவாடை கால்களுக்குள் சிக்கி நடக்கக் கடினமாகிறது. நீண்ட வேலைநேரங்களிலும், பயணம் அல்லது நீண்ட நேர நிகழ்வுகளிலும் பாவாடை வியர்வை காரணமாக ஒட்டிக்கொண்டு இருப்பது பெண்களின் செயல்திறனை குறைக்கும், மன அழுத்தத்தையும் உண்டாக்கும்.

சேலை என்பது தமிழ்நாட்டின் மற்றும் தென்னிந்தி யாவின் முக்கியக் கலாச்சார ஆடை என்று கொண்டாடப் படுகிறது. ஆனால், சேலை அணிவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் உடல் நல பிரச்சினைகள் சமுதாயத்தின் கவனத்திற்கு வர வேண்டிய அவசியம் உள்ளது.

சேலை அணிதலில் பெண்கள் எதிர்கொள்ளும் இயக்கத் தடைகள், பாதுகாப்பு பிரச்சனைகள், உடல் அளவிற்கு ஏற்ப ஏற்படும் அளவியல் சிக்கல்கள், துணித் தன்மையை சார்ந்த பிரச்சனைகள் மற்றும் ஆழ் மன அழுத்தங்கள் ஆகியவை கவனிக்கப்படாமல் உள்ளன.

இதனால், அரசு மற்றும் இதர வேலை நிர்வாகத்துறைகள், பெண்கள் சேலை அணிய வேண்டிய கட்டாயத்திலிருந்து விடுவிப்பதைப் பரிசீலித்து, வேலை நேரங்களில் மற்ற சுகாதாரமான, பாதுகாப்பான ஆடைகள் அணிய அனுமதிக்க வேண்டும். குறிப்பாக இது அரசு சாரா (Private teachers) ஆசிரியர்களுக்கும் பொருந்தும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *