‘‘அரிதார அரசியல் நீண்ட காலம் தாக்குப் பிடிக்காது!’’

3 Min Read

‘மக்கள் நலன்தான் தனக்கு முக்கியம்’ என்று
பிரதமர் மோடி பேசுவது, இரட்டைப் பேச்சு என்பது வெளிப்படை!
‘‘அரிதார அரசியல் நீண்ட காலம் தாக்குப் பிடிக்காது!’’

செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்

கிருஷ்ணகிரி, செப்.14 – ‘‘அரிதார அரசியல் நீண்ட காலம் தாக்குப் பிடிக்காது’’ என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

நேற்று (13.9.2025) கிருஷ்ணகிரிக்குச் சென்ற  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டிய ளித்தார். அப்பேட்டியின் விவரம் வருமாறு:

சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் தாயார் மறைவிற்கு மரியாதை செய்யவும், அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க வந்தேன். ஆறுதல் தெரிவித்துவிட்டுப் புறப்படுகிறேன்.

கிருஷ்ணகிரியில் இயக்கம் வேரூன்றுவதற்கு மட்டுமல்ல, அது விழுதுகளோடு பலத்தோடு இருப்பதற்கு…

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அவருடைய பணி என்பது ஒரு தலைசிறந்த பணியாகும். இந்தப் பகுதியில் திராவிடர் கழகம் வேரூன்றுவதற்கு மட்டுமல்ல, அது விழுதுகளோடு பலத்தோடு இன்றும் இருப்பதற்கு அவரைப் போன்றவர்களுடைய உழைப்பு இந்த இயக்கத்திற்குத் தேவைப்படுவது, நாளும் இயக்கத்தை வளர்க்கக் கூடியது.

எனவே, இந்த இயக்கம்தான், இன எதிரிகளிடமிருந்து எதிர்காலத்தில் தமிழ்நாட்டைக் காப்பாற்றப் போகின்ற இயக்கம் என்பதை ஒவ்வொருவருக்கும் உணர்த்தக் கடமைப்பட்டு இருக்கின்றோம்.

 ‘‘மணிப்பூரின் அமைதிக்காகப் பாடுபடுவேன், இது என்னுடைய வாக்கு’’- பிரதமர் மோடி!

செய்தியாளர்: மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு ஆண்டுகளாக பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. அப்போதெல்லாம் செல்லாத பிரதமர் மோடி, இன்றைக்கு மணிப்பூர் மாநிலத்திற்குச் சென்று, ‘‘மணிப்பூரின் அமைதிக்காகப் பாடுபடுவேன், இது என்னுடைய வாக்கு’’ என்று சொல்லியிருக்கிறாரே, இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: அதற்குப் பெயர்தான் மோடி. அது ஒரு மோடி வித்தையாகும். வழக்கமாக, வெள்ளமெல்லாம் வடிந்த பிறகுதான், அவர் ஆறுதல் சொல்லப் போவார்.

மணிப்பூரில் வன்முறை நிகழ்வுகளால் எத்தனையோ உயிர்கள் பலியாகியிருக்கின்றன. பெண்கள் நிர்வாணமாக ஆக்கப்பட்டு வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர்.

நாடாளுமன்றத்தினுடைய எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்பட அனைத்துக் கட்சியினரும் அங்கே சென்று மக்களைச் சந்தித்து ஆறுதல் சொல்லியிருக்கிறார்கள்.

சில தலைவர்கள், அந்தப் பகுதிக்குச் செல்லக்கூடாது என்று தடுக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இரட்டைப் பேச்சு என்பது வெளிப்படையாகத் தெரிகிறது!

அந்தக் காட்சியெல்லாம் முடிந்த பிறகு, இப்போது பிரதமர் மோடி அந்த மாநிலத்திற்குச் செல்கிறார் என்றால், மக்களுக்கும், பிரதமர் மோடிக்கும் எவ்வளவு நெருக்கம் என்பதை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். மக்கள் நலன்தான் அவருக்கு முக்கியம் என்று அவர் பேசுவது, இரட்டைப் பேச்சு என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

செய்தியாளர்:  கல்வி, மருத்துவம், மின்சாரம் இம்மூன்றுமே தி.மு.க. ஆட்சியில் மக்களுக்குத் தேவை யான அளவிற்குக் கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல், காலை சிற்றுண்டித் திட்டம், மதிய உணவுத் திட்டம் போன்ற குழந்தைகள் படிப்பதற்கானத் திட்டங்கள். மருத்துவத்தில், நலன் காக்கும் ஸ்டாலின், காப்பீடு திட்டங்கள் எல்லாம் இருக்கின்றன. ஆனால், திருச்சியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் இன்று (13.9.2025) சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். அந்தக் கூட்டத்தில் அவர், ‘‘கல்வி, மருத்துவம், மின்சாரம் போன்றவை தமிழ்நாட்டு மக்களுக்கு அத்தியாவசியமானவையாகும். அதை நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் செய்து தருவோம் என்று சொல்லியிருக்கிறாரே இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

வானத்திலேயே மின்சாரத்தை நான் தயாரிக்கப் போகிறேன் என்று சொன்னாலும் சொல்வார்!

தமிழர் தலைவர்: ஆட்சிக்கு வந்து அவர் செய்வது இருக்கட்டும்; முதலில், அவருடைய கட்சியின் கொள்கை என்ன? வேலைத் திட்டம் என்ன? அதை அவர் அறிவித்திருக்கிறாரா? அவற்றை முதலில் அவர் அறிவித்துவிட்டு, பிறகு இதை அவர் சொன்னால், நன்றாக இருக்கும்.

முதலாவது, சட்டமன்றம் எப்படி இயங்குகிறது? எதிர்க்கட்சியினுடைய  பங்கு, பணிகள் என்ன? திட்டங்கள் வகுப்பதற்கு எப்படியெல்லாம் அமைப்புகள் இருக்கின்றன; இவற்றுக்கும், அவருக்கும் எவ்வளவு தூரம் என்பதை அவர் நிரூபித்துக் காட்டவேண்டும்.

இந்தப் பணிகளுக்கெல்லாம் நெருக்கமாக, தொடர்புடையவராக அவர் இருந்தால்தான், அவர் கூறுவதில் பொருள் இருக்கும்.

ஆனால், அவருடைய கட்சியின் கொள்கை என்ன வென்றே அவர் சொல்லவில்லையே!

கொள்கையைச் சொல்லிவிட்டு, எல்லோரும் என்ன செய்தார்களோ, அதைவிட நான் அதிகம் செய்வேன் என்று சொல்லலாம்.

ஒருவேளை, வானத்திலேயே மின்சாரத்தை நான் தயாரிக்கப் போகிறேன் என்று சொன்னாலும் சொல்வார்.

ஆனால், அரிதார அரசியல் நீண்ட காலம் தாக்குப் பிடிக்காது.

– இவ்வாறு செய்தியாளர்களிடையே கூறினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *