திருச்சி, செப்.14– கல்வியுடன் திறமையையும் வளர்க்கும் நோக்கில், திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் நாகம்மையார் கலையரங்கம் 04.09.2025 காலை 10 மணியள வில் உற்சாகக் கொண்டாட்டமாக காட்சியளித்தது. பள்ளி முதல்வர் முனைவர் க.வனிதா அவர்கள் தலைமையில், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்ட 1 முதல் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கான, பன்முகத் திறன் நிகழ்ச்சி (டேலண்ட் ஷோ) பார்வையாளர்களின் மனங்களை கவர்ந்தது.
மொழி வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்வில், மூன்றாம் வகுப்பு மாணவி எஸ்.இஷா ஆராதனா வரவேற்புரையாற்றி வந்தோரை வரவேற்றார்.
மாணவர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்தும் இந்நிகழ்ச்சி, கல்வியின் எல்லைகளைத் தாண்டி, கலை, விளையாட்டு, சிந்தனை, தொடர்பு, உடல் நலம் போன்ற பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைக்கும் மேடையாக அமைந்தது.
ஒன்றாம் வகுப்பு மாணவர்கள்:
தமிழ் மற்றும் ஆங்கில மழலையர் பாடல்கள், உயிரெழுத்து சொற்றொடர்கள், கணிதப் புதிர்கள், யோகாசனம், வாய்ப்பாடு, எழுத்துகளை பின்னோக்கிக் கூறுதல், அபாகஸ் கணக்கு, உடல் உறுப்புகளின் பெயர்கள் போன்றவற்றில் அசத்தினர். குழந்தைகளின் பசுமையான முகமும், ஆர்வமிக்க பேச்சும், பார்வையாளர்களின் மனதை உருகச் செய்தது.
இரண்டாம் வகுப்பு மாணவர்கள்:
உணர்வுகளை வெளிப்படுத்தும் திறன், இரண்டின் மடங்குகள், அடுக்குத் தொடர் வரிசை, “உதவும் கரங்கள்; மகிழ்வான மனங்கள்” என்ற தலைப்பில் ஓரங்க நாடகம், திருக்குறள், இரக்க உணர்வைக் குறித்து தனிநடிப்பு போன்ற நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தின.
மூன்றாம் வகுப்பு மாணவர்கள்:
நீளம், உயரம், அளவைகள், வார நாட்கள், தமிழ் மாதங்கள், கணினிப் பாகங்கள், சாலைப் பாதுகாப்பு விதிகள், சமையலறை மருத்துவப் பொருட்கள், வடிவங்கள், திருக்குறள், கூட்டுக் குடும்பத்தின் பெருமை பற்றிய உரை உள்ளிட்ட தலைப்புகளில் திறமையுடன் மேடையேறினர். குழந்தைகள் எந்தவித தயக்கமுமின்றி நம்பிக்கையோடு பேசும் காட்சி, பெற்றோர்களை உணர்ச்சி வசப்படுத்தியது.
பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் மேடையில் அசத்தும் காட்சியைப் பார்த்து கண்கள் நனையும் அளவிற்கு மகிழ்ந்தனர். பலத்த கரவொலியுடன் அவர்களை ஊக்கப்படுத்தினர்.
இந்த பன்முகத் திறன் நிகழ்ச்சி, கல்விக்குப் பின் கலை, நாகரிகம், சமூகப் பொறுப்பு, உடல் ஆரோக்கியம், மனவள வளர்ச்சி ஆகியவற்றிலும் மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் ஒரு மறக்க முடியாத நாள் என அனைவராலும் பாராட்டப்பட்டது.
நிகழ்வின் நிறைவாக மூன்றாம் வகுப்பு மாணவர் பி.ஆரிஸ் அக்ரம் நன்றியுரையாற்ற, நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.
நிகழ்விற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் சிறப்பாக மேற்கொண்டு, மாணவர்களுக்கு அழகான மேடை, வசதியான
சூழல், உற்சாகமான நிகழ்ச்சி நிரல் ஆகியவற்றை வழங்கினர்.